Wednesday, November 28, 2012

கடகம் (புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)



கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

கடக ராசி அன்பர்களே!

கடந்த ஒன்றரை வருடங்களாக கடக ராசிக்கு 5-ல் இருந்த ராகு இப்போது 4-ஆம் இடத்துக்கு மாறி இருக்கிறார்; 11-ல் இருந்த கேது இப்போது 10-ஆம் இடத்துக்கு மாறியிருக்கிறார். ஏற்கெனவே ராகு இருந்த இடம் மிக நல்ல இடம்தான். அதைவிட மிகமிக நல்ல இடம் கேது இருந்த 11-ஆம் இடம். ராகுவும் கேதுவும் நல்ல இடங்களில் இருந்தும் நீங்கள் எதிர்பார்த்த அளவுக்கு நல்லதைச் செய்தார்களா என்றால், முழுமையான நல்லது செய்யவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

மிக மிகத் திருப்தியாக பரீட்சை எழுதிய மாணவன், நூற்றுக்கு தொன்னூறு மார்க் வாங்கி தேர்வு பெறுவேன் என்று மார்தட்டியவன் நூற்றுக்கு அறுபது மார்க் வாங்கினால் எப்படியிருக்கும்? பாஸ் செய்து விட்டாலும்  மெரிட் இல்லாமல் போயிற்றே என்ற ஏக்கம் இருக்கு மல்லவா! இதற்கு என்ன காரணம்? பரீட்சைத் தாள்களைத் திருத்திய ஆசிரியர் கவனக் குறைவாகவோ அல்லது மனைவி, குடும்பத்தின் மேலிருந்த கோப தாபத்தாலோ மார்க்கை குறைத்துப் போட்டுவிட்டாரோ? அல்லது எழுதிய விடைத் தாள்களில் இரண்டொருபக்கம் காணாமல் போய்விட்டதோ? அல்லது அவசரம் அவசரமாக விடை எழுதியதால் எழுத்துகள் ஆசிரியருக்கு விளங்காமல் கோழி மாதிரி கிறுக்கியிருக்கானே என்று ஆத்திரம் ஏற்பட்டதோ என்றெல்லாம் சந்தேகம் எழுவது மாதிரிதான், நல்ல இடத்தில் இருந்த ராகு- கேது முழுமையான நல்லதைச் செய்யாமல் ஏமாற்றி விட்டன என்ற சந்தேகத்தை எழுப்பிவிட்டது.

அதற்காக வருத்தப்பட வேண்டாம். மறுபடியும் ரீகவுண்டிங் செய்ய பணம் கட்டி, பரீட்சை தாள்களை மறுபரிசீலனை செய்யவைத்து எதிர்பார்த்த மாதிரி தொன்னூறு மார்க்கை ஒட்டி வாங்கி மெரிட் அடையும் மாணவனைப் போல- கேந்திரஸ்தானங்களில் வந்துள்ள ராகுவும் கேதுவும் அன்று செய்யத் தவறிய யோகங்களையும் சேர்த்து இனிமேல் செய்துவிடும். உங்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் நெகிழ்ச்சிடையச் செய்யும்.

ஏற்கெனவே நல்ல இடத்தில் இருந்த ராகுவும் கேதுவும் அந்த நல்ல பலனைச் செய்யத் தவறியதற்கு காரணம் 10-ஆம் இடத்து குருவும், கன்னிச் சனியும்தான்! "பத்தாமிடத்து குரு பதிமாறச் செய்யும்' என்று ஒரு பழமொழி உண்டு. அதேபோல கடக ராசிக்கு 8-க்குடைய சனி ராகுவை மூன்றாம் பார்வை பார்த்தது ஒரு காரணம்! இப்போது 9-க்குடைய குரு 11-ல் இருப்பதாலும், சனி 4-ல் உச்சம் பெற்று ராகுவோடு சேர்ந்திருப்பதாலும் ராகு- கேது இழந்த நற்பலன்களை மீண்டும் செய்யக் கூடும் என்று எதிர்பார்க்கலாம்.

4-ஆம் இடம் பூமி, வீடு, வாகனம், சுகம், தாய், கல்வி ஆகியவற்றைக் குறிக்கும். அங்கு ராகு நிற்கிறார். அந்த வீட்டுக்கு யோககாரகன் 4-ல் உச்சம் பெற்று ராகுவோடு கூடியிருக்கிறார். எனவே கல்வித் தடை நீங்கும். மேற்படிப்பு தொடரும். பூமி, வீடு, வாகன சம்பந்தமான சுபச்செலவுகள் ஏற்படும். சிலர் பழைய வாகனத்தைக் கொடுத்து புதிய வாகனத்தை வாங்கலாம். பழைய வீட்டை இடித்துவிட்டு புதிய கட்டடமாகச் சீர்திருத்தி வாஸ்துப்படி கட்டலாம். அல்லது புதிதாகக் கட்டிய வீட்டை வாங்கலாம். எந்த ஒரு வீட்டுக்கும் 5-ஆம் இடமும் 9-ஆம் இடமும் அந்த வீட்டுக்கு யோகஸ்தானங்கள் ஆகும். அந்த வீட்டில் இருக்கும் கிரகமும் அல்லது அதைப் பார்க்கும் கிரகமும் அந்த வீட்டுக்கு யோகம் செய்யும்; நல்லதைச் செய்யும். அதேபோல அந்த வீட்டுக்கு 6, 8, 12-ஐப் பார்க்கும் கிரகமும், 6, 8, 12-ல் இருக்கும் கிரகமும் அந்த வீட்டுக்கு கெடுபலனைச் செய்யும். இந்த விதி ஜாதக திசாபுக்திகளுக்கும் பொருந்தும். இதன்படி கடக ராசிக்கு 4-ஆம் இடத்துக்கு 5-ஆம் இடத்தையும், 9-ஆம் இடத்தையும் கேது பார்க்கிறார். அதனால் 4-ஆம் பாவ சம்பந்தமான எல்லா யோகங்களையும் கேது தருவார் என்பது உண்மை!

அதேபோல 2-ஆம் இடமாகிய சிம்ம ராசிக்கு 5-ஆம் இடத்தையும், 9-ஆம் இடத்தையும் (தனுசு- மேஷம்), ராகுவும் பார்க்கிறார். ராகுவோடு சேர்ந்த சனியும் பார்க்கிறார். எனவே வாக்கு, தனம், குடும்பம், வித்தை போன்ற 2-ஆம் இடத்துப் பலன்கள் யோகமாகவும் நன்மையாகவும் சனியும் ராகுவும் அமைத்துக் கொடுப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. படிப்பை பூர்த்தி செய்யாமல் அரியர்ஸ் வைத்திருப்பவர்களும், படிப்பை இடையில் நிறுத்தியவர்களும் மீண்டும் படிப்பைத் தொடரலாம் ; வெற்றி பெறலாம். ஒரு மாணவர் டிப்ளமோ ஆறு ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்பு டிகிரி படிப்பில் (பார்ட் டைம் ஈவினிங் காலேஜ்) சேர்ந்து பட்டம் பெற்றார் என்பது ஒரு அனுபவ உண்மையாகும்!

தாய்க்கும் பிள்ளைக்கும் கருத்து வேற்றுமை ஏற்பட்டு பிரிந்திருந்தவர்களும், இனி ஒருவரையொருவர் புரிந்துகொண்டு சேர்ந்து விடுவார்கள் என்பதும் ஒரு உண்மை! அல்லது மகள்கள் மேல் மட்டுமே பாசம் காட்டிய தாய்- மகனுக்கு எந்த சொத்துபத்தும் இல்லை என்று புறக்கணித்த தாய்- திருமண விஷயத்தில் மகள் தன் கருத்தைக் கேட்காமல் வேறு இனத்துப் பையனைக் காதலித்து கலப்புத்திருமணம் செய்துகொண்டு போனதால் மகளை வெறுத்து, மகனை ஆதரித்து அவருக்கே தன் சொத்து சுகம் எல்லாம் என்று எழுதி வைத்துப் பாசம் காட்டலாம். மகனும் சொத்து கொடுத்த தாயை மகராசி என்று பாசம் நேசம் காட்டி ஆதரிக்கலாம்.

4-ஆம் இடத்தைப் பார்க்கும் ராகு 10-ஆம் இடத்தையும் பார்ப்பதோடு 10-ல் உள்ள கேதுவையும் பார்க்கிறார். அதனால் படித்து முடித்து பல ஆண்டுகளாக வேலை, சம்பளம், வருமானம் என்று இல்லாமல் பெற்றோரிடம் பேட்டா வாங்கிச் செலவழித்து வந்தவர்களுக்கும் இனிமேல் இந்த ராகு- கேது பெயர்ச்சிக்குப்பிறகு நல்ல வேலையும் திருப்தியான சம்பளமும் அமையும். ஏழரைச் சனி நடந்த காலத்தில் வெளிநாட்டுக்குப் போய் எந்தப் பயனும் பலனும் அடையாமல் திரும்பிய ஒரு சிலருக்கு மீண்டும் வெளிநாட்டு வாய்ப்பும் வேலை யோகமும் உண்டாகும். தொழில், வேலை, உத்தியோகம் சம்பந்தமான நல்ல பல திட்டங்களும் முயற்சிகளும் தொடர்ந்து செயல்படும். கடக ராசிக்கு 10-க்கு 10க்குடைய சனி 4-ல் உச்சம் பெற்று 10-ஆம் இடத்தை (மேஷத்தை) பார்ப்பதால் சனி செய்ய வேண்டிய நற்பலன்களை அவரோடு சேர்ந்த ராகு செய்வார். சனியால் பார்க்கப்பட்ட கேதுவும் சேர்ந்து நல்லது செய்வார். இதுவரை தொழில் துறையில் நிலவிய தடைகளும் தொல்லைகளும் இனி தொடராது. 10-ஆம் இடத்துக்கு (மேஷத்துக்கு) பாக்யாதிபதியான குரு கடகத்துக்கு 11-ல் 10-ஆம் இடத்துக்கு 2-ல் இருப்பதால், தனமும் லாபமும் உங்களை வந்தடையும், சிலருக்கு 7க்குடையவர் சனி என்பதால் மனைவி வகையால் நன்மைகள் கிடைக்கும். வசதிவாய்ப்பு இல்லாத மனைவி என்றால்- மனைவி யோகத்துக்கு மனைவி பேரில் செய்யும் தொழில் வகையால் அல்லது மனைவிக்கே வேலைவாய்ப்பு கிடைப்பதன் மூலமாக ஏதோ ஒருவகையில் நன்மையும் ஆதாயமும் உண்டாகும். ஏற்கெனவே மனைவியைக் கூட்டாளியாகச் சேர்த்து செய்துவரும் தொழில்துறையிலும் கணிசமான லாபம் உண்டாகும். அல்லது வேறு இணைப்புத் தொழில் ஆரம்பிக்கலாம். அல்லது சிலர் மனைவி பேரில் இடம், ப்ளாட், வீடு, வாகனம் வாங்கலாம்.

துலா ராசியில் நிற்கும் ராகு-கடக ராசிக்கு 2-ஆம் இடத்தையும், 6-ஆம் இடத்தையும், 10-ஆம் இடத்தையும் பார்க்கிறார். மேஷ ராசியில் நிற்கும் கேது  கடக ராசிக்கு 12-ஆம் இடத்தையும், 8-ஆம் இடத்தையும், 4-ஆம் இடத்தையும் பார்க்கிறார்.

அதனால் கடன், எதிரி, போட்டி, பொறாமை போன்ற 6-ஆம் இடத்துப் பலன்கள் கெட்டுப் போவதால் உங்களுக்கு நன்மைதான். அதேபோல ஒரு சிலருக்குப் பழைய கடன்கள் அடைபட்டாலும் புதிய கடன் வாங்கி தொழில், சொத்து, சுகம், நகை, ஆடம்பரப்பொருள்கள், குடும்பத்துக்கு தேவையான பொருள்கள் வாங்கலாம். கட்டில், பிரிட்ஜ், பீரோ, சோபா செட், டைனிங் டேபிள் போன்ற வசதி வாய்ப்புகளைத் தேடிக்கொள்வதோடு, சிலர் வீட்டை ஏ.ஸி. மயமாக்கலாம். 6-ஆம் இடத்துக்குரிய குரு 11-ல் இருப்பதாலும், 7-ஆம் இடத்தைப் பார்ப்பதாலும் ஒரு பக்கம் புதிய கடன் வாங்கி மனைவியைத் திருப்திபடுத்தலாம். இன்னொரு பக்கம் பழைய கடனை அடைக்கவும் வழி வகைகளைத் தேடலாம். அப்படியென்றால் தொழில் வருமானம் திருப்திகரமாக அமையும் என்றுதானே அர்த்தம்! செலவு என்று வந்தால் வரவும் வரவேண்டுமல்லவா! இறைக்கிற கிணறுதானே ஊறும்.

ஜாதக தசாபுக்திகள் யோகமாக இருந்தால் கடன் வாங்குவதிலும் ஒரு நன்மையும் யோகமும் உண்டாகும். தசாபுக்திகள் மோசமாக இருந்தால் கடன் வாங்கி அதை திருப்பிச் செலுத்தமுடியாமல் வட்டி வாசியும் கட்ட முடியாமலும் வாக்கு நாணயம் தவறி, கேவலப்படும் அவல நிலையும் ஏற்படும். அதே மாதிரி எதிரி, கடன் நஷ்டம், வைத்தியச்செலவு என்று சஞ்சலப்படவும் நேரும். ஆக நல்லதும் கெட்டதும் ஒரே இடத்தில் ஒரே கிரகத்திடமே இருக்கிறது. தீக்குச்சி ஆக்கவும் பயன்படும், அழிவுக்கும் பயன்படும். கடல்நீர் உப்புக்கரிக்கும். அதன் கரையில் தோண்டிய ஊற்றுநீர் சுவையுடையதாக இருக்கிறது. அதே மாதிரிதான் ராகுவும் கேதுவும் எந்த இடத்துக்கு கெடுதல்களைச் செய்கிறார்களோ அந்த இடத்துக்கு நல்லதையும் செய்வார்கள். நல்ல குணமும் கெட்ட குணமும் ஒரே மனிதனிடம்தான் குடிகொண்டுள்ளது. மனிதன் மிருகமாகவும் மாறலாம்; மாமனிதனாகவும் வாழலாம்; தெய்வமாகவும் மதிக்கப்படலாம். இந்த மாற்றத்துக்குக் காரணம் கிரகங்களே! உதாரணமாக ஏழரைச் சனியும் அட்டமச் சனியும் பொதுவாக கெடுக்கும் என்றாலும், எல்லாரையும் கெடுக்காது. பலரைத் தாழவைத்தாலும் ஒரு சிலரை வாழவைக்கும்.

பொதுவாக 4-ல் ராகுவோ கேதுவோ இருந்தால் எவ்வளவு உண்மையாகவும் விசுவாசமாகவும் கவனித்தாலும் பெற்ற தாயிடம் சர்டிபிகேட் வாங்கமுடியாது. தாயாரைத் திருப்திப்படுத்தவும் முடியாது. அதிலும் அந்த அம்மாவுக்கு பெண் குழந்தைகள் இருந்துவிட்டால் போதும்- மகனைவிட மகள்கள் மீதுதான் பாசம் அதிகம் வரும். சமயத்தில் மகனிடம் பணத்தை வாங்கி மகளுக்கு ரகசியமாகக் கொடுப்பார். அதை நீங்கள் சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல் கூடப்பிறந்தவர்கள்தானே அனுபவிக்கிறார்கள், போகட்டும் என்று பெருந்தன்மையாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பலன் ஒரு சிலருக்கு மட்டுமே. எல்லாருக்கும் பொருந்தாது. குரு ராசிக்கு மாறி 4-ஆம் இடத்தைப் பார்க்கும்போது இந்த நிலைமாறிவிடும். முன் சொன்னது போல தாயின் மனம் மாறும். உங்கள்மேல் பாசமும் மலரும்.

கடக ராசிக்கு 3-ஆம் இடமும், 11-ஆம் இடமும் சகோதர ஸ்தானம். 3-ஆம் இடம் இளைய சகோதர ஸ்தானம். 11-ஆம் இடம் மூத்த சகோதர ஸ்தானம். இந்த இரண்டு இடங்களுக்கும் கேது மறைவாக இருக்கிறார். 3-ஆம் இடத்துக்கு 8-ல் 11-ஆம் இடத்துக்கு 12-ல் இருப்பது ஒரு வகையில் குற்றம்தான். அதனால் தவறான கருத்துகளும் அபிப்பிராயங்களும் உருவாகலாம். ஆனாலும் 3-ஆம் இடத்தை குரு பார்ப்பதாலும் 11-ல் குரு நிற்பதாலும் தோஷம் விலகும். எனவே உடன் பிறப்புக்களினால் ஆதரவும் அனுசரணையும் உதவியும் ஒத்தாசையும் உண்டாகும். நீரடித்து நீர் விலகாது. நெய்க்கு தொன்னை ஆதரவா? தொன்னைக்கு நெய் ஆதரவா என்று சொல்லமுடியாதபடி ஆதரவாக அமையும். இந்த ஜென்மாவில் ஏதோ ஒரு தாயின் வயிற்றில் பிறந்துவிட்டோம். அடுத்த ஜென்மாவில் யார் யாரோ எங்கேயோ! அதனால் பிறந்த பிறப்பில் ஏன் பேதம் என்று பெருந்தன்மையாகப் போக வேண்டியதுதான். "விட்டுக் கொடுப்பவன் கெட்டுப் போவதில்லை;' "தம்பியுடையான் படைக்கஞ்சான்', "கஞ்சி ஊத்த ஆள் இல்லாவிட்டாலும் கச்சைகட்ட உடமைப்பட்டவன் வேண்டாமா', "தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடுமல்லவா' - இப்படியெல்லாம் பல பழமொழிகள் நமது முன்னோர்கள் சொல்லியிருப்பது வீண்போகுமா?

குமணன் என்றொரு கொடை வள்ளல் அரசன் இருந்தான். தன்னைத் தேடிவந்து கேட்டவர்களுக்கெல்லாம் அள்ளிக்கொடுத்த வள்ளல். அவன் தம்பி சதிசெய்து அண்ணனைக் கொலை செய்து ஆட்சியைக் கைப்பற்றிவிட திட்டமிட்டான். அதை அறிந்த குமணன் நாட்டை விட்டு காட்டில் தலைமறைவாகப் போய்விட்டான். அவன் தலையைக் கொண்டு வருகிறவர்களுக்கு ஆயிரம் பொன் பரிசு என்று பறையறிவித்தான் தம்பி. ஒரு ஏழைப் புலவன் குமணனைத் தேடிக் கண்டுபிடித்து இந்த விபரத்தைச் சொல்ல, குமணன் "என் தலையை வெட்டி எடுத்துப் போய் தம்பியிடம் கொடுத்துப் பரிசை வாங்கிக்கொள்' என்றான். புலவன் குமணன் மாதிரி ஒரு பொம்மைத் தலையை எடுத்துப்போய் தம்பியிடம் காட்ட அதைப் பார்த்து தம்பி கதறியழுததாக பள்ளியில் படித்திருக்கிறோம். இதுதான் "தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும்' என்பது! அதேபோல சேரநாட்டில் ஒரு ஜோதிடர் வந்து, ""மூத்தவன் இருக்க இளையவனுக்கே பட்டம்'' என்று சொல்ல, சேரன் செங்குட்வன் கோபம் கொண்டான். அவன் தம்பி "அண்ணனே நாடாளட்டும். நான் துறவியாகி காடாளுகிறேன்' என்று பௌத்த துறவியாகப் போய்விட்டார். அவர்தான் சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோ அடிகள். இவையெல்லாம் அண்ணன்- தம்பி பாசத்தை விளக்கும் சரித்திர உண்மைகள். இது அந்தக் காலம்! இந்தக் காலம்-தந்தை உயிரோடு இருக்கும்போதே பதவிக்கு சண்டைபோடும்காலம். இதுவும் கிரகங்களின் வேலைதான்!

புனர்பூச நட்சத்திரக்காரர்களுக்கு:

புனர்பூசம் குருவின் நட்சத்திரம், குரு கடக ராசிக்கு 11-ல் இருக்கிறார். கேதுவுக்கு 2-ல் ராகுவுக்கு 8-ல் அமைவு. எனவே இந்த ராசி- நட்சத்திரக்காரர்களுக்கு லாபம், வெற்றி, முன்னேற்றம் உண்டாகும். கருதிய காரியங்கள் நிறைவேறும். கடமைகள் நிறைவேறும். சில சுபச்செலவுகளை சமாளிக்க சிலருக்கு சுபக் கடன்கள் உண்டாகும். கோவில் பிரார்த்தனைகள் நிறைவேறும். காரைக்குடி திருப்பத்தூர் அருகில் பட்டமங்கலம் என்று ஒரு சிற்றூர். அங்கு கிழக்குப் பார்த்த அட்டமாசித்தி தட்சிணாமூர்த்தி சந்நிதியிருக்கிறது. எல்லா இடத்திலும் தட்சிணாமூர்த்தி சந்நிதியிருக்கிறது. எல்லா இடத்திலும் தட்சிணாமூர்த்தி தெற்கு திசை நோக்கித்தான் இருப்பார். இங்கு மட்டும் விசேஷமாக கிழக்கு நோக்கி இருப்பார். கார்த்திகைப் பெண்கள் அறுவர், நெற்றிக்கண்ணில் பிறந்த ஆறுமுகக் கடவுளை வளர்த்த கடனுக்காக பார்வதியிடம் வரம் கேட்டபோது அவர்கள் அட்டமாசித்தி கலையை உபதேசிக்க வேண்டும் என்றார்கள். அது தன்னால் இயலாது என்றும், பரமேசுவரனே உபதேசிக்க வல்லார் என்றும் அன்னை ஈஸ்வரனிடம் சொல்ல, அவர் ஆறு பெண்களுக்கும் அதை உபதேசிக்கும் சமயம், அவர்கள் சிரத்தை இல்லாமல் கவனத்தை வேறு பக்கம் திசைதிருப்ப, சிவன் கோபம் கொண்டு நீங்கள் ஆயிரம் ஆண்டுகளாக கற்களாகக் கிடந்து தவமியற்றிய பிறகு நான் உபதேசம் செய்கிறேன் என்று சாபம் கொடுத்துவிட்டார். அதன்படி இந்த எல்லையில் மாபெரும் ஆலமரத்தடியில் ஆறு கற்களாகக் கிடந்து கடைசியில் சிவபெருமான் குரு தட்சிணாமூர்த்தி வடிவில் அறுவருக்கும் உபதேசம் செய்ததாக வரலாறு. வியாழக்கிழமையும் அமாவாசையும் இங்கு சிறப்பு பூஜைகள் நடக்கும்.

பூச நட்சத்திரக்காரர்களுக்கு:


பூசம் சனியின் நட்சத்திரம். சனிபகவானோடுதான் ராகு சேர்ந்திருக்கிறார். சனி உச்சமாகவும் இருக்கிறார். கடக ராசியையும் பார்க்கிறார். எனவே இந்த ராகு- கேது பெயர்ச்சி உங்களுடைய ஆற்றலையும் திறமையையும் வளர்க்கும். வெளியுலகுக்கு விளம்பரப்படுத்தும். இதுவரை குடத்துக்குள் விளக்காகத் திகழ்ந்த நீங்கள் இனிமேல் குன்றின் மேல் ஏற்றிய விளக்காகத் திகழ்வீர்கள். தொழில், வியாபாரம், வேலை, உத்தியோகம் எல்லாவற்றிலும் முன்னேற்றமும் வெற்றியும் அடைவீர்கள். பேரும் புகழும் பெருஞ்செல்வமும் அடைவீர்கள். அதேசமயம் சனி அட்டமாதிபதி என்பதால் பணம் சேரச்சேர குணம் மாறும். பழசை மறக்காமல் செயல்பட்டால் எல்லாம் நல்லதாக இருக்கும். இல்லாவிட்டால் அடைந்ததை இழக்கவும் நேரலாம்.
 

ஆயில்ய நட்சத்திரக்காரர்களுக்கு:

ஆயில்யம் புதனுடைய நட்சத்திரம். புதன் 3, 12-க்குடையவர். சகோதர வகையில் சகாயமும் உதவியும் உண்டாகும். அதே போல சுபச்செலவும் சுபமங்கள விரயங்களும் குடும்பத்தில் ஏற்படும். தொழில் முன்னேற்றம், வருமானம், செல்வாக்கு எல்லாம் எதிர்பார்க்கலாம். ஆயில்யம் ஆதிசேஷனின் நட்சத்திரம். ஆதிசேஷன் பாம்புக்குத் தலைவன். எனவே ராகு- கேது பெயர்ச்சி உங்களை தலைமைப் பதவியில் அமர்த்தலாம். நாகர்கோவிலில் ஆதிசேஷன் சிவனை வழிபட்டதால், அங்கு சென்று பூஜை செய்யவும்.

No comments:

Post a Comment

#கர்மவினையைவெல்ல.....தொடர்சி..3

# கர்மவினையைவெல்ல .....தொடர்சி..3 # காலபுருஷதத்துவமும்  கர்மாவும் : கால புருஷ தத்துவப்படி 12 இராசிகளும் தர்ம, கர்ம, காம மற்றும் மோட்ச ...