மேஷம்
(அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
(அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசி அன்பர்களே!
கடந்த ஒன்றரை வருடகாலமாக உங்கள் ராசிக்கு 8-ல் இருந்த ராகு இப்போது 7-ஆம் இடத்திலும்; 2-ல் இருந்த கேது இப்போது ஜென்ம ராசியிலும் மாறுகிறார்கள்.
கடந்த காலத்தில் ராகு- கேது இருந்த இடங்கள் அவ்வளவு சிறப்பான இடங்களாகச் சொல்ல முடியாவிட்டாலும், சிலருக்கு சில நன்மைகளும் நடந்தன என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் பொதுவாக பலருக்கும் பல கெடுதல்களே நடந்தன. இதில் வேடிக்கை என்னவென்றால் நன்மைகளை அனுபவித்தவர்களில் கெடுதல்களைச் சந்தித்தவர்களும் உண்டு; கெடுதல்களைச் சந்தித்தவர்களில் நன்மைகளை அனுபவித்தவர்களும் உண்டு.
பதவி உயர்வு, பண வருமானம், சம்பாத்தியம், சைடு பிசினஸ், ஆதாயம், கட்டட சீர்திருத்தம், மாடி கட்டியது, வீடு கட்டியது, புதிய வாகனம் வாங்கியது போன்ற நன்மைகளைச் சந்தித்தவர்கள்- மனைவிக்கு கருச்சிதைவு, தாய் அல்லது தந்தைக்கு உடல்நலக் குறைவு, வைத்தியச் செலவு, கண்டம், கர்மச் செலவு, உடன்பிறந்தவர்கள் வகையில் பகை, வருத்தம், பூர்வீகச் சொத்து விவகாரம், கௌரவப் போராட்டம், விபத்து போன்ற சங்கடங்களையும் சந்தித்ததுண்டு.
விருச்சிகத்தில் (8-ல்) ராகு இருந்த காலம், மேஷ ராசிக்கு பாக்கியாதிபதியான குரு மேஷத்தில் இருந்ததால், குருவும் ராகுவும் 6 ஷ் 8 சஷ்டாஷ்டகமாக இருந்ததால் தொழில், வேலை, உத்தியோகம் இவற்றில் ஏமாற்றம், நஷ்டம், விரயம், இடமாற்றம், பதவி இறக்கம் அல்லது பதவி நீக்கம் போன்ற அவலங்கள் ஏற்பட்டன. அத்துடன் ராகுவுக்கு சனி 11-ஆம் இடத்திலும், 12-ஆம் இடத்திலும் சஞ்சரித்து கெடுதலிலும் நன்மை என்பதுபோல சில திருப்பங்களும் மாற்றங்களும் நடந்தன.
இப்போது ராகு 7-ல் வந்திருப்பதால், 7-ஆம் இடம் மனைவி, கணவன் ஸ்தானம் என்பதால் திருமணத் தடை உண்டாகலாம். அல்லது தாமதத் திருமணம் ஏற்படலாம். ராகு துலா ராசியில் நிற்கும் காலம் குரு ரிஷபத்தில் 8-ல் இருந்தாலும், ராகுவோடு சனி சேர்க்கை என்பதாலும் சனி உச்சம் என்பதாலும் ஜாதக தசாபுக்திகள் யோகமாக இருந்தால் திருமணத் தடை விலகும், பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று சேரலாம். 7-ஆம் இடம் திருமண ஸ்தானம் என்பதோடு கூட்டுத் தொழில், உப தொழில் ஸ்தானமும் ஆகும். அந்த இடத்துக்கு சனி யோகாதிபதி என்பதால் உப தொழில் யோகம் அமையும். அத்துடன் மேஷ ராசிக்கு சனி தொழில் ஸ்தானாதிபதியும் லாபாதிபதியும் ஆவார். அவருடன் ராகு சேர்ந்திருப்பதால் புதிய தொழில் யோகமும் செய்யும் தொழில் விருத்தி யோகமும் எதிர்பார்க்கலாம். வேலையில் இருப்போருக்கும் நல்ல முன்னேற்றமும் திருப்பமும் உற்சாகமும் உண்டாகும். 2013-மே மாதம் வரை, குரு ரிஷபத்தில் இருக்கும்வரை தொழில், வேலை, உத்தியோகத்தில் சிற்சில இடையூறுகளும் தடைகளும் காணப்பட்டாலும், உங்கள் வைராக்கியத்தாலும் தன்னம்பிக்கை தைரியத்தாலும் அவற்றை சமாளிக்க வேண்டும். குரு மிதுன ராசிக்கு மாறிய பிறகு, சனியையும் குருவையும் 5-ஆம் பார்வையாகப் பார்க்கக்கூடும். அப்போது தர்மகர்மாதிபதி யோகம் உண்டாகும். அதாவது 9-க்குடைய குரு 10-க்குடைய சனியைப் பார்ப்பதால் தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படும். அதன்பிறகு தொழில், உத்தியோகத்தில் நிலவிய சங்கடங்களும் சஞ்சலங்களும் நீங்கிவிடும்.
வெளிவட்டார பழக்கவழக்கங்களில் தொடக்கத்தில் சில வேண்டாத பிரச்சினைகள் உருவானாலும், பிறகு விரும்பியபடி கருதிய காரியங்கள் கைகூடும்; எடுக்கும் முயற்சிகளில் படிப்படியான முன்னேற்றமும் முடிவில் வெற்றியும் உண்டாகும். 12-க்குடைய குரு 2-ல் நிற்பதால் பண வசதியைப் பொறுத்தவகையில் இல்லை என்ற தொல்லை விலகி, தேவைக்கு ஏற்ப உதவிகள் கிடைத்து எண்ணியபடி ஈடேறும். இரண்டாமிடத்து குரு, உங்கள் வாக்குச் சாதுரியத்தால் மற்றவர்களை உங்கள் வசப்படுத்தி, உங்கள் திட்டங்களையும் தேவைகளையும் நிறைவேற்றச் செய்வார். குடும்பத்தில் அத்தியாவசியத் தேவைகள் எல்லாம் ஒவ்வொன்றாக நிறைவேறும். மனைவி, பிள்ளைகள் விரும்பியதையும் கேட்டதையும் வாங்கிக்கொடுத்து சந்தோஷப் படுத்துவீர்கள். உங்கள்வழி உறவினர்களையும் மனைவிவழி உறவினர்களையும் அனுசரித்து வரவேற்று உபசரிப்பதன் மூலமாக சொந்தபந்தங்களின் அன்புக்கு ஆளாகலாம்.
ஜென்ம ராசி என்பது ஜென்ம லக்னத்துக்கு ஒப்பானது. கீர்த்தி, திறமை, கௌரவம், புகழ், பாராட்டு, செயற்கரிய சாதனை ஆகியவற்றைக் குறிக்கும் இடம். அங்கு கேது வந்திருப்பதால் இந்தக் காலகட்டத்தில் அவையெல்லாம் மிகச் சிறப்பாக செயல்படும். மதிப்பும் மரியாதையும் உருவாகும். உங்களுடைய செல்வாக்கும் உயரும். கேது ஆன்மிக ஞான காரகன் என்பதால் ஆன்மிகத் தொடர்புகள் அதிகரிக்கும். ஜாதகரீதியாக ராகு- கேது தசாபுக்தியோ அவர்களோடு சம்பந்தப்பட்ட தசாபுக்தியோ நடந்தால் ஜோதிடம், வைத்தியம், தியானம், யோகா, ஜெபதபம் போன்ற கலைகளில் ஈடுபாடு ஏற்படும். அவர்களோடு சனி சம்பந்தப்பட்டால் சிலர் மாந்திரீகம், வசியம், ஹிப்னாடிசம், மெஸ்மரிசம் போன்ற பயிற்சி களில் சேர்ந்து அருள் வாக்கு சொல்ல ஆசைப்படலாம்; பணம் சம்பாதிக்க விரும்பலாம். ஒரு காலத்தில் மாந்திரீகம், வசியம் என்பதெல் லாம் பாவத் தொழிலாகக் கருதப்பட்டது. ஜோதிடம்கூட தரித்திரம் பிடித்த கலையாக ஒதுக்கப்பட்டது. ஆனால் இன்று ஜோதிடத்துக்கு மிகவும் முக்கியத்துவம் ஏற்பட்டுவிட்டது. பல கல்லூரிகளில்- பல்கலைக் கழகங்களில் ஜோதிடத்துக்கு தனி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டு பாடம் சொல்லித் தருகிறார்கள். ஊர் ஊருக்கு ஜோதிடப் பயிற்சி நடத்தி ஆயிரக் கணக்கில் கட்டணம் வசூலிக்கிறார்கள். அதேபோல் மாந்திரீகம், அஞ்சன மை, அருள்வாக்குப் பயிற்சி என்று பாடம் நடத்துகிறார்கள். பத்திரிகைகளில் முழுப்பக்க விளம்பரம் கொடுக்கிறார்கள். இதற்கெல்லாம் மக்களிடையே வரவேற்பு இருக்கிறது என்பதால்தானே விளம்பரமும் பயிற்சி வகுப்புகளும் செயல்படுகின்றன. பெண்களும் அதிக அளவில் இதில் ஆர்வம் காட்டுகிறார்கள். அதே போல ஜோதிடப் பத்திரிகைகளும் ஏராளமாக வருகின்றன. குருப்பெயர்ச்சி, ராகு- கேது பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி என்று பெயர்ச்சி புத்தகங்களும் ஏராளமாக வெளியிடப்படுகின்றன. ராசிபலன் பகுதி வராத தினசரி பத்திரிகையே இல்லை. வாரப் பத்திரிகை, மாதப் பத்திரிகை எல்லாவற்றிலும் ராசிபலன் பகுதி இடம்பெறுகிறது. இது எதைக் குறிக்கிறது?
அமெரிக்க ஏவுகணை செவ்வாய் கிரகத்தில் இறங்கி ஒருபுறம் விஞ்ஞான சாதனை படைத்தாலும், செவ்வாய் நவகிரகத்தில் ஒன்று என்ற நம்பிக்கை மாறவில்லை. சனி மண்டலத்திலும் குரு மண்டலத்திலும் ஏவுகணைகள் இறங்கினாலும் சனிப்பெயர்ச்சிக்கும் குருப்பெயர்ச்சிக்கும் பூஜைகள் நடப்பதை தடுத்து நிறுத்தமுடியாது.
இவையெல்லாம் மூடநம்பிக்கையா என்றால் கண்டிப்பாக இல்லை. தமிழுக்கு தமிழன்னை என்று சிலைசெய்து வழிபடுகிறோம்; மாலை அணிவிக்கிறோம். மரியாதை செய்கிறோம். தமிழ் என்பது பெண் உருவச்சில்லையா? அதற்கு கையில் ஏடைக் கொடுத்து ஆடை அணிவித்து அலங்காரம் பண்ணுகிறோமே, தமிழ் அந்தத் தோற்றத்தில்தான் இருக்கிறதா? இல்லையே!
விவேகானந்தர் வெளிநாட்டில்போய் பிரசாரம் செய்தபோது லண்டனில் அரண்மனைக்குப் போயிருந்தார். அங்குள்ள ஒரு வேலையாள் உயிரற்ற சிலைகளையும் படங்களையும் தெய்வங்களாக நினைத்து வழிபடும் இந்தியர்கள் முட்டாள்கள் என்று வாதிட்டான். அங்கு மாட்டியிருந்த மன்னரின் படத்தை காறித்துப்பும்படி விவேகானந்தர் கூறினார்.
அவன், "அய்யோ- இது மகாராஜாவின் படம். இதைக் கேவலப்படுத்த மாட்டேன்' என்று கூறினான். "அதுமாதிரிதான் படங்களும் சிலைகளும் எங்களுக்குத் தெய்வங்கள்' எனவே அதை மதிக்கிறோம்' என்று பதில் சொன்னார். நம்முடைய நம்பிக்கை நமக்குப் பலன் தருகிறது.
ஆன்மிகம், ஜோதிடம், மந்திரதந்திரப் பயிற்சி வகுப்புகளில் பணம் செலுத்திப் படிப்பதற்கு இரண்டு காரணங்கள். -கலை நோக்கத்தோடு கற்று புலமைபெற்று புகழ்பெற வேண்டும் என்பது ஒன்று. இன்னொன்று கற்றதை வைத்து பிசினஸ் செய்து சம்பாதிக்கவேண்டும் என்பது. எந்தத் துறையிலும் அசல் என்பதும் உண்டு; போலி என்பதும் உண்டு. அசல் என்றும் நிலைத்து நிற்கும். போலி புகைந்து போய்விடும். நீதித்துறையிலும் லஞ்சம் புகுந்து நிதித்துறையாகி விட்டது என்றால் என்ன சொல்லுவது? அதனால்தான் தர்மதேவதையின் கண்களைக் கட்டிவிட்டார்கள் போலும்! ஆன்மிகப் போர்வையில் ஆதீனங்களும் மடாதிபதிகளும் சபலத்துக்கு அடிமையாகி தவறுகள் செய்கிறார்கள் என்றால், இன்றில்லாவிட்டாலும் ஒருநாள் தண்டனைக்குத் தப்பமுடியாது! சட்டத்தை ஏமாற்றினாலும் தர்மத்தை ஏமாற்றமுடியாது. ஆகவே ஜென்ம கேது உங்களுக்கு அப்பழுக்கற்ற புகழையும் பெருமையையும் பாராட்டையும் தரவேண்டும் என்றால், நீங்கள் சத்தியம் உடையவராகவும், ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பவராகவும், தர்மத்தைக் காப்பாற்றுபவராகவும் நடந்துகொள்ள வேண்டும்.
ஆக, நல்லது- கெட்டது என்ற இரண்டும் உங்கள் எண்ணம், செயலைப் பொறுத்தே அமைகிறது. ஒன்பது கிரகங்களும் நல்லவர்கள்தான்; ஒன்பது கிரகங்களும் கெட்டவர்கள்தான். "புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது' என்பது மாதிரி வைராக்கியமும் சாதனையும் இருந்தால் போதும்! காமவெறியனான அருணகிரியும், பணத்தாசை பிடித்த பட்டினத்தாரும், இரக்கமற்ற கொள்ளைக்காரனாக இருந்த வால்மீகியும் பேரும் பெருமையும் பெற்று வணங்கத் தக்கவர்களாக மாறியதற்குக் காரணம்- கெட்டவர்கள் நல்லவர்களாக மாறியதுதான். ஆக ராகு- கேது பெயர்ச்சியால் புகழைத் தேடப் போகிறீர்களா? பொருளுக்கு ஆசைப்பட்டு அழிவைத் தேடப் போகிறீர்களா என்பது நீங்கள் எடுக்கும் முடிவைப் பொறுத்தது; செயலைப் பொறுத்தது!
7-ல் இருக்கும் ராகு உங்கள் ஜென்ம ராசியைப் பார்க்கிறார். ஜென்ம ராசியில் நிற்கும் கேது 7-ஆம் இடத்தைப் பார்க்கிறார். ராகுவும் கேதுவும் கணவன்- மனைவி ஸ்தானத்தோடு தொடர்புள்ளதால் உங்கள் செல்வாக்கு, பெருமையில் உங்கள் வாழ்க்கைத் துணைக்கும் (கணவர் அல்லது மனைவிக்கு) பங்கு கிடைக்கும். வண்டிக்கு இரண்டு சக்கரம்போல வாழ்க்கையில் நீங்கள் இருவரும் விட்டுக்கொடுத்து அனுசரித்துப் போவதால் சந்தோஷமும் மேன்மையும் உண்டாகும். ஜோதிடத்தில் எனக்குள்ள பெருமையால் என் வாழ்க்கைத் துணைவிக்கும் மற்றவர்கள் பெருமையளிக்கிறார்கள். விழாக்களிலும் மற்ற குடும்ப விசேஷங்களிலும் எங்கள் இருவரையும் அழைத்து மரியாதை செய்கிறார்கள். அதேபோல மனைவி, எம்.பி. அல்லது எம்.எல்.ஏ அல்லது மந்திரி அல்லது அரசு உயர் அதிகாரியாக இருந்தால், அவரால் கணவருக்கும் வரவேற்பும் உபசரிப்பும் மரியாதையும் கிடைக்கும் அல்லவா! பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறுவதுபோல! மனைவி அல்லது கணவர் பேரில் புதிய தொழில் ஆரம்பிக்கலாம்; அல்லது பங்குதாரராகச் சேர்க்கலாம்.
மேஷ ராசிக்கு 7-ல் நிற்கும் ராகு 7-ஆம் பார்வையாக ஜென்ம ராசியைப் பார்த்த பலனைப் படித்தீர்கள். அந்த ராகு மேஷ ராசிக்கு 5-ஆம் இடத்தையும், 9-ஆம் இடத்தையும் பார்க்கிறார். பொதுவாக 5-ல் ராகு, செவ்வாய், சனி இருந்தாலும் பார்த்தாலும் புத்திர தோஷம் என்பார்கள். புத்திர காரகன் குருவும் 5-ல் இருந்தால் புத்திர தோஷம் எனப்படும். அதாவது புத்திரகாரகன் குரு புத்திர ஸ்தானத்தில் இருந்தால் புத்திர தோஷம், களஸ்திர காரகன் சுக்கிரன் களஸ்திரஸ்தானத்தில் (7-ல் மனைவி ஸ்தானத்தில்) இருந்தால் களஸ்திர தோஷம்; பிதுர்காரகன் சூரியன் பிதுர் ஸ்தானமாகிய 9-ல் இருந்தால் பிதுர்தோஷம். (தகப்பனா ருக்கு தோஷம்); சகோதர காரகன் செவ்வாய் சகோதர ஸ்தானத்தில் (3-ல்) இருந்தால் சகோதர தோஷம். இதில் விதிவிலக்கு சனிக்கு மட்டும். ஆயுள் காரகன் சனி ஆயுள் ஸ்தானமாகிய 8-ல் இருந்தால் தோஷமில்லை; ஆயுள் விருத்தியாகும். இந்த விதிப்படி 5-ல் ராகு இருந்தாலும், 5-ஐப் பார்த்தாலும், 7-ல் இருந்தாலும், 7-ஐப் பார்த்தாலும் புத்திர தோஷமும் களஸ்திர தோஷமும் உண்டு என்பது விதி. 5-ஐப் பார்ப்பதால் புத்திர தோஷம் என்பதா? புத்திரசோகம் என்பதா? புத்திர பாக்கியமே இல்லை யென்றால் புத்திர தோஷமாகும். பிள்ளைகள் பிறந்து பிறந்து இறந்தால் புத்திர சோகம்! தகப்பன் உயிரோடு இருக்கும்போது பிள்ளைக்காக- பிள்ளைக்கு தகப்பன் கொள்ளி வைத்தால் அது புத்திர சோகம்!
சில பிள்ளைகள் பெற்றோர் சொல்லைக் கேட்காமல் ஒழுக்கக் குறைவால் தவறுகள் செய்து எல்லாருக்கும் கேவலத்தை ஏற்படுத்தி சங்கடங்களை உண்டுபண்ணினால் புத்திர வேதனை.
5-ஆம் இடத்தைப் பார்க்கும் ராகு 9-ஆம் இடத்தையும் பார்க்கிறார். 9-ஆம் இடம் பூர்வ புண்ணியத்தையும் குறிக்கும்; தகப்பனார், உபாசனா தெய்வத்தையும் குறிக்கும். மேஷ ராசியில் நிற்கும் கேது 3-ஆம் இடத்தையும், 11-ஆம் இடத்தையும் பார்க்கிறார். ராகு- கேதுவுக்கு 3, 6, 11 நல்ல இடங்கள் என்பதால் சகோதர வகை சகாயமும் நன்மையும் உண்டாகும். தொழில் லாபம், விவகார வெற்றி, செய்முயற்சி முன்னேற்றம் ஆகிய பலன்களையும் எதிர்பார்க்கலாம்.
அசுவதி நட்சத்திரக்காரர்களுக்கு:
அசுவதி கேதுவின் நட்சத்திரம். கேது ஜென்ம ராசியில் இருப்பதால் உங்களுடைய செல்வாக்கும் அந்தஸ்தும் உயர உங்களுடைய திறமை வெளிப்படும். எதிர்பாராத யோகங்களையும் முன்னேற்றங்களையும் அடையலாம். சிலருக்கு வெளிநாட்டுவேலை யோகம் அமையும். கும்பகோணம் சுவாமிமலை அருகில் திருவலஞ்சுழி சென்று வழிபடவும்.
பரணி நட்சத்திரக்காரர்களுக்கு:
ராகு- கேது பெயர்ச்சி நன்மையானதாக அமையும். பரணி சுக்கிரனின் நட்சத்திரம். ராகு சுக்கிரனின் வீட்டில் இருப்பதால் திருமணத் தடை விலகும். உப தொழில் முயற்சிகளும் கைகூடும். சுக்கிரன் 2, 7-க்குடையவர் என்பதால் குடும்பம் அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அமையும். தனம் உண்டாகும். கும்பகோணம் ஆடுதுறை அருகில் கஞ்சனூர் சென்று வழிபடவும்
கார்த்திகை நட்சத்திரக்காரர்களுக்கு:
கார்த்திகை சூரியனின் நட்சத்திரம். சூரியன் 5-க்குடையவர். அந்த வீட்டையே ராகு பார்ப்பதால் உங்கள் திட்டங்கள் வெற்றியடையும். மக்கள் செல்வம், மகிழ்ச்சி, மனநிறைவு ஏற்படும். ஆடுதுறை அருகில் சூரியனார் கோவில் சென்று வழிபடவும்.
No comments:
Post a Comment