Wednesday, November 28, 2012

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)




சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)


சிம்ம ராசி அன்பர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 4-ல் இருந்த ராகு இப்போது மூன்றாம் இடம் துலா ராயியிலும்; 10-ல் இருந்த கேது இப்போது 9-ஆம் இடம் மேஷ ராசியிலும் மாறியிருக்கிறார்கள். ஏற்கெனவே ராகுவும் கேதுவும் இருந்த இடங்கள்- கேந்திர ஸ்தானங்கள் நல்ல இடங்கள்தான். இப்போது மாறியிருக்கும் இடங்களும் நல்ல இடங்கள்தான். அதிலும் கேதுவைவிட ராகு மாறியிருக்கும் இடம் 3-ஆம் இடம் சூப்பரோ சூப்பரான இடம். 3, 6, 11-ஆம் இடங்கள்தான் ராகு-கேது-சனி ஆகியோருக்கு யோகமான இடங்கள். அதேபோல கேதுவும் திரிகோண ஸ்தானத்தில் மாறியிருக்கிறார். "அஞ்சு ஒன்பதுக்கு அதிபர் பாபர் சுபரானாலும் பொன் போன்ற நன்மையே தருவார்' என்பது சந்திர காவிய விதி! மேலும் ராகுவும் கேதுவும் தலையும் வாலும் ஆகும். இவர்களில் யாராவது ஒருவர் நல்ல இடத்தில் இருந்து மற்றவர் பார்த்தால் அந்த கிரகத்துக்கும் நல்ல பலன் கிடைக்கும்!

"மூன்று ஆறு பதினொன்றில் ராகுகேது முகம் மலர்ந்து இருக்குமானால் ஆன்றோர்கள் சகாயம் உண்டாம்; அதிகார உத்தியோகம் உண்டாம்; சான்றோரும் சிநேகமாவர் சகல சம்பத்து செல்வம் தோன்றியே மனமகிழ்ந்து சுகமுடன் ஜீவிப்பாரே' என்பது ஜோதிடப் பாடல்.

இதன்படி ராகு மூன்றில் அமர்ந்து உங்களுக்கு நன்மை செய்வார் என்பது உண்மைதான். ஆனால் 9-ல் பாக்கிய ஸ்தானத்தில் கேது எப்படி நன்மை செய்வார் என்ற சந்தேகம் எழலாம். கேது ஞானகாரகன். 9-ஆம் இடம் பூர்வபுண்ய பாக்யஸ்தானம். ஆன்மிகம், தெய்வீகம், வழிபாடு, தியானம், மந்திர உபதேசம் ஆகியவற்றைக் குறிக்கும் இடம். அங்கு ஞானகாரகனும் ஆன்மிககாரகனுமான கேது நிற்கும்போது தெய்வ அனுகூலம் பரிபூரணமாகக் கிடைக்கும் என்பதில் என்ன சந்தேகம்? குருவருளும் திருவருளும் பரிபூரணமாக இருந்தால் என்ன குறை ஏற்படும்? குறை ஒன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா என்று பாடிய மாதிரி குறையே வராது! மேலும் அந்த 9-ஆம் இடத்தை மோட்சகாரகன் ராகு பார்க்கிறாரே- குறையில்லை எல்லாம் நிறைதான்! அதுமட்டுமல்லாமல் 3-ல் உள்ள ராகுவைப் பார்ப்பதால் அந்த 3-ஆம் இடத்துப் பலனையும் கேது செய்வார்.

3-ஆம் இடம் சகோதர சகாய தைரிய ஸ்தானம். அதனால் உங்கள் கூடப்பிறந்தவர்களும், உற்றார்-உறவினர்களும், ரத்த பந்தச் சொத்தக்காரர்களும், உங்களை புறக்கணித்து ஒதுக்கிய நிலைமாறும். உங்களை ஓசிச்சோறு என்றும் தண்டச்சோறு என்றும் ஏசியவர்களும் பேசியவர்களும் போற்றி உபசரிக்குமளவுக்கு உங்கள் அந்தஸ்து உயரும். மதிப்பும் மரியாதையும் கூடும். நமக்கும் ஒரு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்ற நம்பிக்கை உதயமாகும். மனித வாழ்க்கைக்கு காசும் பணமும் முக்கியம்தான். அதைவிட தன்னம்பிக்கையும் தைரியமும்தான் ரொம்ப ரொம்ப முக்கியம்! எப்போது 2005-ல் ஏழரைச் சனி ஆரம்பித்ததோ அப்போது முதல் கடந்த ஏழரை எட்டு வருடங்களாக உங்கள் வாழ்க்கையில் சாண் ஏறினால் முழம் வழுக்கிய மாதிரி, "வரவு எட்டணா செலவு பத்தணா; முடிவில் எடுக்க வேண்டும் துந்தனா' என்று பாடியமாதிரி, அடிமேல் அடிவாங்கி சூடுகண்ட பூனைபோல நம்பிக்கையும் தைரியமும் போய்விட்டது. ஆனால் இப்போது ஏழரைச் சனியும் முழுமையாக விலகிவிட்டது. அடுத்து இந்த ராகு- கேது பெயர்ச்சியும் உங்களுக்கு முழு அனுகூலமாக, ஆதரவாகச் செயல் படப்போவதால், மீண்டும் தெம்பும் திடமும் தைரியமும் வந்துவிடும். கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்யுமளவு வருமானப் பெருக்கமும் வந்துவிடும்.

துலா ராசியில் நிற்கும் ராகு 3-ஆம் பார்வையாக உங்கள் ஜென்ம ராசியான சிம்மத்தையே பார்க்கிறார். அடுத்து 7-ஆம் பார்வையாக 9-ஆம் இடத்தைப் பார்க்கிறார். அடுத்து 11-ஆம் பார்வையாக சிம்ம ராசிக்கு 5-ஆம் இடத்தைப் பார்க்கிறார். அதனால் உங்கள் ஆற்றலும், திறமையும் அற்புதமாகச் செயல்படும். செயல்பாடுகள் சிறப்பாக அமையும். அரசியலில் செல்வாக்கோடு கொடிகட்டி ஆட்சி செய்வீர்கள். பொதுவாக சிம்ம ராசிக்காரர்கள் மற்றவர்கள் நடந்துபோன பாதையில் நடக்கமாட்டார்கள். "என் வழி-தனிவழி' என்று தனக்கென ஒரு பாதையை வகுத்துக்கொண்டு அதில்தான் நடப்பார்கள். உங்கள் வழி ஆரம்பத்தில் மற்றவர்களுக்கு வித்தியாசமாகத் தெரிந்தாலும் அடுத்தடுத்து உங்களைப் பின்பற்றி மற்றவர்களும் தொடர்ந்து வருவார்கள். பெரும்பாலும் எல்லோருக்கும் நீங்கள் தலைவராகவே இருக்க ஆசைப்படுவீர்கள். உங்களுக்கு முக்கியத்துவம் இல்லாத கட்டங்களில் நைசாக நழுவி விடுவீர்கள். உங்கள் விருப்பப்படியே ராகு- கேது பெயர்ச்சி உங்களுக்கு தலைமை பீடத்தையும் அந்தஸ்தையும் தனி செல்வாக்கையும் ஏற்படுத்தும்.

"எண்ணியர் எண்ணியாங்கு எய்துப எண்ணியர் திண்ணியராகப் பெறின்' என்ற வள்ளுவர் வாக்கிற்கு இணங்க நீங்கள் எண்ணியதை அடைவீர்கள். அந்த எண்ணம் ஈடேற நீங்கள் வைராக்யமாகவும் நம்பிக்கையாகவும் இருந்ததற்குக் கிடைக்கும் பரிசு என்று ஆறுதல் அடையலாம்; பெருமைப் படலாம். உங்களுக்கு யோகம் வரும்போது உங்களுக்கு முன்னால் இருப்பவர்கள் விலகி வழிவிடுவார்கள். பட்டுக்கோட்டை கலியாண சுந்தரத்துக்குப் பிறகு கவியரசர் கண்ணதாசன் பிரபலமடைந்தார். கண்ணதாசனுக்குப் பிறகு வாலியும் வைரமுத்துவும் பிரபலமாக இருக்கிறார்கள். அரசியல், ஆன்மிகம், கலை எல்லாத்துறையிலும் பிரபலமானவர்களுக்கும் திறமையாளர்களுக்கும் பிறகு, புதியவர்கள் வருகையும் பிரபலமும் அடையும் நிலையும் உண்டாகும். இதுதான் காலத்தின் கணக்கு!

ஊழ்வினைப்பயனால் சிலபேருக்கு அதிர்ஷ்டம் வந்து அரவணைத்தாலும், ஜாதக திசாபுக்தி பாதகமாக இருந்தால் அதைத் தக்க வைத்துக்கொள்ள முடியாதபடி ஏமாற்றமாகி விடும்; இழப்பாகி விடும். அதற்கு ஒரு உதாரணம்- திருச்சி திருவானைக்காவல் கோவிலில் ஒருவர் அகிலாண்டேஸ்வரியை நினைத்து  ஆண்டுக்கணக்கில் வாக்கு சித்தியாக வேண்டுமென்று தவம் இருந்தார். கோவில் வாசலில் படுத்து உறங்குவார். ஒரு நாள் அன்னை அகிலாண்டேஸ்வரி தாம்பூலம் தரித்து சலங்கை ஒலிக்க நடந்துவந்து அவரை எழுப்பி "வாயைத் திற' என்று சொல்ல, அவர் தூக்கக் கலக்கத்தில் "சீ போ' என்று விரட்டிவிட்டார். அவருக்கு பக்கத்தில் கோவில் மடப்பள்ளிப் பரிசாரகர் அசந்து தூங்கிக் கொண்டிருந்தார். அம்பாள் அவரை எழுப்பி, "வாயைத் திற' என்றதும், அவர் கோவிலில் வேலை செய்யும் வேலைக்காரிதான் தன்னை வந்து எழுப்புவதாக நினைத்து வாயைத் திறக்க- அம்பாள் அவர் வாயில் தாம்பூலத்தைத் துப்பிவிட்டாள். அவ்வளவுதான். அவருக்கு எல்லா ஞானமும் புலமையும் கலையும் கைவரப்பெற்றது. அவர்தான் கவி காளமேகப்புலவர். "வசைபாடக் காளமேகம்' என்றே அவருக்குப் பட்டம். இப்படி பலர் யோகத்தை அடைந்தாலும் அதை முழுமையாக அனுபவிக்க முடியாதபடி விதிசெய்யும். எடுத்து வைத்தாலும் கொடுத்துவைக்க வேண்டும் என்று சொல்லுவார்கள். இன்றும் சிலர் கோடிகோடியாக சம்பாதிக்க வேண்டும் என்று பேராசைப்பட்டு குறுக்குவழியிலும் சட்டவிரோதமாகவும்  அரசை ஏமாற்றியும் சம்பாதிப்பார்கள். ஆனால் நல்லநேரம் இருக்கும் வரை அல்லது அதிகார பதவி இருக்கும்வரை அல்லது ஆளும் கட்சி ஆதரவு இருக்கும்வரை எதிலும் மாட்டிக்கொள்ளாமல் காலம் ஆகும். கெட்ட நேரம் வந்தாலும் ஆட்சி மாறினாலும் ஆதரவான அதிகாரிகள் மாறினாலும் ரெய்டு வரும். சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை வரும். சொத்துக்களுக்கு சீல் வைக்கப்படும். சிறையில் வாடவேண்டிவரும். பத்திரிகைகளில் பத்தி பத்தியாக செய்தி வரும்; இதெல்லாம் தேவையா? தானும் தன் குடும்பமும், வாரிசும் வாரிசு குடும்பமும் கஷ்டப்படாமல் சம்பாதித்தால் போதாதா! பத்து தலைமுறைக்கு சேர்த்துவைக்கவேண்டும் என்று நினைத்தால் ஆகுமா? அல்லது நிலைக்குமா? மடியில் கனமிருந்தால் வழியில் பயப்படத்தான் வேண்டும். பட்டுக்கோட்டையார் எழுதியமாதிரி தேவைக்குமேல் சேர்ப்பவனும் திருடன்தான்!

ஒரு நேர்மையான இளந்துறவி; பிரம்மச்சாரி! அவரை ஒரு பணக்காரர் தனது தகப்பனார் சிரார்த்தத்துக்கு விருந்துக்கு அழைத்தார். அவரும் தட்ட முடியாமல் போனார். அவர் பங்களாவில் எல்லாம் தங்கமயமாக ஜொலித்தது. சாப்பிடும் தட்டு, டைனிங் டேபிள், டம்ளர், உணவுப் பாத்திரங்கள், உட்காரும் ஆசனம் எல்லாம் தங்கம். கைகழுவும் சொம்பும் தங்கம். துறவி கை கழுவிவிட்டு ஏதோ ஒரு கவனத்தில் அந்த தங்க சொம்பை தன் ஜோல்னா பையில் போட்டுக்கொண்டு வந்துவிட்டார். உண்ட மயக்கம் - ஒரு மரத்தடியில் படுத்து உறங்கிவிட்டார். தூங்கி எழுந்தபோது பையைப் பார்த்தார். தங்கச் சொம்பை பார்த்து பதறிப்போய், தனவந்தரிடம் சென்று. ""தவறு நடந்துவிட்டது; மன்னித்துக்கொள் ளுங்கள்'' என்று தங்கச் சொம்பைத் திருப்பிக்கொடுத்தார். தனவந்தரோ சற்று சாதாரணமாக, ""பரவாயில்லை சாமி! நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். இந்த தங்கப் பொருட்கள் எல்லாம் பல இடங்களில் திருடிச் சம்பாதித்ததுதான். எனக்கு ஒன்றும் நஷ்டமில்லை'' என்றாராம். அதாவது உணவு அருந்துவதும் நல்லோரிடம்தான் சாப்பிட வேண்டும். தனவந்தர் போட்ட சாப்பாடு துறவியின் வயிற்றுக்குள் இருந்தவரை அவர் செய்த தவறு தெரியவில்லை. அந்த உணவு ஜீரணமானதும்தான் தவறு செய்துவிட்டதாக வருந்தினார். இப்படி அநியாயமாகச் சொத்து சேர்த்து தானம் அளித்தாலும் கோவிலுக்கு செய்தாலும் அது புண்ணியமாகாது. பாவம் பாவம்தான். கொள்ளையடித்து கோவில் கட்டினார் திருமங்கை ஆழ்வார். ஆனால் அவரை திருமாலே வந்து காலில் இருக்கும் மெட்டியைக் கழற்றச் சொல்லி திருவடி தீட்சை கொடுத்தார். அரசு கஜானா பணத்தைக்கொண்டு கோவில் கட்டினார் மாணிக்கவாசகர். அதற்காக சிறைத் தண்டனை அனுபவித்தார். அவர்கள் தங்கள் குடும்பத்துக்காக, வாரிசுகளுக்காக தவறு செய்யவில்லை அதனால் ஆண்டவர் மன்னிப்பு கிடைத்தது. ஆனால் இன்று உள்ளவர்கள் சொந்தக் குடும்பத்துக்கும்; பெரிய வீடு, சின்னவீடு, அவர்கள் வாரிசுகளுக்கும் என ஊழல் புரிவதால் ஆண்டவன் ஏட்டில் அவர்களுக்கு "பிளாக் ரிப்போர்ட்' கிடைக்கிறது. உப்புத்தின்றவன் தண்ணீர் குடிக்கவேண்டும். தப்பு செய்தவன் தண்டனை அனுபவித்தே ஆகவேண்டும். ஆக தீதும் நன்றும் பிறர் தர வாரா!

துலா ராசியில் நிற்கும் ராகு சிம்ம ராசியையும், 9-ஆம் இடத்தையும் (பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும்) பார்க்கும் பலனுக்குத்தான் மேற்கண்ட விளக்கம். 5-ஆம் இடத்தைப் பார்ப்பதன் பலனாக வாரிசு இல்லாதவர்களுக்கு வாரிசு யோகம் அமையும். வாரிசு இருப்பவர்களுக்கு சந்ததி விருத்தியுண்டாகும். அதாவது வாரிசுகளுக்கு படிப்பு, வேலை, சம்பாத்தியம், திருமணம், புத்திரபாக்கியம் போன்ற நன்மைகள் நடக்கும்.

5-ல் ராகு இருந்தாலும் பார்த்தாலும் புத்திர தோஷம் என்பார்கள். அனுபவ ரீதியாக புத்திரஸ்தானாதிபதியும் புத்திரகாரகனும் கெட்டுப்போய் இருந்தால்தான் அந்த விதி உண்மையாகிறது! அதாவது பாவம்-பாவ அதிபதி- பாவகாரகன் மூன்றும் கெட்டுப்போய் லக்னாதிபதியும் கெட்டுப்போனால்தான் அந்த பாவம் பலவீனம் அடையும். 5-ல் ராகு இருக்கும் பலருக்கு முதல் குழந்தையே ஆண் குழந்தையாகவும் அடுத்தடுத்து பிள்ளைகளும் இருக்கிறார்கள் என்பது என் அனுபவரீதியான உண்மை.

9-ல் நிற்கும் கேது சிம்ம ராசிக்கு 7-ஆம் இடத்தையும் 3-ஆம் இடத்தையும், 11-ஆம் இடத்தையும் பார்க்கிறார். அதனால் சகோதரர்கள், நண்பர்கள் வகையில் சகாயமும் உதவி ஒத்தாசையும் உண்டாகும். உங்களால் உடன் பிறப்புகளுக்கு நன்மை; உடன்பிறப்புக்களால் உங்களுக்கு நன்மை! ஏற்கெனவே ஏழரைச் சனியின் விளைவாக நெருங்கிப் பழகிய நண்பர்களிடையே எதிர்பாராதவிதமாக கருத்து வேறுபாடும் பிரிவும் பிளவும் ஏற்பட்டது. அதேபோல அக்காள்- தங்கை என்ற பாசத்தோடு ஒரு தட்டில் சாப்பிட்டவர்களும், "முகத்திலேயே விழிக்கக்கூடாது' என்ற கண்டிஷனோடு வெளியேற்றப்பட்டவர்களும் உண்டு. சனிப்பெயர்ச்சியா- தங்கை பெயர்ச்சியா என்று சொல்லமுடியாதபடி இடப்பெயர்ச்சி ஏற்பட்டது. இந்த ராகு- கேது பெயர்ச்சி இதற்கெல்லாம் ஒரு தீர்வு ஏற்படுத்துவதுபோல் கேது விரும்பிய பலனைத் தருவார். இடைக்காலப்பிரிவு இணக்கமான நெருக்கமான உறவை பலப்படுத்தும்.

11-ஆம் இடத்தைப் பார்க்கும் கேது லாபகரமான தொழில் துறையில் முதலீடு செய்ய வைப்பார். ஷேர் மார்க்கெட்டில் கேபிட்டல் இன்வெஸ்ட்மெண்ட் செய்யலாம். சகோதர வகையிலும் மனைவி வகையிலும் கூட்டுச்சேர்ந்து தொழில் ஆரம்பிக்கலாம். சகலபாடி அல்லது மைத்துனர்கள் வழி அதாவது மனைவி வர்க்கத்தினரோடு சேர்ந்து புதிய பிசினஸ் ஆரம்பிக்கலாம். பேங்க் கடன் வாங்கி ஆட்டோமொபைல், வண்டி வாகனம், ட்ராவல்ஸ் வைக்கலாம். சிலர் பூமி சம்பந்தமான ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்யலாம். சிலர் போர்வெல் மிஷின் வாங்கி வாடகைக்கு விடலாம். வடநாட்டில் வறட்சிப் பகுதிகளில் தொடர்ந்து ஆர்டர் கிடைக்கும். திருச்சி திருவானைக்கோவில் அகிலாண்டேஸ்வரியையும் ஸ்ரீரங்கம் ரங்கநாதரையும் பூஜை செய்தால் போர்வெல் மிஷின் தொழில் லாபகரமாக செயல்படும்.

ஆக, ராகு- கேது பெயர்ச்சி எல்லாவகையிலும் உங்களுக்கு யோகத்தையும் நன்மைகளையும் அதிர்ஷ்டத்தையும் தரப்போவது உண்மை. உங்களின் நீண்டகாலக் கனவுகளையும் திட்டங்களையும் நிறைவேற்றித்தரும் என்பதும் நிச்சயம். சிம்ம ராசிக்கு ஏழரைச் சனி விலகியதும் உங்களுக்கு "லைன் கிளீயர்-ரூட் கிளீயர்' என்று பச்சைக்கொடி காட்டுகிறது.  

மக நட்சத்திரக்காரர்களுக்கு:


மகம்- கேதுவின் நட்சத்திரம். எனவே ராகு- கேது பெயர்ச்சி உங்களுக்கு ஸ்தான பலன், பார்வைபலன், சேர்க்கை பலனாக முப்பலன்களையும் செய்யும். அது என்ன முப்பலன்? ஆனி மாதம் பௌர்ணமியன்று கோவில்களில் முப்பழ பூஜை நடக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறார்களா? மாம்பழம் - பலாப்பழம் - வாழைப்பழம் ஆகிய முக்கனியும் பழவர்க்கத்தில் முக்கியமானதாகக் கருதப்படும். காரைக்கால் அம்மையார் கணவன் வாங்கி அனுப்பிய இரண்டு மாம்பழங்களில் ஒன்றை சிவனடியாருக்குக் கொடுத்துவிட்டார். கணவன் வந்து ஒரு மாம்பழத்தைச் சாப்பிடும்போது, பழம் ருசியாக உள்ளது. இன்னொரு பழத்தையும் கொண்டுவா என்றார். காரைக்கால் அம்மையார் சிவனை மனமுருக வேண்டி மாம்பழம் பெற்று கணவருக்குத் தருகிறார். சிவன் தந்த பழம் அல்லவா- சுவைக்கு சொல்லவேண்டுமா? உண்மையறிந்த கணவன் அதுமுதல் காரைக்கால் அம்மையாரோடு குடும்பம் நடத்த விருப்பப்படாமல், அம்மையார் துறவியாகிறார். அதன் நினைவாகத்தான் ஆனிமாதம் சிவாலயங்களில் முப்பழ பூஜை நடக்கிறது. அதுமாதிரி ஸ்தான பலன் - பார்வை பலன் - சேர்க்கை பலன் என்று ராகு- கேதுவுக்கு முப்பலன் கணிக்கலாம். ஷட்பலன் என்பது ஆறுவகைப் பலன் இது முப்பலன்! சுயசாரப்பலன்- 9-ல் நின்று 3, 7, 11-ஆம் இடங்களைப் பார்க்கும் பலன். உச்ச சனியோடு ராகு சேர்ந்த பலன் ஆகிய காரணங்களால் உங்கள் விடாமுயற்சியும் வைராக்கியமும் உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். திருச்சி மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையாரை வழிபட வேண்டும். மலையேற முடியாதவர்கள் அடிவாரத்தில் உள்ள விநாயகரை வழிபடலாம்.

பூர  நட்சத்திரக்காரர்களுக்கு:

இந்த ராகு- கேது பெயர்ச்சி எல்லாவகையிலும் அற்புதப்பலன்களைச் செய்யும். பூரம் சுக்கிரனின் நட்சத்திரம். சுக்கிரனின் வீட்டில்தான் (துலாத்தில்) ராகு இருக்கிறார். அந்த வீட்டையே கேதுவும் பார்க்கிறார். சுக்கிரன் 3, 10-க்குடையவர் என்பதால் தொழில் முன்னேற்றம், உத்தியோக உயர்வு, புதிய வேலைவாய்ப்பு ஆகிய பலன்களை எதிர்பார்க்கலாம். சுக்கிரன் களஸ்திர காரகன் என்பதால் திருமணயோகமும் உண்டாகும். ஏழரைச் சனியில் பிரிந்த கணவன்-மனைவி இனி ஒன்று சேர்ந்து குடும்பம் நடத்தலாம். வாரிசு இல்லாதவர்களுக்கு வாரிசு உருவாகலாம். மயிலாடுதுறை அருகில் பேரளத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் திருமீயச்சூர் சென்று லலிதாம்பிகையை வழிபட வேண்டும். அங்கு 12 நாகர் சிலை உண்டு. அதற்குப் பாலாபிஷேகம் செய்யலாம்.

உத்திர நட்சத்திரக்காரர்களுக்கு:


உத்திரம் சூரியனின் நட்சத்திரம். சூரியனின் உச்சவீடு மேஷம்; நீசவீடு துலாம். மேஷத்தில் கேதுவும், துலாத்தில் ராகுவும் இருக்கிறார்கள். இருவருக்கும் சூரியன் பகை என்றாலும் உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ராகு- கேது பெயர்ச்சி நல்லதே செய்யும்; கெடுதல் செய்யாது. ஏனென்றால் ராகு நின்ற இடத்துக்கு சூரியன் 11க்கு உடையவர். கேது நின்ற இடத்துக்கு சூரியன் 5-க்குடையவர்.  தஞ்சாவூர் அருகில் ஒரத்தநாடு வழி பரிதியப்பர் கோவில் என்று சிற்றூர் உள்ளது. அங்கு பாஸ்கரேஸ்வரர் சுவாமி திருக்கோவில் உண்டு. சூரியன் அவரை வழிபட்டு சாப விமோசனம் பெற்ற திருத்தலம். அங்கு சென்று வழிபடவும்.

No comments:

Post a Comment

#கர்மவினையைவெல்ல.....தொடர்சி..3

# கர்மவினையைவெல்ல .....தொடர்சி..3 # காலபுருஷதத்துவமும்  கர்மாவும் : கால புருஷ தத்துவப்படி 12 இராசிகளும் தர்ம, கர்ம, காம மற்றும் மோட்ச ...