Wednesday, November 28, 2012

கும்பம் (அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)



கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)




கும்ப ராசி அன்பர்களே!
கும்ப ராசிக்கு இதுவரை 10-ல் இருந்த ராகு இப்போது 9-ல்  துலா ராசியிலும்; இதுவரை 4-ல் இருந்த கேது 3-ல் மேஷ ராசியிலும்  மாறியிருக்கிறார்கள்.

ராசிநாதன் சனி மூன்றாண்டு காலமாக 8-ல் நின்று உங்கள் தலையில் குட்டிக்கொண்டே இருந்தவர் இப்போது 9-ல் உச்சனாக மாறியிருக்கிறார். 2-க்குடைய குரு 11-க்கும் உடையவராகி 4-ல் அமர்ந்துள்ளார். குருவுக்கு 4-ஆம் இடம் சுமாரான இடம்தான் என்றாலும், 2-க்குடையவர் 10-ஆம் இடத்தைப் பார்ப்பதால் தொழில், வருமானத்தில் தடையில்லை. எனவே முக்கியமான மேற்கண்ட கிரகங்கள் கோட்சார ரீதியாக நல்லபடியாக சஞ்சரிப்பதால் ராகு- கேது பெயர்ச்சியும் உங்களுக்கு நல்லதாகவே அமையும்.

கடந்த மூன்றாண்டு காலமாக கும்ப ராசிக்கு அட்டமச்சனி நடந்த காரணத்தால் பலருடைய வாழ்க்கையில் எல்லாம் இருந்தும் எதுவுமே இல்லாமல் போனதுமாதிரி கஷ்டங்களே நிரம்பி இருந்தது. சாப்பாடு, துணிமணி, தங்கும் இடவசதிக்கு கேடு கெடுதி ஏற்படவில்லையென்றாலும், கொடுக்கல்- வாங்கல், வரவுசெலவு, பழைய கடன்பாக்கி ஆகியவற்றால் வாக்கு நாணயத்தைக் காப்பாற்ற முடியாதபடி சோதனைகளும் வேதனைகளும் நிறைந்திருந்தது. சொந்த வீட்டில் குடியிருந்தாலும் யாரோ வேற்று இடத்தில் விருந்தாளி வீட்டில் இருந்தமாதிரி ஒரு அனுபவம். சாப்பாட்டுக்குப் பஞ்சமில்லை என்றாலும், குடும்பத்தில் அம்மாவோ, மற்றவர்களோ எப்போது சாப்பிடக் கூப்பிடு கிறார்களோ, அப்போது போய்த்தான் சாப்பிட உட்கார வேண்டியநிலை. ஏதோ முக்கிய வேலையாக வெளியில் போய்விட்டாலும், இரவு 10 மணிக்குமேல் வீட்டுக்கதவைத் தட்டமுடியாதபடி ஒரு கட்டுப்பாடு. இதற்காகவே வெளியில் நண்பர் இடத்தில் அல்லது கோவில் மண்டபத்தில் இரவுப் பொழுதைக் கழிக்கவேண்டிய கட்டம்! கல்யாணம் காட்சி ஆகாதவர்களுக்கும் இந்த நிலைதான். பெண்டு பிள்ளைகள், மனைவி, மக்கள் இருப்பவர்களுக்கும் இந்த நிலைதான். மனைவி, குடும்பம் இருந்தவர்களுக்கும், "ஏங்க, அப்படியென்ன வெட்டி முறிக்கிற வேலை ராத்திரி 12 மணி வரை? காலாகாலத்தில் வீடுவந்து சாப்பிட்டு படுக்கக்கூட உங்களுக்கு முடியவில்லையா? நாய்க்கு வேலையில்லை என்றாலும் நிக்கத்தான் நேரமில்லை என்ற மாதிரி ஊரை சுற்றுகிறீர்களே!' என்று மனைவியிடம் வாங்கிக் கட்டிக்கொண்டவர்களும் உண்டு.

மாதாமாதம் வாங்கிய சம்பளத்தை டீ செலவுக்குக்கூட எடுத்துக் கொள்ளாமல் அப்படியே கவரோடு கொண்டுவந்து வீட்டில் கொடுத்தவர்களுக்கே இந்தப் பாடு என்றால், பற்றாக்குறை சம்பளத்தோடு போராடுகிறவர்களுக்கு எந்தப் பாடு? சரி, வீட்டில்தான் இப்படி- வெளியில் எப்படி? வேலை செய்யும் இடத்தில் குற்றம் கண்டுபிடித்தே குறைசொல்லித் திட்டும் மேலதிகாரிகள் சிலர்! எவ்வளவு கவனமாகவும் அக்கறையாகவும் பாடுபட்டாலும் உங்களையும் மீறிய சில தவறுகள்! ஒரு தவறை மறைக்க முயற்சித்தால் பல தவறுகள். பொது இடத்திலும் பொது வேலையிலும் ஆதாயம் ஏதுமில்லாமல் இலவசமாக தொண்டு உணர்வாகப் பாடுபட்டாலும், ஆதாயம் பார்க்கமுடியாத சிலர் கடுப்பாகி உங்களைப்பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லி விமர்சனம் செய்யக்கூடும். அப்படிப்பட்டவர்கள் மத்தியில் சிக்கி சீரழிவதற்கு பதில் நமக்கெதற்கு இந்த வம்பு? யார் எப்படிப்போனால் நமக்கென்ன என்று விரக்தியடைந்து கையைக் கழுவிவிட்டு நழுவ நினைப்புகள் தோன்றும்.

இப்படி சொந்தக் குடும்பத்திலும் சரி; சுற்றுச் சூழ்நிலையிலும் சரி- ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு டென்ஷனோடு போக்கியவர்களுக்கு சனிப்பெயர்ச்சியும், ராகு-கேது பெயர்ச்சியும் ஆறுதலும் தேறுதலும் ஏற்படும்படி நல்ல மாறுதல்களை ஏற்படுத்தும்.

பொதுவாக 3, 6, 11-ஆம் இடங்கள்தான் ராகு- கேது, சனி போன்ற அசுப கிரகங்களுக்கு உகந்த இடங்கள். கேது 3-ல் இருப்பது உத்தமம். சனியும் ராகுவும் 9-ல் அல்லவா இருக்கிறார்கள்? அதனால் எப்படி நன்மை உண்டாகும் என்ற சந்தேகம் எழலாம். சுபகிரகங்களானாலும் அசுபகிரகங்களானாலும் திரிகோணத்தில் உள்ளவர்கள் தீங்கு செய்யமாட்டார்கள்; நன்மையே செய்வார்கள் என்பது சந்திரகாவிய விதியாகும்! அதுமட்டுமல்ல; 3-ஆம் இடத்தில் சனியும் ராகுவும் இல்லையென்றாலும், 3-ஆம் இடத்தைப் பார்ப்பதால்கூட அந்தப் பலன் அவர்களுக்குக் கிடைக்கலாம்! அதாவது 3-ஆம் இடத்துக்கு 7-ல் ராகுவும் சனியும் இருக்கிறார்கள்.

எந்த ஒரு இடத்துக்கும் அதற்கு 7-ஆம் இடம் 180-ஆவது டிகிரி சமசப்தமம் ஆகும். அந்த இடத்தின் நல்லது கெட்டதை அதற்கு 7-ஆம் இடத்தை வைத்தும் நிர்ணயிக்கலாம். பலதீபிகையில் "பாவாத் பாவம்' என்று ஒரு விதி உண்டு. அதாவது 2-ஆம் இடம் என்றால் 2-க்கு 2-ஆம் இடம் என்றும், 3-ஆம் இடம் என்றால் 3-க்கு 3-ஆம் இடம் என்றும், 7-ஆம் இடம் என்றால் 7-க்கு 7-ஆம் இடம் என்றும், 10-ஆம் இடம் என்றால் 10-க்கு 10-ஆம் இடம் என்றும் கணக்கிட்டு பலனை நிர்ணயிக்க வேண்டும். ஆகவே திரிகோணத்தில் உள்ள சனியும் ராகுவும்- 3-க்குடையவராகவோ 3-ல் நின்ற மாதிரியாகவோ கணக்கிட்டு பலன் செய்வார்கள்!

ஏற்கெனவே கும்ப ராசிக்கு 10-ல் விருச்சிகத்தில் நின்ற ராகுவை அட்டமச் சனி பார்வையிட்டதால் 10-ஆம் இடத்து தொழில், வாழ்க்கை, முயற்சிகள் ஸ்தானத்தில் எந்த அனுகூலத்தையும் செய்யவில்லை. இப்போது 9-ல் இருக்கும் சனியும் ராகுவும் 10-ல் இருந்து செய்யத்தவறிய யோகங்களைச் செய்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

9-ஆம் இடம் பூர்வ புண்யஸ்தானம். 5-ஆம் இடமும் பூர்வபுண்ய ஸ்தானம்தான். அதாவது 9-க்கு 9-ஆம் இடம் 5 ஆகும். தெய்வ உபாசனை ஸ்தானம்- தகப்பனார் ஸ்தானம்- பிதுரார்ஜித ஸ்தானம். ஒரு காலத்தில் கூட்டுக் குடும்பத்தில் இருந்த ஒருவர் கல்யாணம் காட்சியில்லாமல் பாகம் பிரிக்காத சொத்துக்களைப் பரிபாலனம் செய்துவந்தார். விவசாயம், குடும்ப நிர்வாகம், தொழில் எல்லாவற்றையும் பார்த்து லாபம் தேடிக்கொடுத்தார். அம்மாவும் சகோதர சகோதரிகளும் லாபத்தை அனுபவித்தார்கள். ஒரு கஷ்டகாலத்தில் எல்லாம் நஷ்டமாகி தலைக்குமேல் கடன் ஆகிவிட்டது. உடன்பிறந்தவர்கள் எல்லாம், "கடனுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை. நீ ஏற்படுத்திய கடனை நீயே அடைத்துக்கொள். அந்தக் கடன்பாக்கிக்காக உன்பங்கு சரியாகிவிட்டது. உனக்கு பங்கு பாகம் ஏதுமில்லை' என்று அம்மாவும் உடன்பிறந்தவர்களும் எல்லா பங்கையும் அவருக்குத் தராமல் பகிர்ந்துகொண்டார்கள். தன் பங்கையாவது கொடுத்தால் அதை விற்று கடனை அடைத்து விடுகிறேன் என்பதற்கும் மற்றவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. வயதான அம்மாவுக்குத் துணையாக பூர்வீக வீட்டில் வாடகை இல்லாமல் தங்கலாம் என்று சொல்லிவிட்டார்கள். பொதுக் குடும்பத்தினால் ஏற்பட்ட கடனுக்காக இன்னமும் அவர் வட்டி கட்டிக்கொண்டே வருகிறார். "அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே' என்று பாடியது அவருக்காகத்தான் போலும்!

அப்படிப்பட்டவர்களுக்கெல்லாம் இந்த ராகு- கேது பெயர்ச்சியும் சனிபெயர்ச்சியும் நல்லதொரு திருப்பத்தை ஏற்படுத்தும். தகப்பனார் ஸ்தானத்தில் ராசிநாதன் சனி உச்சமாக இருப்பதால், அவரோடு ராகு சேர்ந்திருப்பதால் உடன்பிறப்புகள் மனமுவந்து உங்கள் கடனை அடைப்பதற்கு உதவி செய்யலாம். அல்லது தாயாருக்குக் கிடைக்கும் பங்கை- மற்ற எல்லாப் பிள்ளைகளும் நல்ல வசதி வாய்ப்பாக குடும்பம், தொழில், சம்பாத்தியம் என்று இருப்பதால்- உங்களுக்குத் தன் பங்கைத் தரலாம். அதை வைத்து பழைய கடன்களை அடைக்கலாம். அல்லது உங்கள் சுயமுயற்சியால் உபவருமானங்களைப் பார்த்து பொதுக்கடன்களை அடைக்கலாம்.

9-ல் உள்ள ராகு கும்ப ராசிக்கு 7-ஆம் இடத்தைப் பார்க்கிறார்; 3-ஆம் இடத்தைப் பார்க்கிறார்; 11-ஆம் இடத்தைப் பார்க்கிறார். 3-ல் கேது ஜென்ம ராசியைப் பார்க்கிறார்; 9-ஆம் இடத்தைப் பார்க்கிறார்; 5-ஆம் இடத்தைப் பார்க்கிறார்.

கும்ப ராசிக்கு 10-ஆம் இடம் விருச்சிகம் தொழில் ஸ்தானம். அதற்கு 10-ஆம் இடம் (10-க்கு 10- பாவாத் பாவம்) சிம்மத்தை ராகு பார்ப்பதால் தொழில், வேலை, உத்தியோகம் ஆகிய நற்பலன்கள் உண்டாகும். சிம்மம் சூரியன் வீடு. சூரியன் ராஜ கிரகம். அரசு உத்தியோகத்துக்குரிய வயது முடிந்துவிட்டாலும் விசேஷ விதிப்படி சிலருக்கு அரசு வேலை திடீர் அதிர்ஷ்டவசமாக அமையும். உதாரணமாக சமீபத்தில் ரயில் விபத்தில் இறந்த குடும்பத்தில், குடும்பத்துக்கு ஒருவருக்கு வேலை கிடைக்கும் என்று மத்திய மந்திரி அறிவித்தார். அதேபோல அரசுப் பணியில் இருக்கும்போது பணி ஓய்வுக்கு முன்னதாகவே அவர் இறந்துவிட்டாலும் அவர் வாரிசுக்கு வேலை கிடைக்கும்!

10-க்கு 12-ல் சனி ராகு இருப்பதால் தொழில், உத்தியோகப் பணியில் சிலருக்கு இடமாற்றம் ஏற்படலாம். அது சுக்கிரன் வீடு- ஜலகிரகம் என்பதால் படித்து முடித்து வேலையில்லாமல் கஷ்டப்பட்டவர்களுக்கு, உள்ளூரில் அல்லது வெளியூரில் அல்லது வெளிநாட்டில் வேலை கிடைக்கும். 10-க்கு 12 என்பது விரயஸ்தானம். கும்ப ராசிக்கு மகரம் 12-ஆம் இடம் என்பதும் விரயஸ்தானம். சனி அதற்குடையவர் என்பதால், வேலைக்காக சிலர் செலவு செய்யும் அமைப்பு உண்டாகும். அரசு உத்தியோகத்தில் இருப்போருக்கு விரும்பிய இடப்பெயர்ச்சியும் அல்லது பதவி உயர்வும் எதிர்பார்க்கலாம்.

ராகு 7-ஆம் இடத்தை (சனியோடு சேர்ந்து) பார்ப்பதால் (7 திருமண ஸ்தானம்) ராசிநாதனோடு சேர்ந்ததால் திருமணத்தடை விலகும். 30 வயது, 40 வயது என்று ஆனவர்களுக்கும் ஆண்களானாலும் பெண்களானாலும் இப்போது திருமணம் கூடிவரும். பலநூறு ஜாதகம் பார்த்தும் வரன் அமையவில்லை யென்றால் ஆண்கள் கந்தர்வராஜ ஹோமமும், பெண்கள் பார்வதிகலா சுயம்வர ஹோமமும் செய்து கலச அபிஷேகம் செய்துகொள்ளலாம்.

கடந்த கால அட்டமச்சனி காலத்தில் கருத்து வேறுபாடு காரணமாக குடும்பத்தைவிட்டுப் பிரிந்தவர்களும், குடும்பப் பிளவை சந்தித்த தம்பதிகளும் மனோன்மணி ஹோமமும் அல்லது காமோகர்ஷண ஹோமமும் அல்லது ஜாதக ரீதியான ஹோமமும் செய்துகொண்டால் பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். விவாகரத்து பெற்ற தம்பதிகள்கூட இந்த ஹோமத்திற்குப் பிறகு ஒன்று சேர்ந்திருக்கிறார்கள் என்பது அனுபவ ரீதியான உண்மை!

கும்ப ராசிக்கு 11-ஆம் இடத்தை (தனுசுவை) சனியும் ராகுவும் பார்த்த காரணத்தால் உங்களுடைய ஒவ்வொரு செயலிலும் முயற்சியிலும் முன்னேற்றமும் வெற்றியும் உண்டாகும். ஏற்கனவே செய்த முயற்சிகளில் வெற்றியும் இல்லாமல் தோல்வியும் இல்லாமல் கிணற்றில் போட்ட கல்லைப்போல அசைவற்ற நிலையில் எந்தப் பலனும் தெரியாத நிலை இனி மாறிவிடும். அன்று செய்த உழைப்புக்கு இன்று பலன் தெரியும். பலமடங்கு ஆதாயமும் லாபமும் கிடைக்கும். சில வி.ஐ.பிக்களின் தொடர்பும் அறிமுகமும் உண்டாகும். காரிய ஜெயத்துக்காக நீங்கள் செய்த பிரார்த்தனையும் பூஜையும் ஹோமமும் இனிமேல்தான் கைமேல் பலனாகத் தெரியும். எந்த ஒரு பூஜையும் பரிகாரமும் ஹோமமும் வீண்போகாது. ஆனால் அதற்குரிய நேரம் காலம் வரும்போதுதான் அது வேலை செய்யும். அப்படியானால் நேரம் வரும்போது தானாகவே நடக்குமே- பிறகு எதற்குப் பரிகாரம், பூஜை? என்று நீங்கள் கேட்கலாம். நன்றாகப் படிக்கிற மாணவன் பாஸ் ஆவது உறுதிதான். ஆனால் அதில் மெரிட்டில் பாஸ் ஆவதற்கும் பள்ளியில் முதலிடம்- மாநிலத்தில் முதலிடம் பெறவும் ட்யூஷன் வைத்துக்கொள்வதில்லையா?

இரண்டு நண்பர்கள் கோவிலுக்குப் போனார்கள். அதில் ஒருவன், ""நான் உள்ளே வரவில்லை; கோவில் வாசலில் இருக்கிறேன். நீ போய் கும்பிட்டு வா'' என்று சொல்லிவிட்டான். மற்றொருவன் மட்டும் உள்ளே சென்று சாமி கும்பிட்டுத் திரும்பினான். திரும்பும்போது படிதட்டி விழுந்து காலில் சிறு காயம் ஏற்பட்டுவிட்டது. வெளியில் நின்றவனுக்கோ எங்கிருந்தோ பறந்து வந்த நூறுரூபாய் நோட்டு அவன் காலடியில் விழுந்தது. சாமி கும்பிட்டவன் நொண்டி வந்ததைப் பார்த்த கும்பிடாதவன், ""பார்த்தாயா, நீ கும்பிட்டதுக்குப் பலன் காலில் அடி; கும்பிடாத எனக்கு நூறு ரூபாய் பரிசு'' என்று கேலி பேசினான். பக்தனுக்கு வருத்தம். உள்ளே சென்று கடவுள் சன்னதியில், ""இது என்ன நியாயாம்? உன்னைக் கும்பிட்டதற்கு பலன் இதுதானா?'' என்று குமுறினான். அதைக் கேட்ட பூசாரி, ""தம்பி, உனக்கு இன்று பெரிய விபத்து ஏற்பட்டு கால்முறிவு ஏற்பட வேண்டிய கட்டம். சாமிகும்பிட்டதால் லேசான காயத்தோடு தப்பிவிட்டாய். வெளியில் நின்றவனுக்கு இன்று லட்சம் ரூபாய்க்குமேல் பரிசு கிடைக்கவேண்டிய யோகம். அவன் இறைவழிபாடு செய்யாததால் 100 ரூபாயோடு யோகம் குறைந்து விட்டது'' என்றாராம். சில விஷயங்கள் நம் அறிவுக்கு எட்டும். சில விஷயங்கள் நம் அறிவுக்கு அப்பாற்பட்டவையாகிவிடும். இதெல்லாம் தேவரகசியம்! அதிர்ஷ்டமும் யோகமும் இருந்தால் பம்பர் பரிசில் முதல் பரிசு கிடைக்கும். இல்லாவிட்டால் ஒரு நம்பர் வித்தியாசத்தில் இழப்பு ஏற்படும்; ஏமாற்றமாகிவிடும்.

அதேபோல கேது உங்கள் ராசியைப் பார்ப்பதால், உங்கள் செல்வாக்கும் சொல்வாக்கும் மேன்மை அடையும். மற்றவர்கள் உங்களை குற்றம் குறை கூறி குதர்க்கமாகப் பேசினாலும் அதைப் பற்றிக் கவலைப்படவும் மாட்டீர்கள். காதில் போட்டுக் கொள்ளவும் மாட்டீர்கள். மனம் தளராமல் உங்கள் மனம் சொல்லுவது மாதிரி செயல்படுவீர்கள். அது உங்கள் பக்கம் உள்ள நியாயத்தைப் பறை சாற்றும்.

5-ஆம் இடத்தைப் பார்க்கும் கேது உங்கள் எண்ணங்களையும் திட்டங்களையும் செயல்படுத்தும். மகன் அல்லது மகள் வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். திருமணம், வாரிசு, வேலைவாய்ப்பு போன்ற நல்ல காரியம் செயல்படும். சிலருடைய பிள்ளைகள் வெளிநாடு போகலாம். சிலர் தமது உடன்பிறப்புக்கள் வகையிலும் நன்மைகள் நடக்கும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்கலாம் அல்லது வீட்டுக்குத் தேவையான ஆடம்பரப் பொருள்களை வாங்கிச் சேர்க்கலாம்.

அவிட்ட நட்சத்திரக்காரர்களுக்கு:


அவிட்டம் செவ்வாயின் நட்சத்திரம் செவ்வாய் உங்கள் ராசிக்கு 3, 10-க்குடையவர் என்பதாலும்; செவ்வாயின் வீட்டில் கேது நிற்க ராகு பார்ப்பதாலும் சகோதர சகாயம், நண்பர்கள் உதவி, தொழில் யோகம், புதிய வேலைவாய்ப்பு, தொழில், வேலை, உத்தியோக முன்னேற்றம் ஆகிய திருப்திகரமான பலன்களை எதிர்பார்க்கலாம். புதுக்கோட்டை அருகில் குமரமலை என்ற ஊரில் தண்டாயுதபாணி கோவில் இருக்கிறது. அங்கு சென்று வழிபாடு செய்யலாம். 

சதய  நட்சத்திரக்காரர்களுக்கு:

சதயம் ராகுவின் நட்சத்திரம். எனவே ராகு- கேது பெயர்ச்சி உங்களுக்கு நல்ல யோகத்தையே தரும். குழப்பங்கள் தீர்ந்து குதூகலம் கூடும். தொழில் முயற்சி, வருமானத்தில் நல்ல திருப்பங்கள் ஏற்படும். உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கும். வருமானம் தாராளமாக இருக்கும். கும்பகோணம் கொள்ளிடம் வடகரை அணைக்கரையிலிருந்து எய்யலூர் சென்று சொர்ண புரீஸ்வரரை வழிபட வேண்டும். சிதம்பரம்-கடலூர்-எய்யலூர் பஸ்ரூட். 

பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு:

ராகு- கேது பெயர்ச்சி தனம், லாபம், குடும்ப மேன்மை ஆகிய பலன்களைத் தரும். சிந்தனை ஆற்றலால் சிறப்பாக செயல்பட்டு சீரும் பெருமையும் அடையலாம். விருப்பங்கள் நிறைவேறும். எதிர்பார்த்தபடி பணம் தேடிவரும். திருப்பத்தூர் அருகில் பட்டமங்கலத்திலும், காரைக்குடி செஞ்சைப் பகுதியிலும் தட்சிணாமூர்த்தி சந்நிதி இருக்கிறது. அங்கு சென்று வழிபடலாம்.

No comments:

Post a Comment

#கர்மவினையைவெல்ல.....தொடர்சி..3

# கர்மவினையைவெல்ல .....தொடர்சி..3 # காலபுருஷதத்துவமும்  கர்மாவும் : கால புருஷ தத்துவப்படி 12 இராசிகளும் தர்ம, கர்ம, காம மற்றும் மோட்ச ...