Wednesday, November 28, 2012

விருச்சிகம் (விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)



விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய) 



விருச்சிக ராசி அன்பர்களே!

இதுவரை ஜென்ம ராசியில் இருந்த ராகு இப்போது 12-ஆம் இடத்தில் துலா ராசியிலும்; இதுவரை 7-ல் இருந்த கேது இப்போது 6-ஆம் இடம் மேஷ ராசியிலும் மாறுகிறார்கள். ஏற்கனவே ராகு- கேது இருந்த இடம் நல்லதா கெட்டதா என்ற ஆராய்ச்சிக்கு இடமில்லாத வகையில் 11-ஆம் இடத்தில் இருந்த சனி ராகுவையும் ஜென்ம ராசியையும் பார்த்து உங்களுக்கு எந்தத் தீங்குகளும் நேராதபடி பாதுகாத்தார். ஜென்ம ராகுவும் சப்தம கேதுவும் உங்களுடைய தேவைகளையும் ஆசைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றி வைத்தார்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணமும், புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கும், வீடுவாசல், வாகனம் இல்லாதவர்களுக்கும் மேற்படி யோகங்களையும் செய்தார்கள். குரு ஆறில் இருந்த காரணத்தால் இந்த யோகங்கள் எல்லாம் ஒருபுறம் நடந்தாலும் இன்னொரு புறம் கை முதலீடு இல்லாமல் எல்லாம் கடன் வாங்கியே செய்துவைத்தார்கள். மாணவர்களுக்கு படிப்பு யோகத்தையும்- படித்து முடித்தவர்களுக்கு வேலை யோகத்தையும் செய்தது மட்டுமல்ல; வேலைபார்த்த சிலரை- தொழிலாளியாக இருந்தவரை முதலாளியாகவும் உருவாக்கி வைத்தார்கள்.

இந்த ராகு- கேது பெயர்ச்சிக்குப் பிறகும் அந்த யோகம் தொடருமா? கடன்கள் அடைபட்டு வாக்கு நாணயத்தைக் காப்பாற்ற முடியுமா? வட்டிவாசியை ஒழுங்காகக் கட்டி முடிக்கமுடியுமா என்றெல்லாம் உங்களுக்கு இப்போது சந்தேகம் வரலாம். அதற்கு என்ன காரணம் என்றால், ராகு- கேது பெயர்ச்சிக்கு முதலிலேயே ஏழரைச்சனி வந்து விட்டதே. ராகு- கேது டிசம்பரில் மாறுவார்கள். ஏழரைச் சனி செப்டம்பரிலேயே தொடங்கிவிட்டது. 11-ஆம் இடத்துக்குச் சனி நல்லதைச் செய்தார். இப்போது 12-ஆம் இடத்து விரயச்சனியும், அவருடன் சேர்ந்துள்ள 12-ஆம் இடத்து ராகுவும் நல்லது செய்வார்களா? அல்லது கொடுத்ததைத் திருப்பி எடுத்துக்கொள்வார்களா? பறித்துவிடுவார்களா? இருப்பதை விரயம் செய்துதான் வாங்கிய கடன்களையெல்லாம் அடைக்க வேண்டுமா என்றெல்லாம் உங்களுக்கு கவலையும் சந்தேகமும் வரலாம். உங்கள் சந்தேகம் நியாயமானதுதான்.

ஆனால் ராகுவும் சனியும், ஜென்ம ராசியைப் பார்க்கும் குருவும் உங்களை கைவிட்டுவிட மாட்டார்கள். எப்படி? ராகு, கேது, சனி எல்லாம் பாபகிரகங்கள். அவர்கள் பாப ஸ்தானத்தில் இருந்தால் மைனஸ் ஷ் மைனஸ்= பிளஸ் என்ற மாதிரி நல்லது நடக்கும். அதாவது விரயம்- விரயம் ஆகிவிடும். திருநெல்வேலிக்கே அல்வாவா என்று சொன்ன மாதிரி! இல்லை என்பதே இல்லாமல் போய்விடுவது மாதிரி! அதிலும் விருச்சிக ராசிக்கு 12-ல் சனி உச்சம் என்பதால் விரயம் வரும் - ஆனால் வராது. அதாவது அந்த விரயம் சுபவிரயமாக மாறிவிடும். விரயத்தில் இரண்டு விதம்- ஒன்று சுபவிரயம், இன்னொன்று அசுப விரயம்! திருமணம், பிள்ளைப்பேறு, கல்விச் செலவு, வீடு கட்டும் செலவு, கோவில் பிரார்த்தனை செலவு, வாகனம் வாங்குவது, விழாக்கள், விருந்து கொண்டாவது எல்லா சுபச்செலவு. வைத்தியசெலவு, கோர்ட் செலவு, அரசு வகையில் தண்டம், தீர்வை கட்டுவது, ஆஸ்பத்திரி செலவு, திருடுபோவது, அரசியல் கட்சிக்கு விருப்பம் இல்லாமல் நன்கொடை கொடுப்பது இவையெல்லாம் வீண் விரயச் செலவு- தண்டச்செலவு. ஒரு தொழில்துறையில் முதலீடு செய்வது சுபச்செலவு.  கொள்முதல் பண்ணி பிறகு லாபத்தோடு விற்பனை செய்வது எல்லாம் லாப விரயம்!

மேலும் 2, 5-க்குடைய குரு 7-ல் அமர்ந்து ராசியைப் பார்க்கிறார். குடும்பத்துக்காகவும் பிள்ளைகளுக்காகவும் ஏற்படும் செலவும் சுபச்செலவுதான். 7 மனைவி ஸ்தானம், கணவன் ஸ்தானம். கணவருக்காக- மனைவிக்காகச் செய்யும் செலவுகள்- ஆடை அணிகலன்கள் வாங்கினாலும் சுபச்செலவுகள்.

அதே மாதிரி ஏழரைச் சனியிலும் மூன்று சனி உண்டு. மங்கு சனி- பொங்கு சனி- மரணச் சனி! முதல் சுற்று ஏழரைச் சனி மங்கு சனி, இரண்டாம் சுற்று ஏழரைச்சனி பொங்குசனி, மூன்றாவது சுற்று ஏழரைச் சனி மரணச் சனி. முப்பது வருடத்துக்கு ஒரு முறை ஒவ்வொருவர் வாழ்விலும் ஏழரைச் சனி வருடம் 25 வயது முதல் 30 வயதுக்குட்பட்டவர்களுக்கு இது இரண்டாவது சுற்று ஏழரைச் சனி பொங்கு சனி- நல்ல சனி!

ராகு கேதுவுக்கு சொந்த வீடுகள் இல்லை. யார் வீட்டில் யாரோடு சேர்ந்திருக்கிறார்களோ யாரால் பார்க்கப்பட்டார்களோ அந்தப் பலனைத்தான் ராகு- கேது செய்வார்கள். இன்னும் சொல்லப்போனால் யாருடைய நட்சத்திரத்தில் இருக்கிறார்களோ அந்தப் பலனையும் சேர்த்து செய்வார்கள். அதன்படி 12-ல் உள்ள ராகு அயன சயன போகம், பயணம், வெளிநாட்டுப் பயணம், வெளியூர் வேலை ஆகிய பலனைச் செய்வார். விருச்சிக ராசிக்கு 3, 4-க்குடைய சனியின் சேர்க்கை என்பதால் சகோதர வகையிலும் நண்பர்கள் வகையிலும் நல்லது நடக்கும். அதே போல நாலாம் இடம் கல்வி, பூமி, வீடு, வாகனம், தேக சுகம், தாயார் ஆகிய பலனிலும் நல்லது நடக்கும். கேது 6-ல் இருப்பதால் மேற்கண்ட யோகத்துக்காகக் கடன்வாங்கவும் நேரும். அரசு வங்கிக்கடன், தனியார் கடன், நண்பர்கள், அறிந்தவர்கள் மூலமான கடன், வட்டிக்கடன் வாங்கலாம்.

இப்படிக் கடன் வாங்குவதிலும் ஒரு நியதி- பாலிஸி- வரைமுறை உண்டு. தேவைக்காக கடன் வாங்குவதில் தப்பே இல்லை. ஆனால் தேவையும், அவசரமும், அவசியமும் இல்லாத காரியங்களுக்காகக் கடன் வாங்குவது கூடாது. கடன் வாங்கி இன்னொருவருக்கு கடன் கொடுக்கக்கூடாது. கடன் வாங்கியவர் நாணயமாக கடனைக் கட்டவில்லையென்றால் அது நம்மைத்தான் பாதிக்கும். நம் தலையில்தான் விழும். அதேமாதிரி நல்லவர்களிடம் கடன் வாங்கவேண்டும். இரக்க சுபாவம், மனிதாபிமானம், படைத்தவர்களிடம் கடன் வாங்க வேண்டும். கல் நெஞ்சக்காரர்களிடமும் அடாவடிக்காரர்களிடமும் கடன் வாங்கக்கூடாது. வெற்றுப் பேப்பரில் கையெழுத்துப் போட்டும் கடன் வாங்கக்கூடாது. கடனைத் திருப்பிக் கொடுக்கும்போது கொடுத்த பணத்துக்கு கட்டாயம் ரசீது வாங்கவேண்டும். இவற்றைக் கடைப்பிடிக்காவிட்டால் கடன் தரமாட்டார்களே என்று நினைத்தால், அப்படிப்பட்ட கடன் வாங்காமலே இருந்துவிடலாம். அதனால் நம் மானம் மரியாதை காப்பாற்றப்படும். இந்த விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் எப்படியாவது கடன்வாங்கினால் போதும் என்று பணம் வாங்கிவிட்டால் கடன்காரர்களிடம் உங்கள் குடுமி சிக்கிக்கொள்ளும். கடைசியில் மானம் மரியாதை போகும். அதைவிட உயிரே போய்விடும். பிரபலமான திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவர் கடனுக்காகத்தான் தற்கொலை செய்துகொண்டார். கோவையருகில் ஒரு மடாதிபதி கணவரும் மனைவியுமாக தற்கொலை செய்து கொண்டார்கள். இவற்றையெல்லாம் யார் கடைப்பிடிக்கிறார்கள்! அவசரத் தேவையென்று வாங்கிவிட்டு கடைசியில் ஊரைவிட்டே ஓடி தலைமறைவாகிவிடும் நிலை ஏற்பட்டுவிடும்.

எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் சந்தையில் கடைபோட்டிருந்தார். அத்துடன் வாரச்சீட்டு பிடித்து மற்றவர்களுக்குக் கடன் கொடுத்தார். தான் வாங்கிய இடத்தில் தேதிவாரியாக டயரியில் குறித்து வைத்து தேடிப்போய் வட்டியை நாணயமாகக் கொடுத்து வந்தார். ஒரு கட்டத்தில் அவர் கொடுத்த இடத்தில் பணத்தைத் திருப்பித் தராமல் பெருந்தொகையோடு தலைமறைவாகி விட்டதால், இவரும் வாங்கிய இடத்தில் நாணயத்தைக் காப்பாற்ற முடியவில்லை. பணம்கொடுத்தவர்கள் அவரை கொலைவெறி மிரட்டல் பண்ணவே குடும்பத்தோடு  பிசினஸ் எல்லாவற்றையும் அப்படியே விட்டுவிட்டு தலைமறைவாகி விட்டார்கள். இது உண்மைச் சம்பவம். இப்படி எத்தனையோ சம்பவம் நாட்டில் நடக்கிறது.

துலா ராசியில் நிற்கும் ராகு 3-ஆம் பார்வையாக தொழில் ஸ்தானம் 10-ஆம் இடத்தை சிம்மத்தைப் பார்க்கிறார். 7-ஆம் பார்வையாக 6-ஆம் இடத்தை மேஷத்தைப் பார்க்கிறார். 11-ஆம் பார்வையாக 2-ஆம் இடத்தை தனுசு ராசியைப் பார்க்கிறார். மேஷத்தில் நிற்கும் ராகு 3-ஆம் பார்வையாக விருச்சிகராசிக்கு 4-ஆம் இடத்தையும் 7-ஆம் பார்வையாக விருச்சிக ராசிக்கு 12-ஆம் இடத்தையும் 11-ஆம் பார்வையாக விருச்சிக ராசிக்கு 8-ஆம் இடத்தையும் பார்க்கிறார். இதனால் உங்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகளும் ஏற்கெனவே செய்துவரும் தொழில் துறையில் சீர்த்திருத்தங்களும் அபிவிருத்திக்குரிய திட்டங்களையும் எதிர்பார்க்கலாம்.  சிம்மம் சூரியன் வீடு. சூரியன் ராஜகிரகம். சந்திரனும் ராஜகிரகம். சூரியனும் சந்திரனும் 10-ஆம் இடத்துக்குத் தொடர்புடையவராக அமைந்தால் அவர்களுக்கு அரசுவேலை வாய்ப்பு உண்டாகும் என்பது ஒரு கணக்கு. எனவே ஜாதகத்திலும் மேற்படியோகம் நடந்தால் நிச்சயம் அரசுவேலை உண்டாகும்.

இப்படி அமைப்புடைய ஒரு ஜாதகருக்கு 35 வயதுக்குமேல் ஆகிவிட்டது. அரசு வேலை கிடைக்கும் எனச் சொல்லியிருந்தேன். அரசு வேலையிலிருந்த அவர் அப்பா விபத்தில் இறந்துவிடவே அவருக்கு வாரிசு வேலை கிடைத்துவிட்டது. சமீபத்தில் ஒரு ரயில் தீ விபத்தில் இறந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை ரயில் துறையில் தரப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் சொன்னார். அப்போது அதற்கு தகுதி, படிப்பு, வயது எல்லாம் விதிவிலக்காகிவிடும் அல்லவா!

விருச்சிக ராசிக்கு 6-ல் இருக்கும் கேதுவும் அவரைப் பார்க்கும் ராகுவும் சனியும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஏதாவது ஒருவகையில் கடனை ஏற்படுத்துவார்கள். குரு ராசியைப் பார்ப்பதால் தைரியமாக கடன் வாங்கலாம். உங்கள் மானம் மரியாதைக்கு எந்தக் கேடுகெடுதியும் வராது. குரு எட்டில் (மிதுனத்தில்) மாறியதும் குரு பார்வை விலகிவிடும். அக்காலம் கடன் வாங்குவதில் கட்டுப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ளவும். முடிந்தால் கடன் வாங்காமல் சமாளிக்கவும்.

4-ஆம் இடம் பூமி, வீடு, வாகன யோகம் என்பதால் வாடகைவீட்டில் வேதனைப்படுகிறவர்களுக்கு ஒத்திவீடு அல்லது சொந்தவீடு அமையும். அப்பார்ட்மெண்ட் வீடும் அமையலாம். அதற்கும் கடன் வசதி கிடைக்கும்.

2-ஆம் இடம் வாக்கு, தனம், குடும்பத்தைக் குறிக்கும். தாராளமான பணப்புழக்கமும் வரவு செலவும் திருப்தியாக இருக்கும். கையில் காசுபணம் வந்தாலே மனதில் நிறைவு ஏற்பட்டுவிடும். மனசந்தோஷமும் தெம்பும் இருந்தால் கவலைகள் பறந்துவிடும். கவலையில்லையென்றாலே தேக நலமும் சுகமும் உண்டாகிவிடும். நோய்க்கு அடிப்படைக் காரணமே கவலை. சர்க்கரை சத்து உடையவர்கள் உணவுக்கட்டுப்பாடாக இருந்தாலும் சரி- இனிப்பே சாப்பிடாமல் இருந்தாலும் சரி- "டென்சன்' இருந்தால் "சுகர்' கூடிவிடும். அதே மாதிரி வேளாவேளைக்கு டயத்துக்கு சாப்பிடாமல் இருந்தாலும் "சுகர்' ஏறிவிடும். இன்சுலீன் போட்டும் குறையாது.

சனி பகவான் விருச்சிக ராசிக்கும் 2-ஆம் இடம், 6-ஆம் இடம், 9-ஆம் இடங்களைப் பார்க்கிறார். குரு பகவானும் ஜென்ம ராசிக்கு 3-ஆம் இடம், 11-ஆம் இடங்களைப் பார்க்கிறார். ஆக பொருளாதாரத்தில் பற்றாக்குறையோ நெருக்கடியோ ஏற்படாது. தாராளமான வரவு செலவு இருக்கும். குடும்பத்தாரின் விருப்பத்தை நிறைவேற்றி, கேட்டதை யெல்லாம் வாங்கித் தருவீர்கள். 7-ஆம் இடம் மனைவி ஸ்தானம். அங்கு குரு இருப்பதால் மனைவி ஆசைப்பட்ட மாதிரி தங்க நகைகளும் பட்டுப் புடவையும் வாங்கிக் கொடுத்தால், அவர்கள் உங்களை தாங்கு தாங்கு என்று தாங்கமாட்டார்களா? அதேபோல கணவருக்கு விதவிதமாக சமைத்துப்போட்டு சந்தோஷப்படுத்த மாட்டார்களா?

பாக்யராஜ் ஒரு சினிமாவில் மனைவியை ஹோட்டல், பீச், சினிமா என்று அழைத்துப்போய் குஷிப்படுத்துவார். இரவில் பெட்ரூமிற்குப் போனதும் அவர் தலைக்குளித்துவிட்டேன் என்று தள்ளிப்போய் படுத்துக்கொள்வார். உடனே பாக்யராஜ், "செலவழித்தது வீணாப் போச்சு' என்று சொல்லி மனைவியிடம் வாங்கிக் கட்டிக்கொள்வார். இப்படி எத்தனையோ குடும்பத்தில் நடக்கிறது. இல்லறம் என்பது படுக்கை சுகத்துக்கு மட்டுமல்ல. அதைத்தான் மகாத்மா காந்தியடிகள் "ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்துகொள்வது சிற்றின்பத்துக்காக மட்டுமல்ல; வம்சம் தழைக்க- வாரிசைப் படைக்கத்தான்' என்றார். காமத்தைக் கடந்தவன் சந்நியாசி; கோபத்தை வென்றவன் ஞானி!

6-ஆம் இடத்துக்குத் தொடர்புடைய கேது, ராகு, சனி போட்டி பொறாமைகளையும் எதிரிகளையும் அழித்து உங்களுக்கு நிம்மதியைத் தருவார்கள். இராவணன் எவ்வளவு பலசாலியாக இருந்தாலும்- சிவபக்தனாக இருந்தாலும் யுத்த களத்தில் ராமபிரான் நிராயுதபாணியான இராவணனைப் பார்த்து, ""இன்று போய் நாளைவா'' என்று திருப்பியனுப்பினார். அப்போதே இராவணன் செத்தவனாகி விட்டான். அவன் வீரமும் செத்துவிட்டது.

8-ஆம் இடத்துக்கு கேது பார்வை அமைவதால் சிலருக்குத் தேவையற்ற விமர்சனங்களும் கவலைகளும் ஏற்பட்டாலும் ஜென்ம ராசிக்கு குருபார்வை இருப்பதால் அப்பழுக்கற்றவர் என்ற முத்திரை குத்தப்படும். சிலருக்கு எதிர்பாராத விபத்துகளும் வைத்தியச் செலவுகளும் வந்து விலகும். விருச்சிக ராசிக்கு 9-ஆம் இடம் கடகத்தை உச்ச சனி பார்ப்பதால், ஆன்மிகவாதிகளில் ஒரு சிலருக்கு அவப்பெயரும் களங்கமும் விமர்சனமும் உண்டாகும். அதற்குக் காரணம் அவரவர்களுடைய நடவடிக்கைகளும் செயல்களும்தான். மடியில் கனமில்லாதவருக்கு வழியில் பயமில்லையே!

திருவையாறில் வாழ்ந்த தியாகப்பிரம்மம் உஞ்சவிருத்தி பண்ணி இறைவழிபாடு செய்து வாழ்ந்தவர். உஞ்சவிருத்தி என்றால் வீடுவீடாகப் போய் அரிசியை பிச்சை வாங்கி வந்து சமைத்து, இராமருக்கு நைவேத்தியம் செய்துவிட்டு தானும் மனைவியும் சாப்பிடுவார்கள். இராமரின் புகழைத் தவிர வேறு யாரையும் புகழ்ந்து பாடமாட்டார். சரபோஜி மகராஜா தன்னைப் புகழ்ந்து பாடும்படி ஆணையிட்டார். ராமரைத் தவிர வேறு எந்த மனிதரையுடன் பாடமாட்டேன் என்று பயப்படாமல் சொன்னார். உடனே சரபோஜி மகராஜா கோபம் கொண்டு தியாகப்பிரம்மம் பூஜை செய்த விக்ரகங்களை காவேரியில் தூக்கிப்போடச் செய்தார். சென்னை அன்பர் ஒருவர் தியாகப் பிரம்மத்தை தன் வீட்டுக்கு அழைத்துவந்து மரியாதை செய்யவிரும்பினார். ஆனால் தியாகப் பிரம்மம் வரமாட்டாரே என்று நினைத்து, திருப்பதிக்கு வந்து வெங்கடாசலபதியை தரிசிக்க வரும்படி வேண்டினார். சுவாமிகளும் ஏழுமலையான் உத்தரவு என்று திருப்பதி தரிசனம் முடிந்து அன்பர் வீட்டில் தங்கி இளைப்பாறி ஊருக்குப் புறப்பட்டார். அப்போது ஆயிரம் பொற்காசுகளை அவர் சீடனிடம் கொடுக்க "தியாகப் பிரம்மம் வாங்கமாட்டார். அவருக்குத் தெரிந்தால் திட்டுவார்' என்று சொல்ல - அன்பர் பல்லக்கில் அவர் சீட்டுக்கு அடியில் பணப்பையை வைத்து விட்டு, "ராமர் சேவைக்கு இருக்கட்டும். சுவாமியிடம் சொல்லாதே' என்று சொல்லிவிட்டார். சீடனுக்கு மெல்லவும் முடியவில்லை சொல்லவும் முடியவில்லை. தியாகப்பிரம்மம் எதுவுமே தெரியாமல் ராம நாமத்தைச் சொல்லிபடி பல்லக்கில் வருகிறார். வழியில் காட்டுப்பாதை. திருடர்கள் பல்லக்கில் யாரோ தனவந்தர்கள் போகிறார்கள் என்று நினைத்து விரட்டுகிறார்கள். சீடன் பயப்படுகிறான். சுவாமிகளிடம் "திருடர்கள் வருகிறார்களே' என்று சொல்ல- வந்தால் "வரட்டுமே! நமக்கென்னடா பயம். காசுபணமா இருக்கிறது' என்கிறார். அவர் பணத்தை கையால் தொடாத மகான். உடனே சீடன், "பணம் இருக்கிறது குருநாதா, முதலியார் பணப்பையை உங்கள் ஆசனத்தின் கீழ் வைத்துவிட்டார்' என்றான். "நீ ஏண்டா வாங்கினாய்' என, சீடன், "நான் வாங்க மறுத்தேன். ஆனால் அவர் ராமர் சேவைக்குப் பயன்படும் என்று வைத்துவிட்டார்' என்கிறான். "அப்படியானால் அந்தப் பணத்தை ராமனே பாதுகாத்துக் கொள்வான் நீ பயப்படாமல் வாடா' என்று அமைதியாகி விட்டார். பல்லக்கைத் துரத்தி வந்த திருடர்களை நெருங்கவிடாமல் ராமரும் லட்சுமணரும் அம்பு தொடுத்தார்கள். அவர்களைப் பார்த்த திருடர்களுக்கு ஞானம் வந்து, யாரோ தெய்வீக புருஷர்கள் பல்லக்கிற்கு காவல் காக்கிறார்கள். அப்படியானால் உள்ளே யாரோ மகான்தான் பயணிக்கிறார் என்று வேகமாக வந்து பல்லக்கை நிறுத்தி தியாகப்பிரம்மத்தை வணங்கி மன்னிக்கும்படி வேண்டுகிறார்கள். உடனே தியாகப் பிரம்மம் வந்தது ராம லட்சுமணர் என்று உணர்ந்து, ""உங்களுக்கு காட்சி தந்தவர்கள் இந்தப் பாவிக்கு தரிசனம் தரவில்லையே!'' என்று அங்கலாய்த்து திருடர்கள் காலில் விழுந்து வணங்கி அருகில் ஓடிய நதியில் போய் உயிர்த் தியாகம் பண்ண விழுந்து விடுகிறார். அவர் காலில் திருவையாறு காவேரியில் சரபோஜி மகாராஜா வீசி எறிந்த விக்கிரகங்கள் தட்டுப்படுகின்றன. ஆனந்தக் கூத்தாடி அதை வாரியெடுத்து மகிழ்கிறார். ராம-லட்சுமணரும் காட்சியளிக்கிறார்கள். இதற்காகத்தான் திருப்பதிக்கு சுவாமி அழைத்தார் போலும் என்று தியாகப் பிரம்மம் ஆனந்தக் கூத்தாடுகிறார். ஆக எது நடந்தாலும் காரணம்- கர்த்தா- காரியம் என்று ஒன்று உள்ளது. அதுதான் தேவரகசியம்! இப்படிப்பட்ட ஒரு அனுபவத்தையும் ராகு- கேது பெயர்ச்சி உங்களுக்கு ஏற்படுத்தும்.

விசாக நட்சத்திரக்காரர்களுக்கு:


இந்த குருப் பெயர்ச்சி அற்புத ஆன்மிக உணர்வுகளையும் பலன்களையும் தரும். 5-க்குடையவர் 7-ல் அமர்ந்து ராசியைப் பார்ப்பதால் இல்லத்தில் நல்லறம் காண்பீர்கள். ஒரு குடும்பத்தலைவர் என்ற முறையில் மனைவி- மக்கள், குடும்பத்தாருக்குச் செய்யவேண்டிய கடமைகளைச் செய்ய கருணைகாட்டுவார். கும்பகோணம் குடவாசல் அருகில் சேங்காலிபுரம் சென்று குரு தத்தாத்ரேயரையும் - செங்கோட்டை அருகில் தமிழ்நாடு- கேரளா எல்லைப் பகுதியருகில் புளியறை சென்று தட்சிணாமூர்த்தியையும் வழிபடவும்.

அனுஷ நட்சத்திரக்காரர்களுக்கு:

அனுஷ நட்சத்திரம் சனி பகவானின் நட்சத்திரம். விருச்சிக ராசிக்கு 3, 4-க்குடைய சனியோடு சேர்ந்து ராகு நிற்க கேது பார்ப்பதால், சகோதர வரையிலும் தாயார் வகையிலும் சுபவிரயச் செலவுகள் உண்டாகும். சுபமங்களச் செலவுகள்தான். திருநள்ளாறு சென்று தர்பாரண்யேஸ்வரர் சுவாமியையும் அம்பாளையும் சனீஸ்வரரையும் வழிபடவும். பொதுவாக சனிபகவான் மேற்கு நோக்கிய சந்நிதியாகத்தான் காட்சியளிப்பார். சில இடங்களில் யமன் திசையான தெற்கு நோக்கி இருப்பார். திருநள்ளாறிலும்- பவானி சங்கமேஸ்வரர் கோவிலிலும் சனிபகவான் கிழக்கு நோக்கிய சந்நிதியாக அருள்பாலிக்கிறார். 

கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு:

கேட்டை புதனின் நட்சத்திரம். புதன் விருச்சிக ராசிக்கு 8, 11-க்குடையவர். இந்த ராகு-கேது பெயர்ச்சி உங்களுக்கு சுபமங்களச்செலவுகளையும் கிரகப்பிரவேசம், புதிய வாகன யோகம் போன்ற நல்ல செலவுகளையும் ஏற்படுத்துவார். தினசரி வருமானம் பார்த்த சிலர் பதவி ஓய்வுக்குப் பிறகு இப்படிச் செலவுகள் செய்யும்போது மேல் வருவாய்க்கு என்ன செய்வது என்ற கவலையும் ஏற்படும். அதுதான் 8-ன் பலன். அதன் மூலம் லாபம் அல்லது தொழில் முதலீடு மூலமாக பின்னால் லாபம் தேடலாம். திருச்சி ஸ்ரீரங்கம் சென்று ரங்கநாதரை வழிபடலாம்.

No comments:

Post a Comment

#கர்மவினையைவெல்ல.....தொடர்சி..3

# கர்மவினையைவெல்ல .....தொடர்சி..3 # காலபுருஷதத்துவமும்  கர்மாவும் : கால புருஷ தத்துவப்படி 12 இராசிகளும் தர்ம, கர்ம, காம மற்றும் மோட்ச ...