கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
கன்னி ராசி அன்பர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 3-ல் இருந்த ராகு இப்போது 2-ஆம் இடத்திலும்; 9-ல் இருந்த கேது 8-ஆம் இடத்திலும் மாறியிருக்கிறார்கள். ராகுவும் கேதுவும் கடந்த காலத்தில் இருந்த இடங்களைவிட இப்போது மாறும் இடங்கள் அவ்வளவு சிறப்பானது என்று கூறமுடியாது.
கடந்த காலத்தில் ராகு 3-ல் இருந்த இடம் அற்புத இடம். "ராகு பன்னொன்று மூன்று ஆறாம் இடத்திற்கேறின் பாகு தேன்பழமும் பாலும் வற்றாத தனமும் உண்டாம்; ஆகும் காரியங்களுண்டாம்; அன்ன தானங்களுண்டாம்; வாகுமறு மணமும் உண்டாம்; வரத்துமேல் வரத்துண்டாமே' என்றபடி எல்லா சௌபாக்கியங்களையும் அனுபவித்தீர்கள். ஆனால் அந்த ஆனந்த அனுபவம் அனைவருக்கும் இருந்ததா என்று சொல்ல முடியாது. அதற்குக் காரணம் கன்னி ராசிக்கு 8-ல் குரு இருந்ததும்,. ஜென்மத்தில் சனி இருந்ததுவும்தான். அவர்கள் இருவரும் இப்போதும் விலகிவிட்டார்கள். 8-ஆம் இடத்து குரு 9-ல் மாறி கன்னி ராசியைப் பார்க்கிறார். அதேபோல ஜென்மச்சனி விலகி பாதச்சனியாகி உச்சபலம் பெறுகிறார். எனவே ராகுவுக்கு இருந்த "செக்' (தடை) விலகிவிட்டது.
இப்போது ராகுவும் கேதுவும் மாறியுள்ள இடங்கள் சுமாரான இடங்கள்தான் என்றாலும் மற்ற கிரக அமைப்புகளாலும் குறிப்பாக குரு சனி- இருவரும் நிற்கும் இடத்தின் தன்மையாலும் ராகு- கேது பெயர்ச்சி உங்களைக் கெடுக்காது என்று ஆறுதல் அடையலாம். ஜோதிடத்தில் ஸ்ருதி-யுக்தி-அனுபவம் என்று மூன்று நிலை உண்டு. உதாரணமாக ராசிக்கு 2, 5, 7, 9, 11-ல் குரு வந்தால் குருபலம் வந்துவிட்டது- வியாழ நோக்கம் வந்துவிட்டது என்பார்கள். அந்த குரு பலமும் வியாழ நோக்கமும் 10 வயதுப் பிள்ளைக்கு வந்தால் திருமணம் ஆகிவிடுமா? அதற்குரிய பருவ வயது வர வேண்டாமா? முதலில் சொன்ன குருபலம் என்பது ஸ்ருதி. வயதைப் பொறுத்தது என்பது யுக்தி. பருவவயது 20-25 வயதாகிவிட்டது என்றாலும் களஸ்திரதோஷம், மாங்கல்ய தோஷம் இருக்கிறா இல்லையா என்பதைக் கண்டறிவது அனுபவம்!
2-ஆம் இடம் என்பது வாக்கு, தனம், குடும்பம், வித்தை எனப்படும். அங்கு ராகுவும் சனியும் இருக்கிறார்கள். கன்னி ராசிக்கு சனி 5, 6க்குடையவர். சனி நின்ற துலா ராசிக்கு சனி 4, 5-க்குடைய ராஜயோகதிபதி எனவே ஏற்கெனவே குறிப்பிட்டபடி ஒரு வீட்டில் நிற்கும் கிரகம் அந்த வீட்டுக்கு 5, 9 என்ற திரிகோணாதிபத்தியம் பெற்றால் அந்த வீட்டுக்கு யோகத்தைச் செய்யும். அதன்படி சனி 2-ஆம் இடத்துக்கு நன்மை தருவார். அவரோடு சேர்ந்த ராகுவும் நன்மை செய்வார். எனவே திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம், குடும்பம் அமையும். படிக்கும் மாணவ- மாணவியர்களுக்கு படிப்பு மேன்மையடையும். ஏழரைச் சனியால் படிப்பில் அரியர்ஸ் வைத்திருப்பவர்களும் அல்லது படிப்பை பாதியில் நிறுத்தியவர்களும் ஜென்மச்சனி விலகிய காரணத்தால் படிப்பை பூர்த்தி செய்யலாம். விட்ட படிப்பை மேற்கொண்டு தொடரலாம். கடந்த காலத்தில் வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டவர்களுக்கும்- நிரந்தரவேலை, நிரந்தர சம்பாத்தியம் இல்லாதவர்களுக்கும் இனி நிலையான வேலை, நிலையான சம்பளம் அமையும். சனியும் ராகுவும் சுக்கிரன் வீட்டில் இருப்பதால், சுக்கிரன் ஜலகிரகம் என்பதாலும் ஏழரைச் சனி நடப்பதாலும் சிலர் பெற்றோரை விட்டுப் பிரிந்து வெளிமாநிலம் அல்லது வெளிநாட்டுக்குப் போகும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அது சம்பந்தமாக சொந்த முதலீடு இல்லாதவர்கள் அதற்காகக் கடன் வாங்கிச் செலவு செய்யலாம். சனி 6-க்குடையவர் என்பதன் பலன் அதுதான்.
ஒரு சிலர் கூட்டுக்குடும்பத்தில் இருந்து தனிக்குடித்தனம் போகலாம். அல்லது ஏற்கெனவே குறிப்பிட்டபடி பிறந்த ஊரைவிட்டு வேலை சம்பந்தமாக வெளியூர் வாசம் போகலாம். உடன் பிறந்தவர்களின் ஒத்துழைப்பும் சகாயமும் உதவியும் எதிர்பார்க்கலாம். ராகு 12-ஆம் இடத்தைப் பார்ப்பதால் விரயம், அலைச்சல், வெளியூர்ப் பயணம் ஆகிய பலன்களைச் சந்திக்கும் நிலை.
கன்னி ராசிக்கு 8-ஆம் இடம் மேஷத்தை ராகு பார்ப்பதால், சிலருக்கு கௌரவப் பிரச்சினையும் இடப்பெயர்ச்சியும் ஏற்படும். 3-ஆம் இடத்தையும் ராகு பார்ப்பதால், உடன்பிறந்தவர்கள் வகையில்- நண்பர்கள் வகையில் சில பிரச்சினைகளையும் சங்கடங்களையும் சிலர் சந்திக்க நேரும். அவர்களுக்காக செலவுகளையும் விரயங்களையும் சந்திக்கலாம்.
ராகுவும் கேதுவும் கன்னி ராசிக்கு 9-ஆம் இடத்துக்கு 6-ல், 12-ல் இருப்பதால், பூர்விகச் சொத்து சம்பந்தமான பிரச்சினைகளையும் சிக்கல்களையும் விரயச் செலவுகளையும் சந்திக்கலாம் என்றாலும் 9-ல் குரு இருப்பதால் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனமாதிரி சங்கடங்களும் பிரச்சினைகளும் நிவர்த்தியாகும்.
9-ஆம் இடத்துக்கு 6, 12-ல் இருக்கும் ராகு- கேது, ஜாதக தசாபுக்தி சரியாக இல்லாவிட்டால் சொத்துப் பிரச்சினைகளும் பிரிவு பிளவையும் ஏற்படுத்தலாம். தகப்பனாரும் இரண்டு மகன்களும் சேர்ந்து ஒரு தொழிலை சிறிதாக ஆரம்பித்தார்கள். மூன்றுபேருடைய ஒத்துழைப்பாலும் முயற்சியாலும் முன்னேற்றமடைந்து பெரிய அளவில் வளர்ந்து விட்டார்கள். வீடு, வாகனம் போன்ற வசதிகள் எல்லாம் வந்துவிட்டது. வாடகைக்கு இருந்த தொழில் ஸ்தானத்தையும் விலைக்கு வாங்கி விட்டார்கள். திடீரென்று தகப்பனார் காலமாகிவிட்டார். அண்ணனும் தம்பியும் சேர்ந்து தொழில் நடத்தலாம் என்று அண்ணன் நினைத்தார். ஆனால் தம்பியோ உடனே பாகத்தைப் பிரிக்கவேண்டும் என்றார். அப்பா இறந்து ஒரு வருடம் முடிந்த பிறகு- தலை திவசத்துக்குப்பிறகு பாகம் பிரிக்கலாம் என்று அண்ணன் சொன்னார். ஆனால் தம்பி ஒத்துக்கொள்ளவில்லை. உடனே பிரித்தாக வேண்டும் என்று நிர்ப்பந்தப்படுத்தினார். முடிவு- கடை இடத்தை அண்ணனும், விலாசத்தை (டிரேட் மார்க்கை) தம்பியும் பிரித்துக் கொண்டார்கள். முடிவில் அண்ணனிடம் விசுவாசமான ஊழியர்களும், தம்பியிடம் ஏமாற்றும் ஊழியர்களும் அமைந்துவிட்டார்கள். அண்ணன் கோவில், தெய்வம், பூஜை என்றும்; தொழில்துறையில் குறைந்த லாபம் இருந்தால்போதும் நாணயம் முக்கியம் என்றும் தொழில் செய்தார். தம்பி- அதிக லாபம் பார்க்க வேண்டும் என்று தொழில்துறையில் கலப்படம் செய்து பெயர் விலாசம் கெட்டுப்போய் விட்டது.
தொழிலாகட்டும் அரசியலாகட்டும்- கொள்கை கோட்பாடுடன் செயல்பட்டால் நிலைக்கலாம்; நீடிக்கலாம். சந்தர்ப்பவாதமாக நிலையற்ற கூட்டணியாக இருந்தால் வீழ்ச்சிதான். பூர்வீக சொத்து, கட்டட சம்பந்தமான விவகாரங்களும் ஏற்படலாம். பதட்டப்படாமலும் ஆத்திரப்படாமலும் அடிக்கடி மோதல்களில் இறங்காமலும் பொறுமையைக் கடைப்பிடித்து செயல்பட்டால் சாதகமான பலனைச் சந்திக்கலாம்.
பொதுவாக ஒவ்வொரு மனித வாழ்க்கையிலும் பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறையும் பதினெட்டு வருடங்களுக்கு ஒருமுறையும் முப்பது வருடங்களுக்கு ஒருமுறையும் ஒவ்வொரு திருப்பம் ஏற்படும். எவ்வளவு மோசமான ஜாதகமாக இருந்தாலும் முப்பது வருடங்களுக்கு மேல் அந்தக் கஷ்டம் நீடிக்காது. முப்பது வருடங்களுக்கு மேல் சேர்ந்தாற்போல துன்பப்பட்டவரும் இல்லை; இன்பமாகவே இருந்தவரும் இல்லை. இது என்ன கணக்கு? குரு 12 வருடங்களுக்கு ஒருமுறை இருந்த ராசிக்கே வருவார். ராகு-கேது 18 வருடங்களுக்கு ஒரு முறை இருந்த இடத்துக்கே திரும்ப வருவார்கள். சனி 30 வருடங்களுக்கு ஒரு முறை பழைய இடத்துக்கே வருவார்.
அதுபோல ஸ்த்ரீ சாபத்தாலோ அல்லது குடும்ப தோஷத்தாலோ அல்லது தெய்வ குற்றத்தாலோ இப்படி ஏதாவது ஒரு காரணத்தால் சாண் ஏற முழம் சறுக்க என்று வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகளைச் சந்தித்துப் போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு 18 வருடத்துக்குப் பிறகு ஒரு விமோ சனம் பிறக்கும். ருதுவாகி 18 ஆண்டுகளாக திருமணம் ஆகாத பெண் களுக்கும், 36 வயதுவரை (இரண்டு 18 வருடம்) திருமணம் ஆகாத ஆண் களுக்கும் இந்த ராகு- கேது பெயர்ச்சி நல்லது செய்யும். கால சர்ப்பதோஷத்தால் நல்லது நடக்காத ஜாதகர்களுக்கும் இந்த ராகு- கேது பெயர்ச்சி ஏதோ ஒருவகையில் யோகத்தைச் செய்யும். காலசர்ப்ப தோஷத்தின் பாதிப்பும் 36 வருடம்தான். அதன்பிறகு தோஷம் நிவர்த்தி யாகும். காலசர்ப்பதோஷம், காலசர்ப்ப யோகமாக மாறும். இது அனுபவ உண்மை!
8-ல் உள்ள கேது சிலசமயம் வீண் பயம், வீண் கற்பனையை உருவாக்கும்., சிலருக்கு கௌரவப் போராட்டம், கௌரவப் பிரச்சினையை உருவாக்கும். சிலருக்கு இடப்பெயர்ச்சியை உருவாக்கும்.
மொத்தத்தில் ராகு-கேதுப் பெயர்ச்சி கடந்த காலத்தில் ஏற்பட்ட காயங்களுக்கு மருந்து போட்டு குணமாக்கும் என்றும்; நல்ல திருப்பத்தையும் யோகத்தையும் தரும் என்றும் எதிர்பார்க்கலாம். "விட்டதெல்லாம் விரயம் தொட்டதெல்லாம் துயரம்' என்ற நிலை மாறிவிடும். "சட்டி சுட்டதடா கை விட்டதடா' என்று கஷ்டங்களையும் கவலைகளையும் விட்டு விலகி விடலாம்.
உத்திர நட்சத்திரக்காரர்களுக்கு:
உத்திரம் சூரியனின் நட்சத்திரம். சூரியன் ராகுவுக்கும் கேதுவுக்கும் பகை கிரகம். என்றாலும் சூரியன் வீடான சிம்மத்தை ராகு பார்க்கிறார். சூரியனின் உச்ச வீடான மேஷத்தில் கேதுவும், சூரியனின் நீச வீடான துலாத்தில் ராகுவும் நிற்பதால், தற்காலிக நட்பாக எடுத்துக்கொள்ளலாம். அந்த வகையில் சூரியன் 12-க்குடையவர் என்பதால் சுபச்செலவுகள், சுபமங்கள விரயங்கள் உண்டாகும். கெடுதலிலும் நல்லது என்பதுபோல நல்லது நடக்கும். தஞ்சாவூர் அருகில் ஒரத்தநாடு வழி-பரிதியப்பர் கோவில் என்ற ஊரில் பாஸ்கரேஸ்வர சுவாமி திருக்கோயில் இருக்கிறது. அந்தக் கோவில் மூலவரை சூரியன் வழிபட்டு சாப விமோசனம் பெற்றதாக வரலாறு. அங்கு சென்று வழிபடலாம்.
அஸ்த நட்சத்திரக்காரர்களுக்கு:
கன்னிராசிக்கு சந்திரன் 11-க்குடைய லாபாதிபதியாவார். அஸ்தம் சந்திரனின் நட்சத்திரம். சந்திரன் கன்னிக்கு லாபாதிபதியாவார். எனவே ராகு-கேது பெயர்ச்சி உங்களுக்கு வெற்றியையும் லாபத்தையும் முன்னேற்றத்தையும் தரும். சந்திரன் வீடான கடகம்- ராகுவுக்கு 10-ஆம் இடம்; கேதுவுக்கு 4-ஆம் இடம். எனவே உங்கள் ஆரோக்கியம் பலமடையும். பூமி, வீடு, வாகனம், தாய் சம்பந்தப்பட்ட நன்மைகள் உண்டாகும். தொழில் முன்னேற்றம், தொழிலில் புது முயற்சி, பதவியில் நிறைவு ஆகிய பலன்கள் உண்டாகும். சிவகங்கை பஸ் ஸ்டாண்டு அருகில் சசிவர்னேஸ்வரர் கோவில் இருக்கிறது. சுவாமி சசிவர்னேஸ்வரர். அம்பாள் பெரிய நாயகி. சந்திரன் சாபவிமோசனம் பெற்ற திருத்தலம். அங்கு சென்று திங்கள் கிழமை வழிபடவும்.
சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு:
சித்திரை செவ்வாயின் நட்சத்திரம். செவ்வாயின் வீடான மேஷத்தில்தான் கேது இருக்கிறார். அதற்கு ஏழில் ராகு இருக்கிறார். செவ்வாய் கன்னிராசிக்கு 3, 8-க்குடையவர். கேதுவுக்கு 1, 8க்குடையவர்; ராகுவிற்கு 2, 7-க்குடையவர், எனவே ராகு- கேது பெயர்ச்சி உங்களுக்கு நல்லது கெட்டது இரண்டையும் கலந்து பலன் செய்யும்! ஆரம்பத்தில் கெடுபலனாக இருந்தால் பிற்பகுதி சுபபலனாகவும், ஆரம்பத்தில் நற்பலனாக நடந்தால் பிற்பகுதியில் துர்ப்பலனாகவும் அமையும். என்றாலும் கெடுதலும் நல்லதாக முடியும் என்பதால் கவலைப்பட வேண்டாம். பழனி முருகனையும் சென்னை வடபழனியாண்டவரையும் வழிபடவேண்டும். செவ்வாய்க்கிழமை உகந்த நாள்!
No comments:
Post a Comment