Showing posts with label மிருகசீரிஷம். Show all posts
Showing posts with label மிருகசீரிஷம். Show all posts

Tuesday, November 27, 2012

மிதுனம் (மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)



மிதுன ராசி அன்பர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 6-ல் இருந்த ராகு இப்போது 5-ஆம் இடத்துக்கும் (துலா ராசிக்கும்); 12-ல் இருந்த கேது இப்போது 11-ஆம் இடத்துக்கும் (மேஷ ராசிக்கும்) மாறியிருக்கிறார்கள். ராகுவும் கேதுவும் ஏற்கேனவே இருந்த இடங்கள் யோகமான இடங்கள்தான். அதற்காக இப்போது மாறியுள்ள இடங்கள் யோகமில்லை என்று அர்த்தமல்ல. இவையும் நல்ல இடங்கள்தான். குறிப்பாக ராகு மாறியுள்ள இடத்தைவிட கேது மாறியுள்ள இடம் மிகமிக யோகமான இடம் என்று குறிப்பிடலாம்.

ராகு- கேதுக்களுக்கு 3, 6, 11-ஆம் இடங்களும், 1, 4, 7, 10 ஆகிய கேந்திர ஸ்தானங்களும் யோகம் செய்யும் இடங்கள். பாப கிரகங்கள் கேந்திரத்திலும்  சுப கிரகங்கள் திரிகோணத்திலும் வலுப்பெறுவார்கள். இதன்படி ராகு ஏற்கெனவே இருந்த 6-ஆம் இடத்தைவிட இப்போது மாறியுள்ள 5-ஆம் இடம் (திரிகோணம்) மிகச்சிறப்பான இடமென்று சொல்லமுடியாவிட்டாலும் பாதகம் பண்ணாது. ஐந்து- ஒன்பதுக்கதிபர் பாபர் சுபரானாலும் பொன் போன்ற சுபமே செய்வர் என்பது சந்திர காவிய விதி! அதுபோல ஏற்கெனவே கேது இருந்த 12-ஆம் இடத்தைவிட இப்போது மாறியுள்ள 11-ஆம் இடம் மிகமிக அற்புதமான இடம்! தவிரவும் ராகுவும் கேதுவும் தலையும் வாலுமாகும். இதில் யாராவது ஒருவர் நல்ல இடத்தில் இருந்தாலும் இன்னொருவரும் நல்ல பலனே செய்வார் எனலாம். எனவே கடந்த காலத்தில் நடந்த யோகமும் நன்மையும் இந்த ராகு- கேது பெயர்ச்சிக்குப் பின்னும் தொடர்ந்து நடக்குமென்று நிம்மதியடையலாம். அந்த காலம் குரு 11-ல் இருந்ததும் ஒரு அனுகூலம். இப்போது 12-ல் குரு மாறியிருப்பதால் அந்த யோகம் தொடருமா என்ற சந்தேகம் ஏற்படலாம். ஆனால் மிதுன ராசிக்கு பாதகாதிபதி 12-ல் மறைவதால் கெடுதல் குறையும் என்பதோடு குருவின் பார்வை 4-ஆம் இடத்துக்குக் கிடைப்பதால் பூமி, வீடு, வாகன யோகம் உண்டாகும். அது சம்பந்தமான சுபவிரயம் ஏற்படுமென்று கணக்கிடலாம்.

5-ஆம் இடம் என்பது மக்கள், திட்டம், மனது, உபதேசம், தாய்மாமன், பாட்டனார், பூர்வ புண்ணியம், தெய்வ வழிபாடு முதலியவற்றைக் குறிக்கும் இடம். அங்கு ராகு வந்திருக்கிறார். அவருடன் மிதுனராசிக்கு 9-க்குடைய சனி உச்சம் பெற்று சேர்ந்திருக்கிறார். ராகு- கேதுவுக்கு சொந்த வீடு இல்லையென்பதும் எந்த வீட்டில் இருக்கிறாரோ அந்த வீட்டுப் பலனையும், யாரோடு சேர்ந்திருக்கிறாரோ அவருடைய பலனையும் செய்வார் என்பது நீங்கள் அறிந்ததே! அதன்படி பிள்ளைகள் வகையில் நல்ல பலன்களைச் செய்வார். படிப்பு, வேலை, திருமணம், வாரிசு யோகம் போன்ற பலன்கள் பிள்ளைகளுக்கு நடக்கும். அதேபோல குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். ராகு, சனி 5-ல் நிற்க, குரு அவர்களுக்கு 8-ல் ராசிக்கு 12-ல் மறைவதால் பிரசவ நேரத்தில் ஆபரேசன் போன்ற சிக்கல் உண்டாகும். அந்த மாதிரி கட்டத்தில் திருச்சி தாயுமானவ சுவாமிக்கும் கும்பகோணம் குடவாசல் சேங்காலிபுரம் தத்தாத்ரேயருக்கும் பிரார்த்தனை செய்து காணிக்கை முடிந்து வைத்தால் எல்லாம் எளிமையாக நிறைவேறும்.

9-ஆம் இடம் தகப்பனார் ஸ்தானம். 5-ஆம் இடம் பிள்ளைகள் ஸ்தானம். பெற்றோர்- பிள்ளைகளுக்கு இடையில் கடந்த காலத்தில் நிலவிய பனிப்போர் விலகி அன்யோன்னியமும் இணக்கமும் நெருக்கமும் உண்டாகும். ஒருவருக்கொருவர் அனுசரணையாகவும் ஆதரவாகவும் இருப்பார்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகளில் இருந்த சிக்கலும் தீர்ந்துவிடும்.

பிள்ளைகளின் உத்தியோக வகையில் உள்ள சங்கடங்களும் சஞ்சலங்களும் தீர்ந்து பதவி உயர்வு, ஊதிய உயர்வு முதலிய நன்மை உண்டாகும். அதுமட்டுமல்ல; உள்ளூரில் படிப்புக்கும் திறமைக்கும் ஏற்ற வேலையோ சம்பளமோ இல்லாதவர்களுக்கு வெளிநாட்டு வேலையும் கைநிறைய சம்பளமும் கிடைக்கும். அத்துடன் என்.ஆர்.ஐ கடன் வாங்கி சொந்த ஊரில் வீடு கட்டும் திட்டமும் நிறைவேறும். தாய்மாமன் அல்லது பெண்கொடுத்த மாமனார் வகையில் கசப்பு நீங்கி இனிப்பு ஏற்படும். கருத்து வேறுபாடுகள் நீங்கி கருத்தொற்றுமை ஏற்படும். கொடுக்கல்- வாங்கல் நாணயம் கெடாதபடி செயல்படும். தடைப்பட்ட காரியங்கள் கைகூடும். ஏற்கெனவே இழந்த இழப்புகளை ஈடுசெய்யலாம்.

ராகுவுக்கு ஆதரவாக கேது 11-ல் நின்று ஜென்ம ராசியையும் 5-ஆம் இடம், 9-ஆம் இடங்களையும் பார்ப்பதால் தொழில் லாபம், வரவு- செலவு, பணப்புழக்கம் தாராளமாக அமையும். தெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேறும். குலதெய்வ வழிபாடு முறையாகச் செயல்படும்.

கடந்த காலத்தில் 6-ல் இருந்த ராகுவாலும் 12-ல் இருந்த கேதுவாலும் தொழில் முறையாக நடந்து, வருமானம் சரியாக அமையாததால், கடனுக்குமேல் கடன் வாங்கி வட்டித் தொகையும் அதிகமாகி, வட்டிகட்டவும் கடன் வாங்கி பெரும்பள்ளத்தில் உங்களைத் தள்ளிவிட்டது. அதிகமான மின்வெட்டு காரணத்தால் தொழில் உற்பத்தியும் சரிவர அமையவில்லை. இதெல்லாம் கடந்தகால அனுபவங்கள். இந்த ராகு- கேது பெயர்ச்சிக்குப் பிறகு இந்த அவல நிலைக்கு நல்ல தீர்வு உண்டாகும். மின்பற்றாக்குறை நீங்கும். தொழில் உற்பத்தி சரியாகும். தயாரிப்புக்குமேல் விற்பனையும் அதிகமாகும். சிலர் ஏற்றுமதித் துறையிலும் தீவிர கவனம் செலுத்தலாம். சிலர் வெளிமாநில வர்த்தகத் தொடர்பால் கணிசமான லாபம் பார்க்கலாம்.

தொழில் மந்தம், வேலையாள் ஒத்துழைப்புக் குறைவு, சிப்பந்திகள் பிரச்சினை என்று வேதனைப்படுகிறவர்கள் கும்பகோணம் குடவாசல் சேங்காலிபுரம் சென்று தத்தாத்ரேயர் கோவிலில் கார்த்த வீர்யார்ஜுன யந்திரத்துக்கு பூஜை போட வேண்டும். தென்னிந்தியாவில் இங்கு மட்டுமே கார்த்த வீர்யார்ஜுன யந்திரம் இருக்கிறது. அதேபோல உலகத்திலேயே கார்த்த வீர்யார்ஜுனருக்கு சிலையும் தனிச் சந்நிதியும் வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் மட்டுமே உள்ளது. கார்த்தவீர்யார் ஜுனருக்கு ஆயிரம் கைகள். ஆரம்பத்தில் தீவிர சிவபக்தனாக விளங்கிய கார்த்தவீர்யார்ஜுனன், தத்தாத்ரேயர் அவதாரத்துக்குப் பிறகு தத்தாத்ரேயரின் சீடனாக மாறிவிட்டான். தத்தாத்ரேயரை வழிபட்டால் ஜென்ம வினைகளும் பாவங்களும் போகும். புத்திர பாக்கியம் உண்டாகும். மனதில் மகிழ்ச்சியும் நிறைவும் ஏற்படும். மனோவியாதியும் குணமாகும். கார்த்தவீர்யார்ஜுனரை வழிபட்டால் திருடுபோகாது. களவுபோன பொருள்களும் காணாமல்போன பொருள்களும் கிடைக்கும். தொழில் துறையில் நல்ல வேலைக்காரர்களும், விசுவாசமும் உண்மையும் உள்ள ஊழியர்களும் அமைவார்கள்.

தத்தாத்ரேயர் மந்திரம்

"ஓம் ஆம் ஹ்ரீம் க்ரோம் ஏஹி
தத்தாத்ரேயா நமஹா.'
கார்த்தவீர்யார்ஜுன மந்திரம்
"ஓம் கார்த்த வீர்யார்ஜுனோ நாமராஜா
பாஹூ ஸஹஸ்ரவான் தஸ்ய ஸ்மரண
மாத்ரேண கதம் நஷ்டம் ச லப்யதே ஓம்.'

11-ஆம் இடத்துக் கேது கடல் கடந்து வேலைக்குப் போய் சம்பாதிக்கும் யோகத்தையும் தருவார். அயல்நாட்டு வர்த்தகத் தொடர்பால் வியாபாரிகள் அதிக லாபத்தை அடையவும் வழிவகுப்பார். 11-ஆம் இடம் உபயகளஸ்திர யோகத்தையும் மூத்த சகோதரத்தையும் குறிக்கும். தாரம் இழந்தவர்களுக்கு மறுமணம் நடக்கும். தாரம் உள்ளவர்களுக்கும் சின்ன வீடு செட்டப் ஆகும். தசாபுக்திகள் சாதகமாக அமைந்தால் விதவைத் திருமணமும் அதனால் தனலாபமும் ஏற்படும். ஷேர் மார்க்கெட்டில் எதிர்பாராத லாபம் உண்டாகும். சிலருக்கு வெளிநாட்டு லாட்டரி பரிசும் கிடைக்கலாம்.

துலா ராகு 3-ஆம் பார்வையாக மிதுன ராசிக்கு 3-ஆம் இடத்தையும்; 7-ஆம் பார்வையாக 11-ஆம் இடத்தையும்; 11-ஆம் பார்வையாக 7-ஆம் இடத்தையும் பார்க்கிறார். 3-ஆம் இடத்தைப் பார்ப்பதால் சகோதர- சகோதரி வகையில் சகாயங்களையும் உதவிகளையும் நன்மைகளையும் எதிர்பார்க்கலாம். ஜாதக தசா புக்தி பாதகமாக இருந்தால் உடன்பிறந்தோர் வகையில் பிரச்சினைகளையும் சஞ்சலங்களையும் விரயத்தையும் சந்திக்க நேரும். அதற்கேற்ற பரிகாரங்களை செய்துகொள்ளவும். ராகு முஸ்லிம் கிரகம்; கேது கிறிஸ்துவ கிரகம் என்பதால், முஸ்லிம் அல்லது கிறிஸ்துவ நண்பர்களின் ஆதரவும் உதவியும் எதிர்பார்க்கலாம்.

ராகு 11-ஆம் இடத்தைப் பார்க்கும் பலனை முன்னரே குறிப்பிட் டோம். 7-ஆம் இடத்தை ராகுவும் சனியும் பார்ப்பதால் நாக தோஷம், சனி தோஷம். திருமணத் தடை, தாமதமாகும். பருவ வயதைக் கடந்த ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமணம் ஆகாமல் இருந்தால் ஆண் களுக்கு கந்தர்வராஜ ஹோமமும், பெண்களுக்கு பார்வதி சுயம்வரகலா ஹோமமும் செய்தால் ராகுவும் சனியுமே திருமணத் தடைகளைப் போக்கி கல்யாணத்தை நடத்தி வைப்பார்கள். ஜாதகத்தில் செவ்வாய், சனி சேர்க்கை, ராகு- கேது சம்பந்தம் ஏற்பட்டால் கலப்புத் திருமணம், காதல் திருமணம் எனப்படும். அந்த மாதிரி இருந்தால் ஆணானாலும் பெண்ணானாலும் காமோகர்ஷண ஹோமம் செய்து கலச அபிஷேகம் செய்யலாம். இவையெல்லாம் எனது குருநாதர் பள்ளத்தூர் குருக்கள் அய்யா சாஸ்திரங்களில் இருந்து கண்டுபிடித்து பல ஹோமங்கள் நடத்தி பலன்கள் கிடைத்ததை எங்களுக்கு உபதேசித்துள்ளார். அதைப் பின்பற்றி பள்ளத்தூர் அருள் நந்தி ஆசிரமத்திலும் காரைக்குடி செஞ்சை நாகநாத சுவாமி கோவிலும் செய்து வருகிறார்கள். இது தவிர தேவிப்பட்டினத்தில் மொட்டையர் மகன் சக்தி சீனிவாச சாஸ்திரிகளும் வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்திலும் மேற்படி பரிகார பூஜைகள் செய்கிறார்கள். யாருக்கு எது அண்மையோ- வசதியோ அங்கு அவரவர் விருப்பப்படி செய்து கொள்ளலாம்.

கேது ஜென்ம ராசியையும், 9-ஆம் இடத்தையும், 5-ஆம் இடத்தையும் பார்ப்பதால் உங்களுக்கு செல்வாக்கு, மதிப்பு, மரியாதை உண்டாகும். ஆன்மிகம்- ஆலயத் திருப்பணி, அறக்கட்டளை, தர்மகர்த்தா பொறுப்பு போன்ற பதவிகளும் அமையும். கௌரவம் ஏற்படும். குரு 5-க்கு 8-ல் மறைவதால், வாரிசு இல்லாதவர்கள் ஜாதகரீதியாகவும் உடல்ரீதியாகவும் இனி வாரிசுக்கு இடமில்லையென்றால் ஸ்வீகாரமாகவோ அல்லது அபிமான புத்திரராகவோ ஏற்றுக்கொள்ளலாம்.
ஒரு அனுபவ கதை! நகரத்தார் சமூகத்தில் வாலிப பருவத்திலும் பிள்ளையைக் கூட்டுவார்கள். அப்படி ஒரு செட்டியார் 24 வயதில் ஒரு ஜாதகரை, பெற்ற தாய்- தந்தைக்கு லட்ச ரூபாய் கொடுத்து தத்து எடுத்துக்கொண்டார். செட்டியாருக்கு கோடிக்கணக்கில் சொத்து. ஆண் வாரிசு இல்லை. ஒரே பெண்தான். அந்தப் பெண்ணுக்கு பருவ வயதில் ஒரு மகள். சுவீகார புத்திரனுக்கு மகள் வயிற்றுப் பேத்தியை மணம் முடித்துவிட்டால் சொத்து வெளியில் போகாது. தமக்குள்ளேயே இருக்குமென்பது செட்டியார் திட்டம். என் குருநாதரிடம் வந்து பேத்தி ஜாதகத்தையும் சுவீகார மகன் ஜாதகத்தையும் பொருத்தம் பார்த்தார். பெண் ஜாதகமும் பையன் ஜாதகமும் பொருத்தம் இருக்கிறது. ஆனால் பையன் ஜாதகத்தில் சில குறை- பெண் ஜாதகத்திலும் திருமண யோகம் தாமதமாகிறது. ஒருசில பரிகாரம் செய்துவிட்டு திருமணம் செய்தால் சிறப்பாக இருக்கும் என்றார். செட்டியாரோ செலவு செய்ய விருப்பம் இல்லாதவர். மகன் மாப்பிள்ளையிடம், "அய்யர் பணத்துக்கு ஆசைப்பட்டு பரிகாரம் அது இது என்று சொல்லுகிறார். பொருத்தம்தான் இருக்கிறதே, கல்யாணத்தை நடத்தி விடுவோம்' என்று தன் இஷ்டப்படி பஞ்சாங்கத்தில் முகூர்த்த நாளைப்பார்த்து 5-8 வரும் தேதியில் ஆடம்பரமாகச் செலவு செய்து திருமணத்தை நடத்தி விட்டார். சாந்திமுகூர்த்த நேரத்தில் பேத்தி அழுது கொண்டே வெளியில் வந்து அம்மாவிடம், "பாழும் கிணற்றில் தள்ளிவிட்டீர்களே. அவனுக்கு ஆண்மை இல்லையே' என்று கூறிவிட்டாள். செட்டியாருக்கு ஆத்திரம். இரண்டு லட்சம் போய்விட்டது. அவனை அடித்து போலீசில் ஒப்படையுங்கள் என்று கத்த ஆரம்பித்துவிட்டார். உடன் இருந்தவர்கள் சட்டப்படி தத்து எடுத்துவிட்டீர்கள். போலீசுக்குப் போனாலும் நீங்கள்தானே ஜாமீன் எடுக்கவேண்டும் என்று சமாதானம் கூறிவிட்டார்கள். ஜோதிடர் சொன்ன பரிகாரத்தைச் செய்ய செலவுக்கு யோசனை பண்ணி எவ்வளவு பெரிய கேவலத்தை இழப்பைத் தேடிக்கொண்டார் பாருங்கள்.

மொத்தத்தில் ராகு- கேது பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு அனுகூலமும் ஆதரவும் காட்டும். அம்மா அடித்தால் அப்பா அணைப்பதும் அப்பா அடித்தால் அம்மா அடைக்கலம் தருவதுமாக ராகுவால் ஏற்படும் துன்பங்களை கேது துடைப்பார்; கேதுவால் ஏற்படும் கெடுதல்களை ராகு போக்குவார்.

மிருகசீரிட நட்சத்திரக்காரர்களுக்கு:

இந்த ராகு- கேது பெயர்ச்சி வெற்றியையும் முன்னேற்றத்தையும் தரும். மிருகசீரிடம் செவ்வாயின் நட்சத்திரம். செவ்வாய் வீட்டில் 11-ல்தான் கேது நிற்கிறார்; ராகு பார்க்கிறார். வில்லங்கம் விவகாரத்திலும், வழக்குகளிலும் சாதகமான தீர்ப்பு எதிர்பார்க்கலாம். வைத்தீஸ்வரன் கோவில் சென்று முத்துக்குமார சுவாமியை வழிபடவும்.

திருவாதிரை நட்சத்திரக்காரர்களுக்கு:

திருவாதிரை ராகுவின் நட்சத்திரம். எனவே ராகு- கேது பெயர்ச்சி உங்களுக்கு எல்லா வகையிலும் பொல்லாப்புகளை விலக்கி பூரிப்பையும் யோகத்தையும் தரும். புத்திர பாக்கியம், திருமண யோகம் ஆகிய நற்பலன்களையும் செய்வார். கும்பகோணம் அருகில் திருநாகேஸ்வரம் சென்று வழிபடவும்.

புனர்பூச  நட்சத்திரக்காரர்களுக்கு:

இந்த ராகு- கேது பெயர்ச்சி முற்பகுதியில் சுமாரான பலன்களையும் பிற்பகுதியில் யோகமான பலன்களையும் செய்யும். புனர்பூசம் குருவின் நட்சத்திரம். குரு மிதுன ராசிக்கு 12-ல் மறைகிறார். ராகுவுக்கு 8-ல் மறைகிறார். கேதுவுக்கு 2-ல் இருக்கிறார். எனவே எதிர்பாராத தனப்ராப்தியும் ஏற்படும். எதிர்பாராத செலவுகளும் உண்டாகும். காரைக்குடி  திருப்பத்தூர் அருகில் பட்டமங்கலம் சென்று அட்டமாசித்தி தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும்.

ரிஷபம் (கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)



ரிஷப ராசி அன்பர்களே!

ரிஷப ராசிக்கு இதுவரை 7-ல் இருந்த ராகு இப்போது 6-ஆம் இடத்துக்கும் (துலா ராசிக்கும்); ஜென்மத்தில் இருந்த கேது இப்போது 12-ஆம் இடத்துக்கும் மாறியிருக்கிறார்கள்.

ஏற்கெனவே ராகுவும் கேதுவும் இருந்த இடங்கள் சாதகமும் இல்லை; பாதகமும் இல்லை என்று சொன்னாலும், பெரும்பாலும் ரிஷப ராசிக்காரர்களுக்கு கடந்த காலத்தில் கெடுதல்கள் நடந்ததாகக் கூறமுடியவில்லை. ரிஷப ராசிக்கு 12-ல் குரு நின்றாலும் ரிஷப ராசிக்கு ராஜயோகாதிபதியான சனி 5-ல் இருந்ததால் ஏதோ ஒருவகையில் உங்களுக்கு பாதிப்புகள் அணுகவில்லை. பிள்ளைகள் வகையில் ஒருசிலர் தொல்லைகளையும் துன்பங்களையும் அனுபவித்தாலும்,. குடும்பத்தில் சில குழப்பங்களையும் பிரச்சினைகளையும் சந்தித்தாலும் வெளிவட்டாரத்தில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் மங்கவில்லை; மாறவில்லை; மறையவில்லை என்றே சொல்லவேண்டும்.

ஜென்ம கேதுவும் சப்தம ராகுவும் ஒருசிலருக்கு தொழில் போட்டி, கடன் கவலை, பொறாமையாளர்களின் சகுனித் திட்டங்கள், சதிவேலைகள் தலைவலியைத் தந்திருந்தாலும் அதற்குக் காரணம் ராகு- கேது அல்ல என்பதையும், 12-ஆம் இடத்து குரு 4, 6, 8-ஆம் இடங்களைப் பார்த்ததே காரணம் என்றுதான் சொல்லவேண்டும். 6-ஆம் இடமும், 8-ஆம் இடமும் கெட்ட இடங்கள். அதை சுபகிரகமாகிய குரு பார்த்ததால் எதிரி, கடன், வைத்தியச் செலவு, போட்டி, பொறாமைகளை வளர்த்தது; அதிகப்படுத்தியது. இப்போது ராகு- கேது பெயர்ச்சிக்கு முன்னரே ஜென்மத்தில் குருவும் 6-ல் சனியும் மாறிவிட்டபடியால் நிவர்த்தி உண்டாகிறது.

6-ஆம் இடத்துக்கு வந்திருக்கும் ராகுவும் 12-ஆம் இடத்துக்கு வந்திருக்கும் கேதுவும் அப்படியென்ன பெரிதாக சாதிக்கப் போகிறார்கள் என்று தோன்றும். ராகுவும் கேதுவும் பாவ கிரகங்கள்-குரூர கிரகங்கள். அவர்கள் எந்த இடத்தில் இருக்கிறார்களோ அந்த இடத்துப் பலன்களைக் கெடுப்பார்கள். 6-ஆம் இடம் எதிரி, கடன், வைத்தியச் செலவு, போட்டி, பொறாமை ஆகியவற்றைக் குறிக்கும் இடம். மேற்கண்ட பலன்களை ராகு கெடுப்பதால் எதிரி கெட்டுப் போவான்; கடன் கெட்டுப்போகும்; வைத்தியச் செலவு கெட்டுப்போகும்; போட்டி பொறாமை ஆகிய கெடுதல் எல்லாம் கெட்டுப்போகும். அது ஜாதகருக்கு அனுகூல பலன்தானே! அதேபோல 12-ஆம் இடம் விரயம். அதைக் கேது கெடுக்கும் என்பதால், விரயம் கெடுவதால் செலவு இல்லை என்று அர்த்தம். செலவு இல்லையென்றால் சேமிப்புதானே. அதாவது கெட்ட இடத்தில் கெட்ட கிரகம் வந்தால் கெடுபலன் இல்லாமல் போவதால்- நன்மை உண்டாகிறது. (டபுள் மைனஸ்= பிளஸ்). அதுமட்டுமல்ல, சனி, ராகு- கேது ஆகிய கிரகங்களுக்கு 3, 6, 11 தான் யோகம் தரும் இடங்களாகும்.

ராகு 11-ல் இருக்கும் இக்காலம் சனியும் உச்சமாக 6-ல் இருப்பதால் 6-ஆம் இடத்துக் கெடுபலன் மறையும். ராகுவும் சனியும் 12-ஆம் இடத்தைப் பார்ப்பதோடு, 12-ல் கேதுவும் 6-ஆம் இடத்தைப் பார்ப்பதால் விரயமும் வெட்டிச் செலவும் மறையும். ரிஷப ராசிக்கு சனி ராஜயோகாதிபதி என்பதால், 12-ஆம் இடம் என்பது சுபவிரயத்தைக் குறிக்கும் இடமாக மாறிவிடும். சுப மங்களச் செலவை ஏற்படுத்தும். திட்டங்கள் எல்லாம் நிறைவேறும்.

துலா ராசியில் வந்திருக்கும் ராகு (6-ல் இருந்து) 3-ஆம் பார்வையாக 4-ஆம் இடத்தையும்; 7-ஆம் பார்வையாக 12-ஆம் இடத்தையும்; 11-ஆம் பார்வையாக 8-ஆம் இடத்தையும் பார்க்கும். அதேபோல கேது 12-ல் (மேஷத்தில்) இருந்து 3-ஆம் பார்வையாக ரிஷப ராசிக்கு 10-ஆம் இடம் கும்பத்தையும்; 7-ஆம் பார்வையாக 6-ஆம் இடம் துலாத்தையும்; 11-ஆம் பார்வையாக 3-ஆம் இடம் மிதுனத்தையும் பார்க்கக்கூடும்.

ராகு 12-ஐப் பார்ப்பதால் சுபச் செலவும் சுபவிரயங்களும் உண்டாகும். பூமி, வீடு வாகனம், சுகம், கட்டட சீர்திருத்தம் சம்பந்தமான செலவுகள் சுபச் செலவுகள் ஆகும். 12 என்பது அயன சயன சுக போக ஸ்தானமாகும். அங்கு கேதுவும் இருப்பதால் அது சம்பந்தமான சுபச்செலவுகளும் உண்டாகும்.


எந்த சுகபோகத்தையும் செலவு செய்யாமல் அனுபவிக்க முடியாது. வடிகட்டின கஞ்சன்  செலவு செய்ய அஞ்சினால் அவனால் எந்த சுகபோக சௌக்கியத்தையும் அனுபவிக்க முடியாது. நல்ல சாப்பாடு வேண்டுமானாலும், ஏ.சி.கார் அல்லது ஏ.சி.கோச்சில் போக வேண்டுமென்றாலும் அதிகமாகத்தான் செலவாகும். இவையெல்லாம் ஆடம்பரச் செலவுகள்- அனாவசிய தேவைகள் என்று நினைத்து ஆசைகளைக் கட்டுப்படுத்திக்கொண்டால் சுகபோகத்தை ஜாலியாக என்ஜாய் பண்ணமுடியாது. ரேஷன் அரிசி ஒரு ரூபாய்க்கு வாங்கிச் சமைத்தால் ருசி இருக்காது. ஆனால் நாற்பது ரூபாய்க்கு பொன்னி அரிசி வாங்கிச் சமைத்தால் அதன் ருசியே தனி. இருப்பவன் சாப்பிடாமல் இருந்தால் விரதம்! இல்லாதவன் சாப்பிடாமல் இருந்தால் பட்டினி! சுகபோகங்களைத் தியாகம் செய்தால் மனப்பக்குவம்! சுகபோகங்கள் அனுபவிக்க வசதியில்லாதவன் ஆசைப்பட்டால் கடன் வாங்கவேண்டும் அல்லது தப்பு செய்யவேண்டும். தப்பு செய்தால் பாவம்! பாவத்தின் சம்பளம் தண்டனை! மனப்பக்குவம் இருந்தாலும் மனக்கட்டுப்பாடு வந்தாலும் ஞானம்! ஞானம் பெற்றவர்களுக்கு மறுபிறவி இல்லை. 12-ல் கேது இருந்தால் மறுபிறவி இல்லை என்பது ஜோதிட விதி. ஆனால் 12-ல் கேது இருப்பவர்களுக்கு எல்லாம் மறுபிறவி இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால் ஞானம் உடையவர்களுக்கும் ஆசைகளைத் துறந்தவர்களுக்கும்தான் மறுபிறவி இல்லை. ஆயிரக்கணக்கான பேராசைகளையும், சாகப்போகும் காலத்திலும் பந்தம், பாசம், சொந்தம் என்று சபலப்பட்டு, சாகப் போகிறோமே என்று பயந்து பயந்து சாக மனமில்லாதவர்களுக்கும் 12-ல் கேது இருந்தால் மறுபிறவி இல்லாமல் போகுமா? பிறவிக்குக் காரணம் ஆசை என்றுதான் புத்தர் போன்ற மகான்கள் போதிக்கிறார்கள். எனவே 12-ல் கேதுவும் அவரை ராகுவும் பார்ப்பதால், அறவழி, தர்ம நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கலாம். அப்படிப்பட்ட தர்ம செலவுகளைச் செய்தால் புண்ணியம் கிடைக்கும். மது, மாது, சூது போன்ற வகையில் அதர்மச் செலவுகளைச் செய்தால் பாவம் ஏற்படும்!

8-ஆம் இடம் என்பது விபத்து, வேதனை, இழப்பு, ஏமாற்றம், நஷ்டம், எதிர்பாராத சங்கடம், கௌரவப் பிரச்சினை, ஆயுள் மாரகம் ஆகியவற்றைக் குறிக்கும் இடம். அந்த வீட்டை ராகு பார்ப்பதால் அவற்றை அழிப்பார். ஒழிப்பார். அந்த வீட்டை சனியும் பார்ப்பதால் 8-ஆம் பாவக் கெடுதல்கள் எல்லாம் செயலற்றுப்போகும். அத்துடன் 4-ஆம் இடத்தையும் (சிம்மத்தை) ராகு பார்ப்பதால் சிலருடைய ஆரோக்கியத்துக்கு பிரச்சினை ஏற்படும். உடல்நலக் குறைவு, தாய்க்குப் பீடை, பூமி, வீடு வாகனம் சம்பந்தமான பிரச்சினைகளைச் சந்திக்கலாம். முன்னதாக ராகு பார்வையால் 4-ஆம் பாவம் சம்பந்தமான சுபச்செலவுகள் என்று குறிப்பிட்டோம். அதனால் ஜாதக தசா புக்திகள் யோகமாக இருந்தால் சுபச்செலவுகளும், மோசமாக இருந்தால் வீண் செலவுகளும் ஏற்படுமென்று கருதவேண்டும்.

ரிஷப ராசிக்கு 10-ஆம் இடம் தொழில் ஸ்தானத்தை 12-ல் உள்ள கேது பார்ப்பதோடு, தொழில் ஸ்தானாதிபதி சனியையும் பார்ப்பதால் தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் கைகூடும். படித்து முடித்துப் பட்டம் பெற்றும் வேலையில்லாமல் தடுமாறியவர்களுக்கு உடனடியாக வேலை யோகம் உண்டாகும். வெளிநாடு அல்லது வெளிமாநில வேலை வாய்ப்புக்கும் இடம் உண்டாகும். தொழில், வாழ்க்கை, உத்தியோகத்தில் பிரச்சினைகளும் கவலைகளும் ஒருபுறம் இருந்தாலும்- சைலன்ஸர் கரும்புகையைக் கக்கினாலும் இஞ்சின் கடாமுடா சத்தம் எழுப்பினாலும் பிரேக் டவுன் ஆகாமல் ஓடும் வாகனம்போல உங்களுடைய 10ஆம் பாவம் வாழ்க்கை, தொழில், உத்தியோகம் தேக்கமில்லாமல் ஓடும். 10-ஆம் பாவம் சனி வீடு- அவர் நிற்பது சுக்கிரன் வீடு. எனவே இரும்பு, மிஷினரி, வாகனம், யந்திரம் சம்பந்தப்பட்ட சனியின் தொழில்களும்; ஆடை, அலங்காரம், ஜவுளி, டெக்ஸ்டைல், பவர்லூம், வேஸ்ட்காட்டன், ஆபரணம், வாசனைப் பொருள்கள், சினிமா, சின்னத்திரை, கேபிள் டி.வி போன்ற சுக்கிரனின் தொழில்களும் மிகச்சிறப்பாக இயங்கும்.

கேது 10-ஆம் இடத்தைப் பார்ப்பதாலும், ரிஷப ராசிக்கு 11-ஆம் இடத்ததிபதி குரு ஜென்ம ராசியில் நிற்பதாலும், 10-க்கு லாபஸ்தானத்தை (தனுசுவை) ராகுவும் பார்ப்பதாலும், எந்தத் தொழில் செய்தாலும் அந்தத் தொழில் லாபகரமாகவும் முன்னேற்றகரமாகவும் ஆதாயமாகவும் அமையும். அதேபோல உத்தியோகம், வேலையில் இருப்போருக்கும் முன்னேற்றகரமான திருப்பங்கள் உண்டாகும். 10-க்குடையவர் சனி 10-க்கு 9-ல் (பாக்கியத்தில்) உச்சம் பெறுவதும் உங்களுக்கு அனுகூலமான நிலைதான். அவர் ராகு- கேது சம்பந்தம் பெறுவதால் முஸ்லிம் அல்லது கிறிஸ்துவ சமூகத்தினருடன் பார்ட்னர்ஷிப் ஏற்படவும் இடமுண்டு. சிலர் வெளிநாட்டு வர்த்தகத் தொடர்பும் வைத்துக்கொள்ளலாம்.

ராசிக்கு 6-ல் சனி, ராகு சேர்க்கையும்; அதற்கு கேது பார்வை என்பதாலும் தொழில் வகைக்கோ அல்லது வீடு, வாகன, காலியிடத்துக்காகவோ கடன்கள் வாங்கலாம். நீண்டகாலத் தவணைக் கடன்கள் கிடைக்கும். அது சுபக்கடன். சில மாணவர்களுக்கு, கல்விக் கடனும் கிடைக்கும். ஜாதகத்தில் 6, 8, 12-க்குடைய சம்பந்தம் உள்ள தசாபுக்திகள் நடந்தால் வைத்தியச் செலவுக்காக கடன் வாங்க நேரும். அல்லது தங்க நகைகளை அடகுவைத்துப் பணம் புரட்டலாம். அப்படிப்பட்ட நிலை இருந்தால் நோய்நிவர்த்திக்கு வாலாஜாபேட்டை அருகில் தன்வந்திரி ஆரோக்கிய பீடம் சென்று தன்வந்திரி ஹோமம் செய்யவும்.

"ஓம் நமோ பகவதே வாசுதேவாய
தன்வந்த்ரயே அம்ருதகலச ஹஸ்தாய
ஸர்வ ஆமய விநாசநாய த்ரைலோக்ய
நாதாய ஆரோக்யலட்சுமி ஸமேத
தன்வந்த்ரயே மஹா விஷ்ணவே நம':

என்பது தன்வந்திரி பகவானின் மூலமந்திரம். கல்விக்கு சரசுவதி- செல்வத்துக்கு மகாலட்சுமி- வீரத்துக்கு துர்கை என்பதுபோல ஆரோக்கியத்துக்கும் நோய் நிவர்த்திக்கும் தன்வந்திரிதான் கடவுள். இந்த மந்திரத்தை தினமும் 108 முறை ஜெபம் செய்தால் நோய் அணுகாது.


அதேபோல கடன் நிவர்த்திக்கு கும்பகோணம் அருகில் திருச்சேறை என்ற ஸ்தலத்தில் கடன் நிவர்த்தீஸ்வரர் கோவில் இருக்கிறது. சாரபரமேஸ்வரர் சந்நிதி! அங்கு 11 திங்கள்கிழமை தாரித்ரிய தஹன சிவஸ்தோத்திரம் (10 பாடல்கள்) சொல்லி, ஈஸ்வரனுக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்தால் கடன் நிவர்த்தியாகும், உடனே அசலைக் கட்டமுடியாவிட்டாலும் வட்டியை ஒழுங்காகக் கட்டலாம். கடன் கொடுத்தவர்களின் விரட்டுதல் இருக்காது. நேரில் போக முடியாதவர்கள் எஸ். சுந்தரமூர்த்தி குருக்கள், தெற்குவீதி, திருச்சேறை- 612605 என்ற முகவரிக்கு தொடர்பு கொண்டு அர்ச்சனைக்கு ஏற்பாடு செய்யலாம். செல் 94426 37759: 94437 37759-ல் தொடர்பு கொள்ளலாம்.

திருவாரூரிலும் கடன் நிவர்த்தீஸ்வரர் சந்நிதி இருக்கிறது. தியாகராஜர் சந்நிதிக்கு வடபுறம் உள்ளது. ஆரம்பத்தில் அங்குதான் திங்கள் கிழமை தோறும் அபிஷேகம் செய்து, தாரித்ரிய தஹன சிவதோத்திரத்தைச் சொல்லி அர்ச்சனை செய்தார்கள். அதைப் பார்த்துதான் திருச்சேறையில் பிற்பாடு செயல்பட்டார்கள். தற்போது திருச்சேறையில் மிகவும் சிறப்பாக அபிஷேகம், அர்ச்சனை, பூஜை நடக்கிறது.

கார்த்திகை நட்சத்திரக்காரர்களுக்கு:

இந்த ராகு- கேது பெயர்ச்சி அனுகூலமான பலனைத் தருமென்று எதிர்பார்க்கலாம். ராகுவும் கேதுவும் சூரியனுக்கும் சந்திரனுக்கும் பகைவர்கள் என்றாலும், சூரியன் வீடான சிம்மத்தை ராகு பார்ப்பதாலும்; சூரியனின் உச்ச வீடான மேஷத்தில் கேது நிற்பதோடு சிம்ம ராசிக்கு 9-ல் திரிகோணத்தில் இருப்பதாலும் தற்காலிக நட்பு கிரகங்கள்போல ஆவார்கள். அதனால் சூரியன் நட்சத்திரமான கார்த்திகையில் பிறந்தவர்களுக்கு அதிக அளவில் நன்மைகள் செய்யாவிட்டாலும் நிச்சயம் கெடுதல் செய்யமாட்டார்கள் என்று நம்பலாம். ஆளும் கட்சிக்காரர்களும் எதிர் கட்சிக்காரர்களும் விமான நிலையத்தில் ஜனாதிபதியை வரவேற்கப் போகும்போது வணக்கம் சொல்லிக் கொள்வார்களே தவிர சண்டை போட்டுக் கொள்ளமாட்டார்கள் அல்லவா! ரிஷப ராசிக்கு சூரியன் 4-க்குடையவர் என்பதால் தேக ஆரோக்கியத்தில் தெளிவு ஏற்படும். சிலருக்கு வீடு மாற்றம் ஏற்படலாம். சிலருக்கு பதவி மாற்றம் ஏற்படலாம். சிலர் சொந்த நிலம், பூமி, மனை, வாகனம் வாங்கலாம். மாணவர்களுக்கு கல்வி மேன்மையும் பரீட்சையில் முன்னேற்றமும் வெற்றியும் உண்டாகலாம். தாயின் அன்பும் ஆதரவும் உண்டாகும். தஞ்சாவூர் அருகில் (ஒரத்தநாடு வழி) பரிதியப்பர் கோவில் என்ற ஊரில் பாஸ்கரேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. சூரியன் ஈஸ்வரனை வழிபட்டு சாப விமோசனம் அடைந்த தலம். அங்கு ஞாயிற்றுக்கிழமை சென்று வழிபடலாம். அபிஷேக பூஜை, அர்ச்சனை செய்யலாம். பிதுர்தோஷம் நிவர்த்தியாகும்.

ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு:

ரோகிணி சந்திரனின் நட்சத்திரம். சந்திரன் உங்கள் ராசியான ரிஷபத்தில்தான் உச்சம். சந்திரனின் வீடான கடகத்துக்கு 4-ல் ராகுவும் 10-ல் கேதுவும் இருக்கிறார்கள். ஆனால் ரிஷப ராசிக்கு 6-ல் ராகுவும் 12-ல் கேதுவும் அமைகிறார்கள். எனவே தொழில், குடியிருப்பு, வாகன யோகம் வகையில் சுபச்செலவும் கடனும் உண்டாகும். அது சுபக்கடன்; சிலருக்குக் கல்விக் கடன் அமையும். தாய்- பிள்ளை உறவில் இணைவும் பாசமும் உண்டாகும். ஜாதக யோகம் இருந்தால் கடல்கடந்து வெளிநாட்டுக்குப் போய் வேலை பார்க்கலாம். கும்பகோணத்துக்கும் திருவையாறுக்கும் இடையில் திங்களூர் என்ற ஊர் உள்ளது. சந்திரன் வழிபட்ட தலம். அப்பர் அடிகளின் சீடர் அப்பூதி அடிகள் இங்குதான் தண்ணீர்ப்பந்தல், கல்விக்கூடம், தர்மசத்திரம் போன்ற பல நல்ல காரியங்களைச் செய்தார். எல்லாவற்றுக்கும் அப்பர் அடிகள் பெயரையே வைத்தார். எதிர்பாராமல் அவ்வூருக்கு வந்த அப்பர் அடிகள் தன் பேரில் தர்ம கைங்கர்யங்களைக் கண்ணுற்று அப்பூதி அடிகளைத் தேடிப் போனார். அப்பூதி அடிகள் அவருக்கு விருந்து படைக்க விரும்பினார். வாழை இலைபறிக்கப் போன அப்பூதி அடிகளின் மகனை பாம்பு தீண்டி இறந்து போனான். அதை மறைத்து குருநாதருக்கு இலைபோட்டு பரிமாற, அப்பர் சுவாமிகள் அப்பூதி அடிகளின் மகனுக்கும் இலைபோட வற்புறுத்த, "அவன் இங்கு உதவான்' என்று பெற்றோர் அழுதார்கள். உண்மையறிந்த அப்பர் இறந்துபோன சிறுவனின் உடலை எடுத்துச்சென்று திங்களுர் சிவன் சந்நிதியில் கிடத்தி, சிவனிடம் மன்றாடிப் பிரார்த்தித்தார். அப்பூதி அடிகளின் மகன் உயிர் பெற்றெழுந்தான். இப்படி அற்புதத் திருவிளையாடல் நடந்த திருத்தலம்! திங்கள்கிழமை சென்று பாலாஷேகம் செய்து வழிபடலாம். அல்லது ருத்ர ஹோமம் செய்து ருத்ராபிஷேகம் செய்யலாம். 

மிருகசீரிட நட்சத்திரக்காரர்களுக்கு:

மிருகசீரிடம் செவ்வாயின் நட்சத்திரம். செவ்வாயின் வீடான மேஷத்தில்தான் கேது நிற்கிறார். அந்த வீட்டை ராகுவும் சனியும் பார்க்கிறார்கள். ரிஷப ராசிக்கு செவ்வாய் 7, 12-க்குடையவர். இந்த ராகு கேது பெயர்ச்சியில் திருமணமாகாத ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமணம் கைகூடும். கடந்த காலத்தில் ரிஷப ராசிக்கு 7-ல் ராகுவும் ஜென்மத்தல் கேதுவும் நின்று நாகதோஷத்தை ஏற்படுத்தி திருமணத் தடையை ஏற்படுத்தினர். இப்போது விலகிவிட்டதால் ராகு- கேது தோஷம் விலகிவிட்டது. அப்போது நீங்கள் செய்த பரிகார பூஜைகளுக்கெல்லாம் இப்போதுதான் பலன் உண்டாகும். எந்த ஒரு பூஜைக்கும் பிரார்த்தனைக்கும் உடனே பலன் கிடைக்காது. "அடுத்து முயன்றாலும் ஆகும் நாளன்றி எடுத்த கருமங்கள் ஆகா; தொடுத்து உருவத்தால் உயர்ந்த நீண்ட மரங்களும் பருவத்தால் அன்றிப் பழா' என்பது பாடல். அதற்குரிய காலம் நேரம் கனியும்போது எல்லாம் நிறைவேறிவிடும்.  கேது ஜென்மத்திலும்  ராகு ஏழிலும் இருந்த காலம் குரு 12-ல் மறைந்திருந்ததால் உங்கள் பிரார்த்தனை நிறைவேறவில்லை, இப்போது ரிஷபத்தில் குரு அமர்ந்து 7-ஆம் இடத்தைப் பார்ப்பதால் இப்போதுதான் அதற்குரிய காலம் கனிந்துள்ளது. பலனும் கைமேல் கிடைக்கும். வைத்தீஸ்வரன் கோவில் சென்று முத்துக்குமார சுவாமியை வழிபட வேண்டும்.

#கர்மவினையைவெல்ல.....தொடர்சி..3

# கர்மவினையைவெல்ல .....தொடர்சி..3 # காலபுருஷதத்துவமும்  கர்மாவும் : கால புருஷ தத்துவப்படி 12 இராசிகளும் தர்ம, கர்ம, காம மற்றும் மோட்ச ...