Showing posts with label உத்திராடம். Show all posts
Showing posts with label உத்திராடம். Show all posts

Wednesday, November 28, 2012

மகரம் (உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)



மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)



மகர ராசி அன்பர்களே!

இதுவரை மகர ராசிக்கு 11-ல் விருச்சிக ராசியில் இருந்த ராகு இப்போது 10-ஆம்  இடத்துக்கும்; 5-ல் இருந்த கேது இப்போது 4-ஆம் இடம் மேஷத்துக்கும் மாறியிருக்கிறார்கள்.

ஏற்கனவே ராகு இருந்த இடம் சூப்பரோ சூப்பரான இடம். கேது இருந்த இடமும் திரிகோண ஸ்தானம், நல்ல இடம்தான். அதனால் உங்களுக்கு முன்னேற்றத்தையும் வெற்றியையும் லாபத்தையும் தந்திருக்கும். அடிப்படை வாழ்க்கை வசதிகளுக்கும் சௌகர்யங்களுக்கும் கேடு கெடுதியில்லாத யோகத்தையும் கொடுத்திருக்கும். பிள்ளைகளுக்கு நல்லது, வீடு, வாசல், வாகன யோகம், தொழில், சம்பாத்தியம் ஆகிய யோகங்களையும் செய்திருக்கும்.

அதேபோல 5-ஆம் இடத்துக் கேதுவும் கடந்த காலத்தில் மனமகிழ்ச்சியையும், மனத்திருப்தியையும், மனதில் நீண்டகாலமாக வகுத்த திட்டங்களை நிறைவேற்றியும் உங்களை சந்தோஷப் படுத்தி யிருப்பார். பொதுவாழ்வில் ஈடுபட்டவர்களுக்கும், அரசியலில் இருந்தவர்களுக்கும் ஓரளவு சத்துருக்களின் இடையூறுகள் விலகி- தொல்லைகள் நீங்கி எதிர்ப்பில்லாத சூழ்நிலையில் வெற்றிப்பயணம் போயிருக்கலாம்.

மேற்கண்ட யோக பலன்கள் எல்லாம் மகர ராசியில் பிறந்த சிலருக்கு நடந்தது உண்மைதான். ஆனால் பலருக்கு சனியும் குருவும் இருந்த நிலை அனுகூலமாக இல்லாததால், வசதி வாய்ப்புகள் இருந்தும்-அன்ன ஆடை தரித்திரம் இல்லாதிருந்தும்- மற்ற வகையில் மன அமைதியும் திருப்தியும் சந்தோஷமும் இல்லாத நிலையைச் சந்தித்தவர்களும் உண்டு. நல்ல படிப்பு இருந்தும் அதற்கேற்ற வேலையில்லாமலும், வேலையிருந்தும் வேலைக்கேற்ற சம்பளம் இல்லாமலும், வேலையும் சம்பளமும் இருந்தும் வேலையில் மேலதிகாரிகளிடம் நற்பெயர் வாங்க முடியாதபடி கெடுபிடியும் டென்ஷனுமாக சில ஆதங்கத்தை அடைந்தவர்கள் உண்டு. வேறுசில ஆண்களுக்கு அல்லது பெண்களுக்கு பருவ வயதாகியும் திருமணம் கூடாமல் தள்ளிப் போனதால் உள்ளத்தில் வேதனை! வேறுசிலருக்கு பெற்றோர்களைப் புறக்கணித்துவிட்டு தங்கள் இஷ்டத்துக்கு வேற்று ஜாதியில் காதல் திருமணம்- கலப்புத்திருமணம் செய்துகொண்டு வெளியேறிய பிள்ளைகளால் குடும்ப கௌரவக்குறைவு-தலைக்குனிவு! சில பிள்ளைகள் வகையில், வயதுக்கு மீறிய பிள்ளைகளுக்கு காலாகாலத்தில் கல்யாணம் செய்துவைத்து கடமையை முடித்துவிட்டு கண்ணை மூடலாம் என்று வயதான பெற்றோர்கள் நினைக்க, கல்யாணமே வேண்டாம் என்று, கல்யாணப் பேச்சை எடுத்தாலே எரிந்துவிழும் பிள்ளைகளின் நிலையினால் மெல்லவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் தவிப்பு! வயது நாற்பதைக் கடந்தும் "தனக்கு திருமணம் வேண்டாம்; தம்பிக்கு பெண் பார்த்து முடித்து வையுங்கள்' என்று சொல்லும் அண்ணனை நினைத்துக் கவலை! அழகு இருக்கு; படிப்பு இருக்கு; வசதி வாய்ப்பு இருக்கு. எல்லாம் இருந்தும் பெண்ணை பார்த்துவிட்டுப் போகிற மாப்பிள்ளைவீட்டார், ஆயில் நட்சத்திரம், மூல நட்சத்திரம் என்றும்; சகுனங்கள் சரியில்லையென்றும் எந்த பதிலும் சொல்லாமல் போய்விடுவதால் குழப்பம்! இப்படி 5-ஆம் இடத்து கேதுவும் அவரைப் பார்த்த ராகுவும் கடந்த காலத்தில் பலரை நொந்து  நோகடிக்கச் செய்தார்கள்.

இப்போது 4-ல் வந்திருக்கும் கேதுவும், 10-ல் வந்திருக்கும் ராகுவும் இந்தக் கவலைகளைப் போக்குவார்களா? கடந்த காலத்தில் ஏற்பட்ட காயங்களுக்கு மருந்து போடுவார்களா என்றெல்லாம் நீங்கள் எதிர்பார்க்கலாம்.

10-ஆம் இடம் என்பது தொழில், வாழ்க்கை ஸ்தானம். அந்தஸ்து, மதிப்பு, மரியாதை, செய்முயற்சிகளையும் குறிக்கும். 4-ஆம் இடம் என்பது பூமி, வாகனம், வீடு, கல்வி, தேக சுகம், தாயார் ஆகியவற்றைக் குறிக்கும் இடம். 4, 7, 10 கேந்திர ஸ்தானம் ஆகும். சுபகிரகங்களுக்கு திரிகோண ஸ்தானங்களும், பாபகிரகங்களுக்கு கேந்திர ஸ்தானங்களும் பலமான இடங்கள் ஆகும். ராகுவும் கேதுவும் பாபகிரகங்கள் என்பதால் கேந்திர ஸ்தானங்கள் (4, 10) அவர்களுக்கு உகந்த இடங்கள் என்பதை ஏற்றுக் கொள்ளலாம். எனவே மகர ராசிக்காரர்களுக்கு ராகு-கேது பெயர்ச்சி நல்லதாக அமையும் என்பது உண்மைதான்.

10-ல் ராகு இருப்பதோடு, அவரோடு மகர ராசிநாதன் சனி உச்சமாக சேர்ந்துள்ளார். எனவே தொழில் துறையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். புதிய தொழில் முயற்சிகளும் கைகூடும். தொழில் அதிபர்கள் சங்கத்தில்- அல்லது வர்த்தர்கள் சங்கத்தில்- லயன்ஸ் கிளப்- காஸ்மோபாலிடன் கிளப்- ரோட்டரி கிளப்- உற்பத்தியாளர்கள் சங்கத்தில் முக்கிய பொறுப்புகள் ஏற்கும்படி உயர்வு ஏற்படும். ஜாதக தசாபுக்தி யோகமாக இருந்தால் கௌரவப் பட்டமும் பாராட்டும் கிடைக்கும். 10-ல் உள்ள ராகுவால் மருத்துவ சேவையில் இருப்பவர்களுக்கு வெளிநாட்டுப் பட்டம், பாராட்டு அல்லது மேற்படிப்புக்காக வெளிநாட்டுப் பயணம் போவது போன்ற நற்பலன்கள் உண்டாகும்.

சம்பளத்துக்கு வேலை பார்க்கும் சிலர் பொறுப்புகளைச் சுமந்து, கடமை உணர்ச்சியோடு பணியாற்றி மேன்மையடையலாம். ஒரு எளிய குடும்பத்தில் பிறந்தவர் மாவு தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் பணியாற்றினார். சாதாரண வேலையில் சேர்ந்தவர் தமது விசுவாசமான உழைப்பால் படிப்படியாக உயர்ந்து தயாரிப்பு, வெளியூர் ஆர்டர், விற்பனை என்று எல்லாப் பொறுப்புகளையும் கவனித்தார். முதலாளியின் மகன்கள் இருவரும் பேருக்கு நிர்வாகத்தில் பணப்பொறுப்பை கவனித்துக் கொண்டார்கள். அவருடைய திறமையால் வாடகைக்கு இருந்த அரவை மில்லை சொந்த மில்லாக்கி, கடையும் சொந்தக் கடையாகி, முடிவில் ஒரு பார்ட்னராகி விட்டார். முதலாளிக்கு ஒரே மகள். அவரையும் அவருக்குத் திருமணம் முடித்து, சில ஆண்டுகளில் தமிழ்நாடுமட்டுமல்ல; வடநாட்டிலும் பிரபலமாகி வேன் வைத்து சப்ளை பெரிதாகி விட்டது! அவர் சொந்தவீடு கட்டி கிரகப்பிரவேசமும் செய்துவிட்டார். முதலாளி (மாமனார்) வீடு பழைய வீடு. மருமகன் பங்களா டைப்பில் புதிய வீடு கட்டி ஆடம்பரமாக கிரகப்பிரவேசம் செய்துவிட்டார். அதுதான் பிரச்சினை. அவர் மைத்துனர்கள் தங்கள் தகப்பனாரிடம் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லிக்கொடுத்து தொழிலைப் பிரிக்கும்படி செய்துவிட்டார்கள். பஞ்சாயத்து வந்து விட்டது. கடை மைத்துனர்களுக்கு- வியாபாரம் மருமகனுக்கு என்று முடிவாகி, பழைய விலாசத்திலேயே அவர் தொழிலை நடத்தி கோடீசுவரர் ஆகிவிட்டார். சொந்தத்தில் மாவு மில்லும் கட்டிவிட்டார். இப்படி ஒரு யோகம் உங்களுக்கும் வரலாம். ராகுவும் சனியும் அந்த அதிர்ஷ்டத்தை வழங்கலாம்.

4-ஆம் இடத்து கேது உங்களுக்கு சொந்த இடம், வீடு, வாகன யோகத்தைத் தருவார். ஏற்கெனவே வாங்கிப் போட்ட காலி இடம் இப்போது பல மடங்கு விலை ஏற்றத்தால் மதிப்பு கூடிவிடும். சில பகுதியை நல்ல விலைக்கு விற்று மீதிப் பகுதியில் சொந்த வீடு கட்டலாம். கேது 6-ஆம் இடத்தைப் பார்ப்பதால் அது சம்பந்தமாக கடன் வாங்க நினைத்தாலும் அத்திட்டம் நிறைவேறும்; கடன் கிடைக்கும். வீட்டுக்கடன், கார் கடன், தொழில் கடன் போன்றவையெல்லாம் கிடைக்கும்.

கேது நிற்பது செவ்வாயின் வீடு. செவ்வாய் பூமிகாரகன். ராகு நிற்பது சுக்கிரன் வீடு. சுக்கிரன் வாகனகாரகன். ஆடை, அலங்கார, ஆடம்பரப் பொருள்காரகன். அதனால் ரியல் எஸ்டேட், பில்டிங் காண்ட்ராக்ட், பிரமோட்டர்ஸ் போன்றவர்களுக்கும் இந்த ராகு- கேது பெயர்ச்சி முன்னேற்றத்தையும் யோகத்தையும் லாபத்தையும் தரும். கோவையில் ஒரு பிரமோட்டர் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றதாக பத்திரிகை செய்தி!  கேது ஞானகாரகன். பெரிய நாயக்கன் பாளையத்தில் பி.எஸ்.பி. பேரவையில் உள்ள ஒருவர் ஜோதிட ஆராய்ச்சிக்காகவே செவாலியர் விருது வாங்கியிருக்கிறார். அமரர் தென்காசி மிஸ்டிக் செல்வத்துக்கும் கௌரவ டாக்டர் பட்டம் கிடைத்தது. அவருக்கு மிஸ்டிக் செல்வம் என்று பெயர் அமைத்துக் கொடுத்தது அடியேன்தான். வாலாஜா பேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீட நிறுவனர் முரளீதர சுவாமி களுக்கும் இத்தாலியப் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் கொடுத்திருக்கிறார்கள். இப்படி ராகு கேது உங்களை கௌரவிக்கும்.

அடியேனுக்கும் ஜோதிட சேவையைப் பாராட்டி பல விழாக்களில் பாராட்டும் பட்டமும் கொடுத்து இருக்கிறார்கள். தெத்துப்பட்டி ராஜ காளியம்மன் கோவிலிலும் துரை நடராஜனார் அவர்கள் பாராட்டி ராஜகாளி விருது கொடுத்திருக்கிறார். இவையெல்லாம் ராகு-கேது அனுக்கிரகம் இருந்தால்தான் கிடைக்கும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கும் சுக்கிரன் அதிபதி என்பதால், சுக்கிரன் வீட்டில் ராகு இருப்பதால் பாராட்டும் பட்டமும் விருதும் கிடைக்கும்.

மகர ராசிக்கு 5-ல் குரு இருப்பதால் உங்கள் பிள்ளைகளுக்கும் இப்போது பேரும் புகழும் பெருமையும் கிடைக்கும். அவர்களுடைய திறமையாலும் அது கிடைக்கும்; உங்கள் பெருமையாலும் அவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். உதாரணத்துக்கு ஜோதிட உலகில் பெரிய சாதனை படைத்தவர் பி.எஸ்.பி அவர்கள். அவருக்கென்று தமிழகம் முழுவதும் மாணவர்களும் பேரவையும் இருக்கிறது. அவர் ஒரே மகன் விஜய்பாலா- அவருக்குப் பிறகு அவர் விட்டுச்சென்ற பணியை தொடர்ந்து நடத்தி பி.எஸ்.பி பேரவையை பல ஊர்களில் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறார். தந்தைக்குப் பிறகும் பிள்ளையின் பெருமை தொடருகிறது.

புராணத்தில் தந்தை பரமசிவனுக்குச் சமமாக புகழ்பெற்றவர் முருகன். தந்தைக்கே உபதேசித்தவர். இதிகாசத்தில் தந்தை ராமரின் புகழையும் மிஞ்சியவர்கள் லவகுசன். சரித்திரத்தில் மோதிலால் நேரு-அவர் மகன் ஜவஹர்லால் நேரு- அவர் மகள் இந்திரகாந்தி- அவர் மகன் ராஜிவ்காந்தி! இன்றைய நிலையில் அரசியல் உட்பட எல்லாத்துறையிலும் வாரிசு யோகம் வந்துவிட்டது. ஆனால் அந்தப் பெருமையும் திறமையும் தொடருகிறதா நிலைக்கிறதா என்பது சந்தேகம்தான். ஒருசிலருக்கே யோகம் அமைகிறது.

10-ல் உள்ள சனியும் ராகுவும் வெளிநாட்டு வர்த்தகத்தொடர்பை ஏற்படுத்தும். டிராவல்ஸ், டிரான்ஸ்போர்ட்ஸ், மெஷனரி, யந்திர சம்பந்தமான தொழில், லேத்துபட்டறை, மெடிக்கல் ஸ்டோர்ஸ், மெடிக்கல் ஏஜென்ஸி (பார்மெசூடிகல்ஸ்) போன்ற தொழில்களில் இருப்பவர்களுக்கும் இக்காலம் யோகம் உண்டாகும். குறிப்பாக சனிதசை, சனி புக்தி, ராகு தசை, ராகுபுக்தி நடந்தால் மேற்கண்ட தொழில் வகையில் முன்னேற்றமும் லாபமும் அடையலாம். அது சம்பந்தமான முதலீடுகளும் சுபவிரயங்களும் ஏற்படும். 12-ஆம் இடத்தை ராகுவும் சனியும் பார்க்கும் பலன் அதுதான்!

8-ஆம் இடத்தையும் ராகு பார்க்கிறார். அதனால் அபகீர்த்தி, சஞ்சலம், தன் பயம், பீடை, கவலை, அவமானம் போன்ற 8-ஆம் இடத்துக்குரிய பலன்களையெல்லாம் விரட்டியடிப்பார். ஜாதகத்தில் 6, 8-க்குடைய தசாபுக்திகள் நடந்தால் அவர்களுக்கு 8-ஆம் இடத்தைப் பார்க்கும் ராகுவால் சங்கடங்களும் சஞ்சலங்களும் சலனங்களும் ஏற்படும். அப்படியிருந்தால் ஜாதக தசாபுக்திகளுக்கேற்ற பரிகாரங்களைச் செய்துகொள்ள வேண்டும். அத்துடன் காரைக்குடி நகர சிவன்கோவிலில் உள்ள சரபருக்கு ஞாயிற்றுக்கிழமை சரபர்ஹோமம், அபிஷேகம் செய்யலாம். தொடர்புக்கு சோமு குருக்கள், தொலைபேசி: 9943819133. கும்பகோணம் அருகில் திருபுவனத்திலும் சரபேஸ்வரர் சன்னதி உண்டு. அங்கும் செய்யலாம். தேவகோட்டையில் பட்டுக்குருக்கள் நகரில் பிரத்தியங்கிரா தேவி கோவிலில் பிரத்தியங்கிரா ஹோமம் செய்யலாம். கருப்புக் குருக்கள், தொலைபேசி: 9443619550.

மேஷ கேது மகர ராசிக்கு 2-ஆம் இடத்தைப் பார்ப்பதால் சொல்வாக்கும் செல்வாக்கும் குறையாது என்றாலும், பணச்சேமிப்பும் கையிருப்பு ரொக்கமும் இருக்காது! தேவைகள் நிறைய இருக்கும். வரவுகள் வந்தாலும் அவற்றை நிறைவேற்றுமளவு உபரியாக பணவரவு இருக்காது! கடைசிக் கட்டத்தில் அக்கம் பக்கம் புரட்டித்தான் அரும்பாடுபட்டுத்தான் தேவைகளை நிறைவேற்ற வேண்டும். அதே கேது 6-ஆம் இடத்தையும் பார்ப்பதால், கடன் உண்டாக்கும். எதிரி, போட்டி, பொறாமை, வைத்தியச் செலவுகளையும் சிலருக்கு உருவாக்குவார். பலருக்கு 6-ஆம் இடத்துக் கெடுபலன்களையும் விலக்குவார். ஒரே கிரகம் இரண்டையும் செய்யும். அது அவரவர் ஊழ்வினைப் பயனைப் பொறுத்தது! தீக்குச்சி தீபம் ஏற்றவும் பயன்படும்; ஒரு குடிசையைக் கொளுத்தவும் பயன்படும்.

ஆக ராகு-கேது பெயர்ச்சி உங்களை பழைய பிரச்சினைகளில் இருந்து விடுவித்து வாழ்வையும் முன்னேற்றத்தையும். தரும், ராசிநாதன் சனி உச்சமாக இருக்கவும், குரு 5-ல் இருந்து ராசியைப் பார்க்கவும் இருப்பதால் ராகு கேதுவுக்கு பச்சைக்கொடி காட்டி ஆதரவு தருவார்கள்.

உத்திராட நட்சத்திரக்காரர்களுக்கு:

உத்திராடம் சூரியன் நட்சத்திரம், சூரியன் உங்கள் ராசிக்கு அட்டமாதிபதி என்பதால், சில காரியத் தடைகளையும் கௌரவப் பிரச்சினைகளையும் உருவாக்கினாலும், குரு ராசியைப் பார்ப்பதால் எல்லாவற்றையும் சமாளித்து விடலாம். இன்னொரு வகையில் ராசிநாதன் சனி உச்சம் பெறுவதும் ஒரு காரணம். சென்னை செங்குன்றம் அருகில் ஞாயிறு என்ற ஊரில் சிவன் கோவில் உள்ளது. அங்கு நரசிம்ம மூர்த்திக்கு கருப்பு உளுந்து வடை செய்து நைவேத்தியம் படையல் போட்டு அர்ச்சனை செய்தால் ராகு- கேது தோஷம் விலகும் என்பது ஐதீகம்.

திருவோண  நட்சத்திரக்காரர்களுக்கு:

திருவோண சந்திரன் நட்சத்திரம், மகர ராசிக்கு 7-க்குடையவர். எனவே திருமணத் தடை விலகும். பிறந்த குடும்பம் ஒன்று சேரும். வாரிசு உருவாகும். உபதொழில் அல்லது கூட்டுத்தொழில் அமையும். ராசிநாதன் சனி உச்சம் பெற்று 7-ஆம் இடத்தைப் பார்ப்பதும் நன்மையைத் தரும். மனைவி பேரில் தொழில் அல்லது சொத்து சுகங்களை ஏற்படுத்தலாம். தென் திருமுல்லைவாயில் என்ற தலத்தில் பிரம்ம தீர்த்தத்தில் நீராடி சந்திர பகவான் தன் நோயைப் போக்கிக் கொண்டதாக ஐதீகம். அங்கு சென்று வழிபடலாம்.

அவிட்ட நட்சத்திரக்காரர்களுக்கு:

அவிட்டம் செவ்வாயின் நட்சத்திரம். செவ்வாய் மகர ராசிக்கு 4, 11-க்குடையவர். மேலும் செவ்வாய் வீடான மேஷத்தில் கேது நிற்க, ராகு, சனி பார்ப்பதால் பூமி, வீடு, வாகனம், சுகம் ஆகிய 4-ஆம் இடத்துப் பலனையும்; லாபம், வெற்றி, ஜெயம் ஆகிய 11-ஆம் இடத்துப் பலனையும் ராகு- கேது பெயர்ச்சி தரும். புதுக்கோட்டை அருகில் குமரமலை என்ற ஊரில் பாலதண்டபாணி திருக்கோவில் உள்ளது. அங்கு சென்று செவ்வாய்க்கிழமை வழிபடவும்.


தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)



தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)    
  



தனுசு ராசி அன்பர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 12-ல் இருந்த ராகு இப்போது 11-ஆம்  இடத்துக்கும்; 6-ல் இருந்த கேது இப்போது 5-ஆம் இடத்துக்கும்  மாறுகிறார்கள்.

கடந்த காலத்தில் 6-ல் இருந்த கேது உங்களுக்கு நல்ல பலன்களைத் தந்தார் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். 10 என்பது தொழில், வாழ்க்கை ஸ்தானம். அதற்கு பாக்கிய ஸ்தானம். 9-ஆம் இடம்தான் ராசிக்கு 6-ஆம் இடம். அதிலிருந்த கேது தொழில்மாற்றம், இடமாற்றம், ஊர் மாற்றங்களை ஏற்படுத்தியது எனலாம். குறிப்பாக கேதுவின் நட்சத்திரமான மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பெற்றோரின் கட்டாயத்தினால் வெளிநாட்டில் செய்த நல்ல வேலையையும் நல்ல சம்பளத்தையும் விட்டுவிட்டு தாய்நாடு வந்தார்கள். இங்கு திருப்தியான வேலை அமையாமல், பல இடங்களில் முயற்சி செய்து மனதுக்குப் பிடிக்காமல், கடைசியில் ஒரு வேலையில் உட்கார வைத்தது. அதுவும் முழு நிறைவு என்று சொல்லமுடியாது. சர்க்கரை இல்லாத ஊரில் இலுப்பைப்பூ சர்க்கரை என்ற மாதிரி பரவாயில்லை.

12-ஆம் இடத்து ராகுவும் ஊர்மாற்றம், இடமாற்றம் ஏற்படச் செய்தது! வெளிநாட்டில் 50 ஆயிரம் சம்பளம் வாங்கியவரை 5000 சம்பளத்துக்கு வேலைக்கு சேரச்சொல்லி அழைத்தார்கள். போங்கடா போங்க என்று மூஞ்சியில் எச்சில் துப்பாமல் வரச்செய்தது. சிலரை ஐந்தாறு மாதம் பொழுது போகாமல் "போர்' அடிக்க வைத்தது. கடைசியில் "அய்யோ பாவம்' என்று அனுதாபம் காட்டி, சம்பளம் குறைவு என்றாலும் மதிப்புள்ள வேலையில் உட்காரவைத்தது.

இந்த ராகு- கேது பெயர்ச்சிக்குப் பிறகு மேற்கண்ட இருதரப்பின ருக்கும் முன்னேற்றகரமான திருப்பங்களைக் கொடுக்கும். தொழில்துறையில், வேலையில் உத்தியோகத்தில் மனநிறைவும் மகிழ்ச்சியும் உருவாகிவிடும்.

ஒரு சிலருடைய அனுபவத்தில் 12-ஆம் இடத்து ராகு தொட்டதெல்லாம் துயரம்- விட்டதெல்லாம் விரயம் என்ற ரீதியாக, எல்லாவற்றிலும் விரயம், செலவு, ஏமாற்றம், வீண் அலைச்சலாக இருந்தது. "சுண்டைக்காய் கால் பணம் சுமை கூலி முக்கால் பணம்' என்று வீண் விரயமும் வெட்டிச் செலவும் ஏராளம். சொந்தம், சுற்றம் என்றும் நண்பர், நட்பு என்றும் கைமாற்றுக் கடன் வாங்கிப் போனவர்கள் எல்லாம் குறிப்பிட்டபடி திருப்பித் தராத வகையிலும் விரயம், ஏமாற்றம்! அதுமட்டுமல்ல; முதலாளிகளை நம்பி சம்பளத்தை மொத்தமாகச் சேர்த்துவைத்து வாங்க ஆசைப்பட்ட சிலர், மாடாய் உழைத்து விட்டு கடைசியில் முதலாளி நஷ்டப்பட்டு கடனாளியாகி கடையை மூடிவிட்டு ஓடிப்போன வகையிலும் நஷ்டம்! மாதமாதம் வாங்கியிருந்தால் பாக்கி இல்லாமல் உழைத்த கூலி வந்து சேர்ந்திருக்கும். மொத்தமாக சேர்த்து வாங்கி ஏதாவது இடம் பொருளில் போடலாம் என்ற ஆசையிலும் மோசம் வந்துவிட்டது. இன்னும் சிலர் பிள்ளைகளை நல்ல கல்லூரி களில் படிக்கவைத்து ஆளாக்கிவிட்டால் பிற்காலத்தில் நமக்கு உதவு வார்கள் என்ற நம்பிக்கையால், தொழில்துறையில் உருட்டு புரட்டு பண்ணி செலவழித்துவிட்டு கடன்காரர்களுக்கு பயந்து ஓடி ஒளிந்தவர்களும் உண்டு.

மகள் கல்யாணம்- அடுத்து மகன் கல்யாணம் என்று கையில் புரண்ட அடுத்தவர் காசை வைத்து செலவழித்துவிட்டு, மொய் பணத்தில் எல்லோர் பாக்கியையும் திருப்பிக்கொடுத்துவிடலாம் என்று திட்டமிட்டவர்கள் சிலர்! எதிர்பார்த்தபடி மொய்வராமல் வந்த பணத்தை உப்பு, புளி, பலசரக்கு, கல்யாண மண்டபத்துக்கே கொடுத்துவிட்டு, ஆசாரியிடம் நகை பணத்துக்கு சமாதானம் சொல்லும்படி ஆகிவிட்டது. கைநிறைய சம்பாதிக்கும் இளையபிள்ளைகளும் சொன்னபடி உதவாமல் உங்களைக் கிறங்க வைத்து விட்டார்கள். வேறு சிலர் அரசு வேலைக்கு ஆசைப்பட்டு, கடன் உடன்பட்டு லட்சக்கணக்கில் அரசியல்வாதிகளிடம் லஞ்சம் கொடுத்து நாளும் பொழுதும் வேகமாக ஓடிவிட்டது. இந்த மாதம் முடிந்துவிடும்- அடுத்தமாதம் முடிந்துவிடும்- இன்னும் கொஞ்சநாள்தான்' என்று சொல்லிச் சொல்லி, இதற்கிடையில் அரசும் மாறிவிட்டது; எதிர்கட்சி ஆட்சியும் அமைந்து விட்டது. வேலையும் இல்லை பணமும் இல்லை என்று ஆகிவிட்டது. அதேபோல இரண்டு லட்ச ரூபாய் செலவு செய்து ஒரு நண்பர் தன் பையனை அரபு நாட்டுக்கு வேலைக்கு அனுப்பிவைத்தார். அங்கு போனதிலிருந்து அவன் உடல்நிலை சரியில்லாமல், ஊர் ஒத்துக்கொள்ளவில்லை; வெயில் தாங்கமுடியவில்லை என்று பத்து நாட்களில் திரும்பி வந்துவிட்டான். மீண்டும் வெளிநாடு போகமாட்டேன் என்று கூறிவிட்டான். ஏற்கெனவே கடன் கவலையோடு இந்த இரண்டு லட்சம் ரூபாயும் சேர்ந்துகொண்டது. இப்படி 12-ஆம் இடத்து ராகு ஒவ்வொருவரையும் ஒவ்வொரு வகையில் பாடாய்ப் படுத்திவிட்டது!

இப்போது ராகு வந்துள்ள 11-ஆம் இடம் மிகமிக நல்ல இடம். அதை விளக்கும் ஜோதிடப்பாடல்- "ராகு பன்னொன்று மூன்று ஆறாம் இடத்திற்சேறின் தேன் பாலும் பழமும் வற்றாத தனமும் உண்டாம்; ஆகும் காரியங்கள் உண்டாம்; வாகுமறு மணமுண்டாம்; வரத்துமேல் வரத்துண்டாம்' என்றபடி எல்லா சௌபாக்கியங்களும் உண்டாகும். அதிலும் ராகுதசையோ அல்லது ராகுபுக்தியோ நடந்தால் நிச்சயமாக மேற்படி யோகம் நடக்கும் என்பது உறுதி.

6-ல் இருந்த கேது 5-ஆம் இடத்துக்கு மாறியிருப்பதும் கெடுதியில்லை. 5-என்பதும் பூர்வபுண்ய ஸ்தானம்; 9-ஆம் இடமும் பூர்வ புண்யஸ்தானம். அதாவது 5-க்கு 5ஆம் இடம் 9-ஆம் இடம். அங்கு ஞானகாரகன் வந்திருப்பதால், முன்ஜென்மத்தில் செய்த பாவதோஷம் எல்லாம் விலகி உங்களைப் புனிதப் படுத்தும். சாபவிமோசனமும் உண்டாகும். முன்னோர்கள், தாத்தா, பாட்டனார் வகை சொத்துகளில் இருக்கும் பிரச்சினைகளும் தீர்வாகும். பிதுரார்ஜித சொத்துகள் ஏதுமில்லை யென்றால், அதற்குச் சமமான அளவு சுயமுயற்சியால் தேடிச் சேர்க்கலாம். ஆன்மிகம், ஜோதிடம், வைத்தியம், தெய்வீகம் போன்றவற்றில் ஈடுபாடும் பெருமையும் உண்டாகும். சிலர் அருள் நிலைபெற்று அருள்வாக்குச் சொல்லலாம்.

செல்வாக்குள்ள பிரமுகர்களின் தொடர்பு கிடைக்கும்; பாராட்டும் கிடைக்கும். வீடுகட்டுவது, ஆசிரமம் அமைப்பது, அறச்சாலை நிறுவுதல், டிரஸ்ட் ஏற்படுத்துவது, ஆலயத் திருப்பணி செய்வது, குல தெய்வத்துக்கு கோவில் எழுப்புவது போன்ற புண்ணிய காரியங்களில் இறங்கி பெருமை சேர்க்கலாம். உங்களின் நீண்டகாலக் கனவுகளும் திட்டங்களும் லட்சியங்களும் நிறைவேறும்.

ருதுவாகி பதினெட்டு ஆண்டுகள் ஆகியும் திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்களுக்கும், 36 வயதுக்கு மேல் ஆகியும் திருமணம் ஆகாத ஆண்களுக்கும் இந்த ராகு-கேதுப்பெயர்ச்சி திருமணத் தடைகளையும் தோஷங்களையும் போக்கி மணைவாழ்க்கையைத் தரும். அதேபோல் 18 வயதாகியும் ருதுவாகாத பெண்களுக்கும் இந்த ராகு- கேது பெயர்ச்சி பெரிய மனுஷியாகும் யோகத்தைச் செய்துவிடும். இவற்றுக்காக சிறப்பு பரிகாரம் எதுவும் தேவையில்லை. ஏலச்சீட்டு, மாதக் குலுக்கலில் எடுக்காமலேயே இருந்துவிட்டால்- கடைசி சீட்டு வட்டியும் முதலுமாக கட்டிய பணத்தைவிட அதிகமாகவே கிடைப்பதுபோல ராகு- கேது பெயர்ச்சி உங்களுக்கு மண வாழ்வை மகிழ்ச்சி வாழ்க்கையாக மலரச் செய்யும் அதுமட்டுமல்ல; திருமணமாகி 18 ஆண்டுகளாக புத்திரபாக்கியம் இல்லாமல் ஏங்கிக்கொண்டிருந்தவர்களுக்கும் இந்த ராகு-கேது பெயர்ச்சி வாரிசு யோகத்தை வழங்கும். அதாவது மேஷம்- ராசி மண்டலத்தில் முதலாவது ராசி. அதில் கேது 18 ஆண்டுகளுக்குப் பிறகு வந்திருக்கிறார். ராகு- கேது 12 ராசிகளை ஒருமுறை சுற்றி வருவதற்கு 18 வருடங்கள் பிடிக்கும். அதே மாதிரி சனி ஒரு சுற்று சுற்றி வருவதற்கு 30 வருடம் ஆகும். குரு ராசிமண்டலத்தை  சுற்றி வருவதற்கு 12 வருடம் ஆகும். இப்படி 12 வருடம், 18 வருடம், 30 வருடம் என்று மனித வாழ்க்கையில் சில மாற்றங்களையும் திருப்பங்களையும் ஏற்படுத்தும். அதே மாதிரி மேஷத்தில் ராகு வரும்போதும் அதிலிருந்து 18 வருடம் கணக்கிடலாம்.

ராகு 11-ல் (துலா ராசியில்) நின்று 3-ஆம் பார்வையாக சிம்ம ராசியை தனுசு ராசிக்கு 9-ஆம் இடத்தையும்; 7-ஆம் பார்வையாக தனுசு ராசிக்கு 5-ஆம் இடம் மேஷ ராசியையும்; 11-ஆம் பார்வையாக தனுசு ராசியையும் பார்க்கிறார்.

கேது 5-ல் (மேஷராசியில்) நின்று 3-ஆம் பார்வையாக தனுசு ராசிக்கு 3-ஆம் இடத்தையும்; 7-ஆம் பார்வையாக தனுசு ராசிக்கு 11-ஆம் இடத்தை துலாராசியையும், 11-ஆம் பார்வையாக தனுசு ராசிக்கு 7-ஆம் இடத்தை மிதுனத்தையும் பார்க்கிறார்.

இதன் பலனாக சகோதர சகாயம், நண்பர்களின் உதவி, நட்பின் பெருமை, அருமை எல்லாம் இனிமையாக இருக்கும். ஏற்கெனவே உடன் பிறப்புக்கள் வகையில் பிரச்சினைகளும் கசமுசாக்களும்; ஒட்டுதல் உறவு இல்லாமல் வீதியில் பார்த்தால்கூட யாரோ போகிறார்கள் என்று பார்த்தும் பார்க்காமலே போனவர்களும், இந்த ராகு-கேது பெயர்ச்சிக்குப் பிறகு சகோதர பாசத்தோடும் அன்போடும் இணைந்து ஒருவருக்கொருவர் உறவோடு உபசரித்து உதவிகள் புரியலாம். அதற்கு ஏற்ற மாதிரி குடும்பத்தில் ஏதாவது ஒரு சுபமங்கள நிகழ்ச்சி நடக்கும். அதைவைத்து பிரிந்தவர்கள் இணைவார்கள்.

திருமணத்தடை விலகும். நல்ல வாழ்க்கைத் துணை அமையும். வாரிசு யோகமும் உண்டாகும். சிலர் மனைவிபேரிலும் அல்லது மனைவி வகை உறவினர்களோடும் சேர்ந்து கூட்டுத்தொழில் ஆரம்பிக்கலாம். ராகு- கேது பெயர்ச்சிக்கு முன்னதாக இப்படிப்பட்ட முயற்சிகளில் இறங்கியவர்கள், "அவசரப்பட்டு தொழில்துறையில் முதலீடு செய்துவிட்டோமோ-அது சரி வருமா- தொடர்ந்து நடத்தலாமா அல்லது சட்டி சுட்டதடா கைவிட்டதடா என்று இதோடு தப்பித்துக்கொள்ளலாமா' என்றெல்லாம் குழப்பமடைவார்கள். அந்தக் குழப்பத்தையெல்லாம் இந்த ராகு-கேது பெயர்ச்சி தீர்த்து வைத்து இனிமேல் நம்பிக்கையும் தைரியமும் உருவாக்கும். தொடர்ந்து தொழிலை நடத்த ஆர்வம் உண்டாகும். அதே வேகத்தோடும் விறுவிறுப்பாகவும் செயல்பட்டு இனிமேல் நிறைய சம்பாதிக்கலாம். அதைக்கொண்டு பழைய கடன்களையெல்லாம் 2014 -டிசம்பருக்குள் சனி உச்சமாக 11-ல் இருக்கும் காலத்திற்குள் அதிகபட்சமாக அடைத்து விடலாம். 11-ஆம் இடம் லாபஸ்தானம், வெற்றி ஸ்தானம். வழக்கு, வில்லங்கம் விவகாரத்தில் உள்ளவர்களுக்கும் இந்தப் பெயர்ச்சிக்கு வெற்றியும் அனுகூலமான தீர்ப்பும் எதிர்பார்க்கலாம். ஜாதக தசாபுக்தி யோகமாக இருந்தால் சமரசமாகவும் சமாதானமாகவும் உடன்பாடு ஏற்பட்டு செட்டில் ஆகிவிடலாம்.

தனுசு ராசிநாதன் குரு 2013- மே மாதம் வரை ராசிக்கு 6-ல் இருப்பார். அதுவரை கடன் ஆதிக்கத்தில் இருந்து விடுபட வழியில்லை. என்றாலும் உங்களுடைய கௌரவம், மதிப்பு, மரியாதைக்கு எந்தவிதமான குந்தகமும் வராது. குரு 7-ல் மாறி ராசியையும் பார்ப்பார். ராகுவையும் சனியையும் பார்ப்பார். அப்போது அசலும் குறையும்; வட்டியும் அடைபடும்.

10-ஆம் இடத்தில் சனியும் செவ்வாயும் இருந்த சமயம் சிலருக்கு உத்தியோகத்தில் மேலதிகாரிகள் வகையில் திருப்தியில்லாத பல அனுபவங்கள் ஏற்பட்டு டென்ஷன் இருந்தது. செவ்வாயும் சனியும் விலகி விட்டார்கள். இப்போது ராகு- கேது பெயர்ச்சியும் ஆகிவிட்டது. ஆகவே வேலையில் இருந்த சஞ்சலம், சங்கடம் எல்லாம் இனி இருக்காது. மேலதிகாரிகளிடம் நற்பெயர் உண்டாகிவிடும். சரபேஸ்வரர் மந்திரத்தை தினசரி ஜபம் செய்தால் உங்களைப் பிடிக்காத மேலதிகாரிகளின் அன்பைப் பெறலாம். அல்லது உங்கள் பாதையில் குறுக்கிடாமல் அவர்கள் மாறிவிடலாம்.

சரபர் மந்திரம்

"ஓம் கேம் காம் கம் பட்
ப்ராண க்ரஹாஸி ஹும் பட் ஸர்வ சத்ரு
ஸம்ஹரணாய ஸரப சாலுவாய
பக்ஷிராஜாய ஹும் பட் நமஹா:

சரபர் காயத்ரி
"ஓம் ஸ்ரீ சாலுவேசாய
வித்மஹ பக்ஷிராஜாய தீமஹி
தந்நோ சரப ப்ரசோதயாத்.'

5, 9-ஆம் இடங்களுக்கு ராகு-கேது சம்பந்தம் இருப்பதால் பிள்ளைகளின் திருமணம், சடங்கு, காதணிவிழா போன்ற சுபகாரியங்களை முன்னிட்டு இதுவரை நிலவிய பங்காளிப் பகை, மைத்துனர் வருத்தம், சம்பந்திகள் சண்டை எல்லாம் விலகிவிடும். ஒன்று சேரும் அமைப்பும் உருவாகிவிடும். உங்கள் தரப்பிலும் எதிர் தரப்பிலும் ஈகோ உணர்வு பெரிதாக இருந்தாலும், "மறப்போம் மன்னிப்போம்' என்று பெருந்தன்மையோடு நடந்துகொண்டால் எல்லாம் நல்லபடி நடந்துவிடும். "குற்றம் பார்க்கின் சுற்றமில்லை' என்ற கருத்துப்படி நடக்கலாம். பங்காளிச் சண்டையால் பல வருடங்களாக பூட்டிக் கிடந்த குலதெய்வக் கோவிலும் திறக்கப்பட்டு, பூஜை விழாக்களை நடத்தலாம். பிரார்த்தனைகளையும் நிறைவேற்றலாம்.

மொத்தத்தில் இந்த ராகு-கேது பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு யோகமான பெயர்ச்சியாகவும், லாபகரமான பெயர்ச்சியாகவும் அமையும்.

மூல நட்சத்திரக்காரர்களுக்கு:

மூல நட்சத்திரம் கேதுவின் நட்சத்திரம். கேது ராசிக்கு 5-ல் இருந்து நல்ல இடங்களைப் பார்ப்பதால், உங்கள் கனவுத் திட்டங்கள் யாவும் நனவாகும். கலகலப்பான நல்ல சேதிகளைக் கேள்விப்படுவீர்கள். சுபகாரியப் பேச்சுக்கள் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தொழில், வாழ்க்கையில் நிலவிய தொய்வுகள் எல்லாம் நீங்கிவிடும். புத்துணர்ச்சியோடு செயல்படலாம். பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகரை வழிபடவேண்டும். மயிலாடுதுறை அருகில் சித்தமல்லியில் கல்யாண விநாயகர் கோவில் இருக்கிறது. அருகில் சுப்ரமணிய சாஸ்திரி ஜீவ சமாதியும் உண்டு. அங்கும்போய் வழிபடலாம்.

பூராட  நட்சத்திரக்காரர்களுக்கு:

பூராடம் சுக்கிரனின் நட்சத்திரம். சுக்கிரனின் வீடான துலா ராசியில்தான் ராகுவும் சனியும் இருக்கிறார்கள். சுக்கிரன் வீடான ரிஷப ராசியில்தான் குரு இருக்கிறார். எனவே, உங்களுக்கு ராகு- கேது பெயர்ச்சி அற்புதப் பலன்களைத் தரும். குரு ரிஷபத்தில் இருக்கும் வரை சில காரியங்களில் தாமதம், சுணக்கம் ஏற்படலாம். என்றாலும் தோல்வியில்லை. அதாவது வெயிட்டிங் லிஸ்டில் இருப்பதற்குச் சமம். குரு மாறியதும் கன்பர்மேஷன் ஆகிவிடும். குருபார்வை ராசி, ராகு, சனி மூன்றுக்கும கிடைக்கும் என்பது அணுகூலம் ஆகும்! கும்பகோணம் ஆடுதுறை அருகில் கஞ்சனூரும், ராஜபாளையம் வாசுதேவநல்லூர் அருகில் தாருகாபுரமும் சுக்கிரனுடைய ஸ்தலம் ஆகும். இங்கு சென்று வழிபடலாம். தொண்டி செல்லும் சாலையில் திருவாடானை அருகில் திருவொற்றியூர் என்ற தலத்தில் பாகம்பிரியாள், வன்மீகநாத சுவாமி கோவில் உண்டு. நாகதோஷ நிவர்த்தி ஸ்தலம். புற்றுநோய்க்கும் பரிகாரஸ்தலம் ஆகும். அங்கு சென்றும் வழிபடலாம்.

உத்திராட நட்சத்திரக்காரர்களுக்கு:

உத்திராடம் சூரியன் நட்சத்திரம், தனுசு ராசிக்கு சூரியன் பாக்கியாதிபதி. அவர் வீட்டை ராகு பார்க்கிறார். சூரியனின் உச்ச ராசியான மேஷத்தில் கேது இருக்கிறார். எனவே ராகு- கேது பெயர்ச்சி உங்களுக்கு அனுகூலமாகவும் நன்மையாகவும் அமையும். உங்களைக் கொண்டு உங்களைச் சார்ந்தவர்கள் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வார்கள். உறவினர்கள் வகையிலும் சம்பந்தக்காரர்கள் வகையிலும் உங்களுக்கு முக்கியத்துவம் உண்டாகும். சென்னை செங் குன்றம் அருகில் ஞாயிறு கோவில் உள்ளது. இங்கு ஞாயிற்றுக்கிழமை கருப்பு உளுந்தில் வடை தயாரித்து நரசிம்மமூர்த்திக்குப் படையில் செய்து வழிபட்டால் நாகதோஷம் விலகுவதாக ஐதீகம்.

#கர்மவினையைவெல்ல.....தொடர்சி..3

# கர்மவினையைவெல்ல .....தொடர்சி..3 # காலபுருஷதத்துவமும்  கர்மாவும் : கால புருஷ தத்துவப்படி 12 இராசிகளும் தர்ம, கர்ம, காம மற்றும் மோட்ச ...