Thursday, September 6, 2012

அங்கீகாரத்தை அவன் தருவான்!



வாழ்க்கையில் எவ்வளவு தான் கஷ்டப்பட்டாலும், என்ன தான் எழுதினாலும், பேசினாலும், வெற்றிகளைக் குவித்தாலும், அதற்கான அங்கீகாரம் மட்டும் என்னவோ சிலருக்குக் கிடைப்பதில்லை. இதுபற்றி அவர்கள் குறைபட்டுக் கொள்கின்றனர். ஆனால், எவனொருவன் நிஜமான உழைப்பாளியோ, அவனை ஆண்டவன் அங்கீகரித்தே தீருவான். இதோ... மன்னனாக வாழ்ந்தும், தன் வெற்றிக்கு அங்கீகாரம் அளிக்காத சமூகத்தை கண்டு வெறுத்த ஒருவருக்கு, ஆண்டவன் அங்கீகாரம் அளித்த கதையை கேளுங்கள்...
திருக்களந்தை என்னும் பகுதி, சோழ நாட்டில் ஒரு சிற்றரசாக இருந்தது. இந்த நகரை ஆட்சி செய்தார் கூற்றுவர்; கூற்றுவன் என்றால் எமன். யாராவது எமனுடைய பெயரை வைத்துக் கொள்வரா? உண்மையில் இவரது பெயர் இதுவல்ல. நிஜப்பெயர் யாருக்கும் தெரியவும் இல்லை. இந்த மன்னர், எதிரிகளுக்கு எமன். போர் என்று வந்து விட்டால், வெற்றி இவருக்கே! எனவே, கூற்றுவர் என்ற பெயர் இவருக்கு நிலைத்து விட்டது. சிற்றரசராக இருப்பவர், பேரரசர்களை ஜெயிக்க முடியாதா என்ன? தன் வீரத்தை வெளிப்படுத்த, சேர, சோழ, பாண்டிய நாடுகள் மீதும் படையெடுத்தார். சாதிக்கும் திறனுள்ள கூற்றுவர், மூன்று பேரரசர்களையும் தோல்வியடையச் செய்து, முப்பெரும் தேசத்திற்கும் அதிபதியானார்.
மன்னராக இருந்தாலும், வெற்றிகளைக் குவித்தாலும், சிவபக்தரான இவர், தான் இருக்கும் இடங்களில் உள்ள சிவாலயங்களுக்கு செல்லத் தவறியதில்லை. நமசிவாய என்னும் திருமந்திரம், அவரது நாவில் ஒலித்தபடியே இருக்கும். தன் வெற்றிக்கு காரணம், சிவனே என்றும், தான் பெறும் வெற்றி, சிவனுக்கே அர்ப்பணம் என்றும் சொல்வார்.
ஆனாலும், தன் தலையில் சோழ மன்னர்களுக்குரியதைப் போல் கிரீடம் சூட்ட வேண்டும் என்ற ஆசை அவர் மனதில் இருந்தது. அக்காலத்தில், சோழ மன்னர்கள், சிதம்பரம், திருச்சி உறையூர், காவிரிப்பூம்பட்டினம், திருவாரூர் ஆகிய நகரங்களிலேயே தங்களுக்கு முடிசூட்டிக் கொள்வர். தில்லைவாழ் அந்தணர்கள், அவர்களுக்கு முடிசூட்டி வைப்பது வழக்கம். எனவே, சிதம்பரத்துக்கே போய் முடிசூட்டிக் கொள்ள விரும்பினார் கூற்றுவர்.
அங்கு சென்று நடராஜப் பெருமானை வணங்கினார். சோழர்களுக்குரிய மணிமகுடத்தை தனக்கு சூட்டும்படி, அந்தணர்களிடம் கேட்டுக் கொண்டார். ஆனால், அந்தணர்களோ மறுத்து விட்டனர். காலம் காலமாக நடக்கும் ஒரு நடைமுறையை, தங்களால் மாற்ற முடியாது என்று சொல்லி விட்டனர். அதே நேரம், மூன்று தேச ராஜாக்களையும் வென்ற கூற்றுவரை பகைத்து, சிதம்பரத்தில் வாழ முடியாது என்பதும் அவர்களுக்கு தெரியும் என்பதால், சேர நாட்டுக்குச் செல்ல முடிவெடுத்தனர். சோழர் மணிமுடியை, தங்கள் வழியில் வந்த ஒரு குடும்பத்தினரிடம் ஒப்படைத்து விட்டனர்.
அந்தணர்களை, அக்கால அரசர்கள் எதற்காகவும் கட்டாயப்படுத்துவதில்லை. அது பாவம் எனக் கருதினர். இறைவனையே சரணடைவது என முடிவு செய்தார் கூற்றுவர். நடராஜ பெருமானிடம் சென்று, "இறைவா... இவ்வளவு வெற்றிகளைக் குவித்தும், ஒரு கிரீடம் அணியும் தகுதியை எனக்கு தர மறுத்து விட்டாயே... பரவாயில்லை. உ<ன் திருவடியை என் தலையில் வை... அதை விட உயர்ந்த கிரீடம் உலகில் ஏது?' என்று மன்றாடினார்.
அன்றிரவில், அவர் உறங்கிக் கொண்டிருந்த போது, தில்லையம்பல நடராஜர் அவரது கனவில் வந்து, தூக்கிய தன் திருவடியை, அவரது சிரசில் வைத்தார். திடுக்கிட்டு விழித்தார் கூற்றுவர். இறைவனே, தன் சிரசில் திருப்பாதம் வைத்தபின், வேறென்ன வேண்டும் என ஆனந்தமடைந்தார்; பரமனை பணிந்து வணங்கினார். அந்தணர்கள் செய்யாததை தில்லையம்பலத்தானே செய்த மகிழ்ச்சி அவரை ஆட்கொண்டது. அந்த மகிழ்ச்சியுடன் இன்னும் பல தேசங்களை வென்றார். கோவில் திருப்பணிகளுக்கு அள்ளிக் கொடுத்தார். பல காலம் நல்லாட்சி நடத்தி, அழியாப் புகழுடன் இறைவனுடன் கலந்தார்.
ஆண்டவனின் அங்கீகாரம் பெற்ற இவருக்கு, ஆடி திருவாதிரை நட்சத்திரத்தில் குருபூஜை நடத்தப்படும். நாயன்மார் சன்னிதியில் இவரைத் தரிசித்து, உங்கள் செயல்களுக்கும் அங்கீகாரம் வேண்டி பிரார்த்தியுங்கள்.

No comments:

Post a Comment

#கர்மவினையைவெல்ல.....தொடர்சி..3

# கர்மவினையைவெல்ல .....தொடர்சி..3 # காலபுருஷதத்துவமும்  கர்மாவும் : கால புருஷ தத்துவப்படி 12 இராசிகளும் தர்ம, கர்ம, காம மற்றும் மோட்ச ...