Tuesday, November 27, 2012

ரிஷபம் (கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)



ரிஷப ராசி அன்பர்களே!

ரிஷப ராசிக்கு இதுவரை 7-ல் இருந்த ராகு இப்போது 6-ஆம் இடத்துக்கும் (துலா ராசிக்கும்); ஜென்மத்தில் இருந்த கேது இப்போது 12-ஆம் இடத்துக்கும் மாறியிருக்கிறார்கள்.

ஏற்கெனவே ராகுவும் கேதுவும் இருந்த இடங்கள் சாதகமும் இல்லை; பாதகமும் இல்லை என்று சொன்னாலும், பெரும்பாலும் ரிஷப ராசிக்காரர்களுக்கு கடந்த காலத்தில் கெடுதல்கள் நடந்ததாகக் கூறமுடியவில்லை. ரிஷப ராசிக்கு 12-ல் குரு நின்றாலும் ரிஷப ராசிக்கு ராஜயோகாதிபதியான சனி 5-ல் இருந்ததால் ஏதோ ஒருவகையில் உங்களுக்கு பாதிப்புகள் அணுகவில்லை. பிள்ளைகள் வகையில் ஒருசிலர் தொல்லைகளையும் துன்பங்களையும் அனுபவித்தாலும்,. குடும்பத்தில் சில குழப்பங்களையும் பிரச்சினைகளையும் சந்தித்தாலும் வெளிவட்டாரத்தில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் மங்கவில்லை; மாறவில்லை; மறையவில்லை என்றே சொல்லவேண்டும்.

ஜென்ம கேதுவும் சப்தம ராகுவும் ஒருசிலருக்கு தொழில் போட்டி, கடன் கவலை, பொறாமையாளர்களின் சகுனித் திட்டங்கள், சதிவேலைகள் தலைவலியைத் தந்திருந்தாலும் அதற்குக் காரணம் ராகு- கேது அல்ல என்பதையும், 12-ஆம் இடத்து குரு 4, 6, 8-ஆம் இடங்களைப் பார்த்ததே காரணம் என்றுதான் சொல்லவேண்டும். 6-ஆம் இடமும், 8-ஆம் இடமும் கெட்ட இடங்கள். அதை சுபகிரகமாகிய குரு பார்த்ததால் எதிரி, கடன், வைத்தியச் செலவு, போட்டி, பொறாமைகளை வளர்த்தது; அதிகப்படுத்தியது. இப்போது ராகு- கேது பெயர்ச்சிக்கு முன்னரே ஜென்மத்தில் குருவும் 6-ல் சனியும் மாறிவிட்டபடியால் நிவர்த்தி உண்டாகிறது.

6-ஆம் இடத்துக்கு வந்திருக்கும் ராகுவும் 12-ஆம் இடத்துக்கு வந்திருக்கும் கேதுவும் அப்படியென்ன பெரிதாக சாதிக்கப் போகிறார்கள் என்று தோன்றும். ராகுவும் கேதுவும் பாவ கிரகங்கள்-குரூர கிரகங்கள். அவர்கள் எந்த இடத்தில் இருக்கிறார்களோ அந்த இடத்துப் பலன்களைக் கெடுப்பார்கள். 6-ஆம் இடம் எதிரி, கடன், வைத்தியச் செலவு, போட்டி, பொறாமை ஆகியவற்றைக் குறிக்கும் இடம். மேற்கண்ட பலன்களை ராகு கெடுப்பதால் எதிரி கெட்டுப் போவான்; கடன் கெட்டுப்போகும்; வைத்தியச் செலவு கெட்டுப்போகும்; போட்டி பொறாமை ஆகிய கெடுதல் எல்லாம் கெட்டுப்போகும். அது ஜாதகருக்கு அனுகூல பலன்தானே! அதேபோல 12-ஆம் இடம் விரயம். அதைக் கேது கெடுக்கும் என்பதால், விரயம் கெடுவதால் செலவு இல்லை என்று அர்த்தம். செலவு இல்லையென்றால் சேமிப்புதானே. அதாவது கெட்ட இடத்தில் கெட்ட கிரகம் வந்தால் கெடுபலன் இல்லாமல் போவதால்- நன்மை உண்டாகிறது. (டபுள் மைனஸ்= பிளஸ்). அதுமட்டுமல்ல, சனி, ராகு- கேது ஆகிய கிரகங்களுக்கு 3, 6, 11 தான் யோகம் தரும் இடங்களாகும்.

ராகு 11-ல் இருக்கும் இக்காலம் சனியும் உச்சமாக 6-ல் இருப்பதால் 6-ஆம் இடத்துக் கெடுபலன் மறையும். ராகுவும் சனியும் 12-ஆம் இடத்தைப் பார்ப்பதோடு, 12-ல் கேதுவும் 6-ஆம் இடத்தைப் பார்ப்பதால் விரயமும் வெட்டிச் செலவும் மறையும். ரிஷப ராசிக்கு சனி ராஜயோகாதிபதி என்பதால், 12-ஆம் இடம் என்பது சுபவிரயத்தைக் குறிக்கும் இடமாக மாறிவிடும். சுப மங்களச் செலவை ஏற்படுத்தும். திட்டங்கள் எல்லாம் நிறைவேறும்.

துலா ராசியில் வந்திருக்கும் ராகு (6-ல் இருந்து) 3-ஆம் பார்வையாக 4-ஆம் இடத்தையும்; 7-ஆம் பார்வையாக 12-ஆம் இடத்தையும்; 11-ஆம் பார்வையாக 8-ஆம் இடத்தையும் பார்க்கும். அதேபோல கேது 12-ல் (மேஷத்தில்) இருந்து 3-ஆம் பார்வையாக ரிஷப ராசிக்கு 10-ஆம் இடம் கும்பத்தையும்; 7-ஆம் பார்வையாக 6-ஆம் இடம் துலாத்தையும்; 11-ஆம் பார்வையாக 3-ஆம் இடம் மிதுனத்தையும் பார்க்கக்கூடும்.

ராகு 12-ஐப் பார்ப்பதால் சுபச் செலவும் சுபவிரயங்களும் உண்டாகும். பூமி, வீடு வாகனம், சுகம், கட்டட சீர்திருத்தம் சம்பந்தமான செலவுகள் சுபச் செலவுகள் ஆகும். 12 என்பது அயன சயன சுக போக ஸ்தானமாகும். அங்கு கேதுவும் இருப்பதால் அது சம்பந்தமான சுபச்செலவுகளும் உண்டாகும்.


எந்த சுகபோகத்தையும் செலவு செய்யாமல் அனுபவிக்க முடியாது. வடிகட்டின கஞ்சன்  செலவு செய்ய அஞ்சினால் அவனால் எந்த சுகபோக சௌக்கியத்தையும் அனுபவிக்க முடியாது. நல்ல சாப்பாடு வேண்டுமானாலும், ஏ.சி.கார் அல்லது ஏ.சி.கோச்சில் போக வேண்டுமென்றாலும் அதிகமாகத்தான் செலவாகும். இவையெல்லாம் ஆடம்பரச் செலவுகள்- அனாவசிய தேவைகள் என்று நினைத்து ஆசைகளைக் கட்டுப்படுத்திக்கொண்டால் சுகபோகத்தை ஜாலியாக என்ஜாய் பண்ணமுடியாது. ரேஷன் அரிசி ஒரு ரூபாய்க்கு வாங்கிச் சமைத்தால் ருசி இருக்காது. ஆனால் நாற்பது ரூபாய்க்கு பொன்னி அரிசி வாங்கிச் சமைத்தால் அதன் ருசியே தனி. இருப்பவன் சாப்பிடாமல் இருந்தால் விரதம்! இல்லாதவன் சாப்பிடாமல் இருந்தால் பட்டினி! சுகபோகங்களைத் தியாகம் செய்தால் மனப்பக்குவம்! சுகபோகங்கள் அனுபவிக்க வசதியில்லாதவன் ஆசைப்பட்டால் கடன் வாங்கவேண்டும் அல்லது தப்பு செய்யவேண்டும். தப்பு செய்தால் பாவம்! பாவத்தின் சம்பளம் தண்டனை! மனப்பக்குவம் இருந்தாலும் மனக்கட்டுப்பாடு வந்தாலும் ஞானம்! ஞானம் பெற்றவர்களுக்கு மறுபிறவி இல்லை. 12-ல் கேது இருந்தால் மறுபிறவி இல்லை என்பது ஜோதிட விதி. ஆனால் 12-ல் கேது இருப்பவர்களுக்கு எல்லாம் மறுபிறவி இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால் ஞானம் உடையவர்களுக்கும் ஆசைகளைத் துறந்தவர்களுக்கும்தான் மறுபிறவி இல்லை. ஆயிரக்கணக்கான பேராசைகளையும், சாகப்போகும் காலத்திலும் பந்தம், பாசம், சொந்தம் என்று சபலப்பட்டு, சாகப் போகிறோமே என்று பயந்து பயந்து சாக மனமில்லாதவர்களுக்கும் 12-ல் கேது இருந்தால் மறுபிறவி இல்லாமல் போகுமா? பிறவிக்குக் காரணம் ஆசை என்றுதான் புத்தர் போன்ற மகான்கள் போதிக்கிறார்கள். எனவே 12-ல் கேதுவும் அவரை ராகுவும் பார்ப்பதால், அறவழி, தர்ம நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கலாம். அப்படிப்பட்ட தர்ம செலவுகளைச் செய்தால் புண்ணியம் கிடைக்கும். மது, மாது, சூது போன்ற வகையில் அதர்மச் செலவுகளைச் செய்தால் பாவம் ஏற்படும்!

8-ஆம் இடம் என்பது விபத்து, வேதனை, இழப்பு, ஏமாற்றம், நஷ்டம், எதிர்பாராத சங்கடம், கௌரவப் பிரச்சினை, ஆயுள் மாரகம் ஆகியவற்றைக் குறிக்கும் இடம். அந்த வீட்டை ராகு பார்ப்பதால் அவற்றை அழிப்பார். ஒழிப்பார். அந்த வீட்டை சனியும் பார்ப்பதால் 8-ஆம் பாவக் கெடுதல்கள் எல்லாம் செயலற்றுப்போகும். அத்துடன் 4-ஆம் இடத்தையும் (சிம்மத்தை) ராகு பார்ப்பதால் சிலருடைய ஆரோக்கியத்துக்கு பிரச்சினை ஏற்படும். உடல்நலக் குறைவு, தாய்க்குப் பீடை, பூமி, வீடு வாகனம் சம்பந்தமான பிரச்சினைகளைச் சந்திக்கலாம். முன்னதாக ராகு பார்வையால் 4-ஆம் பாவம் சம்பந்தமான சுபச்செலவுகள் என்று குறிப்பிட்டோம். அதனால் ஜாதக தசா புக்திகள் யோகமாக இருந்தால் சுபச்செலவுகளும், மோசமாக இருந்தால் வீண் செலவுகளும் ஏற்படுமென்று கருதவேண்டும்.

ரிஷப ராசிக்கு 10-ஆம் இடம் தொழில் ஸ்தானத்தை 12-ல் உள்ள கேது பார்ப்பதோடு, தொழில் ஸ்தானாதிபதி சனியையும் பார்ப்பதால் தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் கைகூடும். படித்து முடித்துப் பட்டம் பெற்றும் வேலையில்லாமல் தடுமாறியவர்களுக்கு உடனடியாக வேலை யோகம் உண்டாகும். வெளிநாடு அல்லது வெளிமாநில வேலை வாய்ப்புக்கும் இடம் உண்டாகும். தொழில், வாழ்க்கை, உத்தியோகத்தில் பிரச்சினைகளும் கவலைகளும் ஒருபுறம் இருந்தாலும்- சைலன்ஸர் கரும்புகையைக் கக்கினாலும் இஞ்சின் கடாமுடா சத்தம் எழுப்பினாலும் பிரேக் டவுன் ஆகாமல் ஓடும் வாகனம்போல உங்களுடைய 10ஆம் பாவம் வாழ்க்கை, தொழில், உத்தியோகம் தேக்கமில்லாமல் ஓடும். 10-ஆம் பாவம் சனி வீடு- அவர் நிற்பது சுக்கிரன் வீடு. எனவே இரும்பு, மிஷினரி, வாகனம், யந்திரம் சம்பந்தப்பட்ட சனியின் தொழில்களும்; ஆடை, அலங்காரம், ஜவுளி, டெக்ஸ்டைல், பவர்லூம், வேஸ்ட்காட்டன், ஆபரணம், வாசனைப் பொருள்கள், சினிமா, சின்னத்திரை, கேபிள் டி.வி போன்ற சுக்கிரனின் தொழில்களும் மிகச்சிறப்பாக இயங்கும்.

கேது 10-ஆம் இடத்தைப் பார்ப்பதாலும், ரிஷப ராசிக்கு 11-ஆம் இடத்ததிபதி குரு ஜென்ம ராசியில் நிற்பதாலும், 10-க்கு லாபஸ்தானத்தை (தனுசுவை) ராகுவும் பார்ப்பதாலும், எந்தத் தொழில் செய்தாலும் அந்தத் தொழில் லாபகரமாகவும் முன்னேற்றகரமாகவும் ஆதாயமாகவும் அமையும். அதேபோல உத்தியோகம், வேலையில் இருப்போருக்கும் முன்னேற்றகரமான திருப்பங்கள் உண்டாகும். 10-க்குடையவர் சனி 10-க்கு 9-ல் (பாக்கியத்தில்) உச்சம் பெறுவதும் உங்களுக்கு அனுகூலமான நிலைதான். அவர் ராகு- கேது சம்பந்தம் பெறுவதால் முஸ்லிம் அல்லது கிறிஸ்துவ சமூகத்தினருடன் பார்ட்னர்ஷிப் ஏற்படவும் இடமுண்டு. சிலர் வெளிநாட்டு வர்த்தகத் தொடர்பும் வைத்துக்கொள்ளலாம்.

ராசிக்கு 6-ல் சனி, ராகு சேர்க்கையும்; அதற்கு கேது பார்வை என்பதாலும் தொழில் வகைக்கோ அல்லது வீடு, வாகன, காலியிடத்துக்காகவோ கடன்கள் வாங்கலாம். நீண்டகாலத் தவணைக் கடன்கள் கிடைக்கும். அது சுபக்கடன். சில மாணவர்களுக்கு, கல்விக் கடனும் கிடைக்கும். ஜாதகத்தில் 6, 8, 12-க்குடைய சம்பந்தம் உள்ள தசாபுக்திகள் நடந்தால் வைத்தியச் செலவுக்காக கடன் வாங்க நேரும். அல்லது தங்க நகைகளை அடகுவைத்துப் பணம் புரட்டலாம். அப்படிப்பட்ட நிலை இருந்தால் நோய்நிவர்த்திக்கு வாலாஜாபேட்டை அருகில் தன்வந்திரி ஆரோக்கிய பீடம் சென்று தன்வந்திரி ஹோமம் செய்யவும்.

"ஓம் நமோ பகவதே வாசுதேவாய
தன்வந்த்ரயே அம்ருதகலச ஹஸ்தாய
ஸர்வ ஆமய விநாசநாய த்ரைலோக்ய
நாதாய ஆரோக்யலட்சுமி ஸமேத
தன்வந்த்ரயே மஹா விஷ்ணவே நம':

என்பது தன்வந்திரி பகவானின் மூலமந்திரம். கல்விக்கு சரசுவதி- செல்வத்துக்கு மகாலட்சுமி- வீரத்துக்கு துர்கை என்பதுபோல ஆரோக்கியத்துக்கும் நோய் நிவர்த்திக்கும் தன்வந்திரிதான் கடவுள். இந்த மந்திரத்தை தினமும் 108 முறை ஜெபம் செய்தால் நோய் அணுகாது.


அதேபோல கடன் நிவர்த்திக்கு கும்பகோணம் அருகில் திருச்சேறை என்ற ஸ்தலத்தில் கடன் நிவர்த்தீஸ்வரர் கோவில் இருக்கிறது. சாரபரமேஸ்வரர் சந்நிதி! அங்கு 11 திங்கள்கிழமை தாரித்ரிய தஹன சிவஸ்தோத்திரம் (10 பாடல்கள்) சொல்லி, ஈஸ்வரனுக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்தால் கடன் நிவர்த்தியாகும், உடனே அசலைக் கட்டமுடியாவிட்டாலும் வட்டியை ஒழுங்காகக் கட்டலாம். கடன் கொடுத்தவர்களின் விரட்டுதல் இருக்காது. நேரில் போக முடியாதவர்கள் எஸ். சுந்தரமூர்த்தி குருக்கள், தெற்குவீதி, திருச்சேறை- 612605 என்ற முகவரிக்கு தொடர்பு கொண்டு அர்ச்சனைக்கு ஏற்பாடு செய்யலாம். செல் 94426 37759: 94437 37759-ல் தொடர்பு கொள்ளலாம்.

திருவாரூரிலும் கடன் நிவர்த்தீஸ்வரர் சந்நிதி இருக்கிறது. தியாகராஜர் சந்நிதிக்கு வடபுறம் உள்ளது. ஆரம்பத்தில் அங்குதான் திங்கள் கிழமை தோறும் அபிஷேகம் செய்து, தாரித்ரிய தஹன சிவதோத்திரத்தைச் சொல்லி அர்ச்சனை செய்தார்கள். அதைப் பார்த்துதான் திருச்சேறையில் பிற்பாடு செயல்பட்டார்கள். தற்போது திருச்சேறையில் மிகவும் சிறப்பாக அபிஷேகம், அர்ச்சனை, பூஜை நடக்கிறது.

கார்த்திகை நட்சத்திரக்காரர்களுக்கு:

இந்த ராகு- கேது பெயர்ச்சி அனுகூலமான பலனைத் தருமென்று எதிர்பார்க்கலாம். ராகுவும் கேதுவும் சூரியனுக்கும் சந்திரனுக்கும் பகைவர்கள் என்றாலும், சூரியன் வீடான சிம்மத்தை ராகு பார்ப்பதாலும்; சூரியனின் உச்ச வீடான மேஷத்தில் கேது நிற்பதோடு சிம்ம ராசிக்கு 9-ல் திரிகோணத்தில் இருப்பதாலும் தற்காலிக நட்பு கிரகங்கள்போல ஆவார்கள். அதனால் சூரியன் நட்சத்திரமான கார்த்திகையில் பிறந்தவர்களுக்கு அதிக அளவில் நன்மைகள் செய்யாவிட்டாலும் நிச்சயம் கெடுதல் செய்யமாட்டார்கள் என்று நம்பலாம். ஆளும் கட்சிக்காரர்களும் எதிர் கட்சிக்காரர்களும் விமான நிலையத்தில் ஜனாதிபதியை வரவேற்கப் போகும்போது வணக்கம் சொல்லிக் கொள்வார்களே தவிர சண்டை போட்டுக் கொள்ளமாட்டார்கள் அல்லவா! ரிஷப ராசிக்கு சூரியன் 4-க்குடையவர் என்பதால் தேக ஆரோக்கியத்தில் தெளிவு ஏற்படும். சிலருக்கு வீடு மாற்றம் ஏற்படலாம். சிலருக்கு பதவி மாற்றம் ஏற்படலாம். சிலர் சொந்த நிலம், பூமி, மனை, வாகனம் வாங்கலாம். மாணவர்களுக்கு கல்வி மேன்மையும் பரீட்சையில் முன்னேற்றமும் வெற்றியும் உண்டாகலாம். தாயின் அன்பும் ஆதரவும் உண்டாகும். தஞ்சாவூர் அருகில் (ஒரத்தநாடு வழி) பரிதியப்பர் கோவில் என்ற ஊரில் பாஸ்கரேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. சூரியன் ஈஸ்வரனை வழிபட்டு சாப விமோசனம் அடைந்த தலம். அங்கு ஞாயிற்றுக்கிழமை சென்று வழிபடலாம். அபிஷேக பூஜை, அர்ச்சனை செய்யலாம். பிதுர்தோஷம் நிவர்த்தியாகும்.

ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு:

ரோகிணி சந்திரனின் நட்சத்திரம். சந்திரன் உங்கள் ராசியான ரிஷபத்தில்தான் உச்சம். சந்திரனின் வீடான கடகத்துக்கு 4-ல் ராகுவும் 10-ல் கேதுவும் இருக்கிறார்கள். ஆனால் ரிஷப ராசிக்கு 6-ல் ராகுவும் 12-ல் கேதுவும் அமைகிறார்கள். எனவே தொழில், குடியிருப்பு, வாகன யோகம் வகையில் சுபச்செலவும் கடனும் உண்டாகும். அது சுபக்கடன்; சிலருக்குக் கல்விக் கடன் அமையும். தாய்- பிள்ளை உறவில் இணைவும் பாசமும் உண்டாகும். ஜாதக யோகம் இருந்தால் கடல்கடந்து வெளிநாட்டுக்குப் போய் வேலை பார்க்கலாம். கும்பகோணத்துக்கும் திருவையாறுக்கும் இடையில் திங்களூர் என்ற ஊர் உள்ளது. சந்திரன் வழிபட்ட தலம். அப்பர் அடிகளின் சீடர் அப்பூதி அடிகள் இங்குதான் தண்ணீர்ப்பந்தல், கல்விக்கூடம், தர்மசத்திரம் போன்ற பல நல்ல காரியங்களைச் செய்தார். எல்லாவற்றுக்கும் அப்பர் அடிகள் பெயரையே வைத்தார். எதிர்பாராமல் அவ்வூருக்கு வந்த அப்பர் அடிகள் தன் பேரில் தர்ம கைங்கர்யங்களைக் கண்ணுற்று அப்பூதி அடிகளைத் தேடிப் போனார். அப்பூதி அடிகள் அவருக்கு விருந்து படைக்க விரும்பினார். வாழை இலைபறிக்கப் போன அப்பூதி அடிகளின் மகனை பாம்பு தீண்டி இறந்து போனான். அதை மறைத்து குருநாதருக்கு இலைபோட்டு பரிமாற, அப்பர் சுவாமிகள் அப்பூதி அடிகளின் மகனுக்கும் இலைபோட வற்புறுத்த, "அவன் இங்கு உதவான்' என்று பெற்றோர் அழுதார்கள். உண்மையறிந்த அப்பர் இறந்துபோன சிறுவனின் உடலை எடுத்துச்சென்று திங்களுர் சிவன் சந்நிதியில் கிடத்தி, சிவனிடம் மன்றாடிப் பிரார்த்தித்தார். அப்பூதி அடிகளின் மகன் உயிர் பெற்றெழுந்தான். இப்படி அற்புதத் திருவிளையாடல் நடந்த திருத்தலம்! திங்கள்கிழமை சென்று பாலாஷேகம் செய்து வழிபடலாம். அல்லது ருத்ர ஹோமம் செய்து ருத்ராபிஷேகம் செய்யலாம். 

மிருகசீரிட நட்சத்திரக்காரர்களுக்கு:

மிருகசீரிடம் செவ்வாயின் நட்சத்திரம். செவ்வாயின் வீடான மேஷத்தில்தான் கேது நிற்கிறார். அந்த வீட்டை ராகுவும் சனியும் பார்க்கிறார்கள். ரிஷப ராசிக்கு செவ்வாய் 7, 12-க்குடையவர். இந்த ராகு கேது பெயர்ச்சியில் திருமணமாகாத ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமணம் கைகூடும். கடந்த காலத்தில் ரிஷப ராசிக்கு 7-ல் ராகுவும் ஜென்மத்தல் கேதுவும் நின்று நாகதோஷத்தை ஏற்படுத்தி திருமணத் தடையை ஏற்படுத்தினர். இப்போது விலகிவிட்டதால் ராகு- கேது தோஷம் விலகிவிட்டது. அப்போது நீங்கள் செய்த பரிகார பூஜைகளுக்கெல்லாம் இப்போதுதான் பலன் உண்டாகும். எந்த ஒரு பூஜைக்கும் பிரார்த்தனைக்கும் உடனே பலன் கிடைக்காது. "அடுத்து முயன்றாலும் ஆகும் நாளன்றி எடுத்த கருமங்கள் ஆகா; தொடுத்து உருவத்தால் உயர்ந்த நீண்ட மரங்களும் பருவத்தால் அன்றிப் பழா' என்பது பாடல். அதற்குரிய காலம் நேரம் கனியும்போது எல்லாம் நிறைவேறிவிடும்.  கேது ஜென்மத்திலும்  ராகு ஏழிலும் இருந்த காலம் குரு 12-ல் மறைந்திருந்ததால் உங்கள் பிரார்த்தனை நிறைவேறவில்லை, இப்போது ரிஷபத்தில் குரு அமர்ந்து 7-ஆம் இடத்தைப் பார்ப்பதால் இப்போதுதான் அதற்குரிய காலம் கனிந்துள்ளது. பலனும் கைமேல் கிடைக்கும். வைத்தீஸ்வரன் கோவில் சென்று முத்துக்குமார சுவாமியை வழிபட வேண்டும்.

No comments:

Post a Comment

#கர்மவினையைவெல்ல.....தொடர்சி..3

# கர்மவினையைவெல்ல .....தொடர்சி..3 # காலபுருஷதத்துவமும்  கர்மாவும் : கால புருஷ தத்துவப்படி 12 இராசிகளும் தர்ம, கர்ம, காம மற்றும் மோட்ச ...