உலகத்திலேயே மனிதன் அதிகமாக நேசிக்கக் கூடியது அமைதியும், நிம்மதியுமே.
பணம்
வரலாம்; போகலாம். பல தாரங்களை மணந்து கொள்ளலாம்; வீடு வாங்கலாம்;
விற்கலாம்; நிலம் வாங்கலாம்; சொத்தைப் பெருக்கலாம்; எல்லாம் இருந்தும் கூட
நிம்மதி இல்லை என்றால் அவன் வாழ்ந்து என்ன பயன்?
சேர்க்கின்ற சொத்து நிம்மதிக்காக.
கட்டுகிற மனைவி நிம்மதிக்காகவே.
தேடுகின்ற வீடும், நிலமும் நிம்மதிக்காக.
எப்போது அவன் நிம்மதியை நாடுகிறானோ, அப்போது அவனுக்கு அவஸ்தை வந்து சேருகிறது.
ஆரம்பத்தில் மனிதன் விரும்பியோ விரும்பாமலோ பல சிக்கல்களைத் தானே உண்டாக்கிக் கொள்கிறான்.
தானே கிணறு வெட்டுகிறான்; அதில் தானே விழுகிறான்.
தானே தொழில் தொடங்குகிறான்; தவியாய்த் தவிக்கிறான்.
தானே காதலிக்கிறான்; அதற்காக உருகுகிறான்.
தானே ஒரு பெண்ணை விரும்பிக் கல்யாணம் செய்து கொள்கிறான்; பிறகு இது பெண்ணா?, பேயா? என்று துடியாய்த் துடிக்கிறான்.
எந்தக் கோணத்தில் நின்று பார்த்தாலும் மனித வாழ்க்கை துன்பகரமாகவே காட்சியளிக்கிறது.
ஆகவேதான், மனிதன் ஏதாவது ஒரு புகலிடத்தை நாடுகிறான்.
தனக்கு அடைக்கலம் கொடுக்கக் கூடியவர்கள் யாராவது இருக்கிறார்களா? என்று தேடுகிறான்.
மனிதர்களோ அவதூறு பேசுகிறார்கள்; கேலி செய்கிறார்கள்.
ஆகவே, அவன் தெய்வத்தைச் சரணடைகிறான்.
அந்தத் தெய்வம் அவன் குறையைக் கேட் கிறதோ இல்லையோ, காட்சியிலேயே நிம்மதியைத் தருகிறது.
இந்தத் தெய்வ பக்தியில் மிக முக்கியமானது அணுகும் முறை.
எல்லோரையும் போல கோவிலுக்குப் போனோம்; ஒரு தேங்காய் உடைத்தோம்; இரண்டு பழங்களை வாங்கிச் சென்றோம் என்பதில் லாபமில்லை.
கோவிலில் பாடப்படும் `கோரஸ்’ அல்லது கோஷ்டி கானத்தில் பெரும் பயனடைவதில்லை.
ஏழை ஒருவன் வள்ளல் வீட்டுப் படிக்கட்டுகளில் நம்பிக்கையோடு ஏறுவது போல், இறைவனை அணுக வேண்டும்.
இறைவனை ஒரு உன்னதமான இடத்தில் வைத்து, அடிமையைப் போல் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
அவனைத் தோழனாகவே பாவிக்கலாம்.
தனியறையில் உட்கார்ந்து கொண்டு, ஒரு தெய்வப் பிரதிமையின் முன்னால் குறைகளைச் சொல்லி அழுவதில் பயனிருக்கிறது.
எங்கள்
கிராமங்களில் ஒரு காரியம் நடக்குமா நடக்காதா என்பதற்குப் பூக்கட்டி
வைத்துப் பார்ப்பார்கள். வெற்றிலைப் பாக்கு வைத்துக் கேட்பார்கள். சாமி
அனுமதித்தால் மட்டுமே அந்தக் காரியத்தைச் செய்வார்கள்.
எல்லாவற்றிற்குமே தெய்வத்தை நம்பி, அதன் மூலம் அவர்கள் நிம்மதி அடைந்திருக்கிறார்கள்.
`திருவுளம்’
கேட்பது என்பது கிராமங்களில் இருக்கும் ஒருமுறை. `நான் மேற்கொண்ட காரியம்
நடக்கும் என்றால் பல்லி சொல்ல வேண்டும்’ என்று வேண்டிக் கொள்வார்கள்.
கோவிலின்
ஏதாவது ஒரு பகுதியில் பல்லி சொன்னால், இறைவனின் திருவுளம் இரங்கி விட்டதென
மகிழ்வார்கள். அது சொல்லவில்லை என்றால், அந்தக் காரியத்தில்
ஈடுபடமாட்டார்கள்.
மனிதனின் மிகவும் குறைந்த பட்சத் தேவை நிம்மதி. அதைத் தெய்வத்திடம் இருந்து பெற்றுக் கொள்பவனுக்குப் பெயர் தான் இந்து.
தெய்வத்தை அணுகுவதில் திறமையுள்ளவர்கள் தங்கள் காரியங்களைக் கண் முன்னாலேயே சாதித்துக் கொண்டிருக்கிறார் கள்.
`முருகா முருகா’ என்று எல்லோரும்தான் கூவுகிறோம்; சிலருக்கு மட்டும் தொட்டதெல்லாம் பலிக் கிறதே, ஏன்?
அவர்கள் தெய்வத்தை அணுகத் தெரிந்து கொண்டு விட்டார்கள் என்பதே, அதன் பொருள்.
கொல்கத்தா காளி கோவிலைப் பற்றி ஒரு கதை சொல்வார்கள்.
ஒரு
ஏழை உழைப்பாளி. அந்தக் கோவில் வாசலில் போய்ப் படுத்துக் கொள்வானாம்.
காலையில் கண் விழிக்கும் போது சந்நிதானத்தில் தான் கண் விழிப்பானாம். காளி
தேவியிடம் வேண்டிக் கொண்டுதான் தொழிலுக்குப் புறப்படுவானாம். எப்படியும்
அன்றைக்குப் பத்து ரூபாய் சம்பாதித்து விடுவானாம். என்றைக்கு அவன் ஞாபக
மறதியாகச் சந்நிதானத்தைப் பார்த்துக் கண் விழிக்காமல் தெருவைப் பார்த்து
விழிக்கிறானோ, அன்றைக்கு அவன் வாழ்க்கையில் சிரமம் ஏற்படுமாம்.
இதை
எப்படிச் சொல்கிறார்கள் என்றால், `இன்றைக்கு இவனுக்கு லாபமில்லாத நாள்
என்று தெரிந்து, ஈஸ்வரியே அவனை வேறு பக்கம் விழிக்க வைக்கிறாள்’
என்கிறார்கள்.
இதுதான் உண்மை என்று நான் நம்புகிறேன். எனக்கும் இதில் ஒரு அனுபவம் உண்டு.
நான்கு
ஆண்டுகளுக்கு முன் நான் என் கவிதா ஹோட்டல், தேவர் திருமண மண்டபத்தில்
உட்கார்ந்திருந்த போது ஒரு கேரளத்து நண்பர் என்னைப் பார்க்க வந்தார்.
வந்தவர் ஒரு சிறிய குருவாயூரப்பன் புகைப்படத்தைக் கொடுத்து விட்டுப்
போனார்.
அதை நான் என் சட்டைப் பையிலே வைத்திருந்தேன்.
காலையில் சட்டை மாற்றும்போது எதை வைக்க மறந்தாலும், அந்தப் படத்தை வைக்க மறக்கமாட்டேன்.
அது `பெதடின்’ பழக்கத்தை விட்டு விட்ட நேரம். உடம்பிலே சில எதிரொலிகள் ஏற்பட்டு அடங்கிவிட்டன.
குருவாயூரப்பன் படம் வந்ததில் இருந்து உடம்பு மிக நன்றாக இருந்தது.
காலை குளித்துப் பலகாரம் சாப்பிட்டு விட்டு `இன்சுலின்’ போட்டுக் கொண்டால், மதியம் வரையிலே சுறுசுறுப்பாக இருக்கும்.
மதியம் நல்ல கீரையோடு சாப்பாடு சாப்பிட்டு விட்டுப் படுத்தால், மாத்திரை இல்லாமலே தூக்கம் வரும்.
சாயங்காலம் எழுந்து குளித்தால், உலகமே புதிதாகத் தோன்றும்.
உடனே
மண்டபத்துக்கு வந்து மாலைப் பத்திரிகைகள் அனைத்தும் படித்து முடிப்பேன்.
ஏதாவது எழுதுவேன். உடம்பு அவ்வளவு நன்றாக இருந்தது.
அப்போது எனக்கு மலேசியாவில் இருந்து அழைப்பு வந்தது. `உடம்பு தான் நன்றாக இருக்கிறதே, போய் வரலாம்’ என்று முடிவு கட்டினேன்.
புறப்படுவதற்கு
முதல் நாள் இரவு நான் நீர் சாப்பிடும் கண்ணாடித் தம்பளர் விழுந்து
உடைந்தது. என்னுடைய கைக்கடிகாரம் கழன்று விழுந்தது. `என்ன துர்ச்சகுணங்களோ’
என்று எண்ணியபடி விட்டு விட்டேன்.
மறுநாள் காலை பத்தரை மணிக்கு விமானம்.
காலை இட்லி கொஞ்சம் அதிகமாகவே சாப்பிட்டு விட்டேன்.
`அதிகமாகச்
சாப்பிட்டு விட்டோம்’ என்று நானே எண்ணிக் கொண்டு, `இன்சுலின்’ மருந்தை
வழக்கத்துக்கு விரோதமாக அதிகம் போட்டுக் கொண்டு விட்டேன்.
சற்று மயக்கமாக இருந்தது.
விமான
தளத்துக்குப் போகும் போது பையைத் தடவிப் பார்த்தேன். குருவாயூரப்பன்
படத்தைக் காணவில்லை. பழைய சட்டையில் தேடிப் பார்க்கச் சொன்னேன். அதிலும்
இல்லை.
விமான நிலையத்துக்கு வந்த போது ஆட்களையே அடையாளம் தெரியாத நிலை ஏற்பட்டு விட்டது.
என் குழந்தைகள், பேரன், பேத்திகளெல்லாம் விமான நிலையத்துக்கு வந்திருந்தார்கள்.
யாரோடு பேசுகிறோம் என்ன பேசுகிறோம் என்பதே எனக்குப் புரியவில்லை.
என்னோடு கனரா பாங்க் நண்பர்களும் விமானத்தில் வந்தார்கள்.
விமானத்தில் இனிப்பு வாங்கிச் சாப்பிட்டேன்; குடித்துப் பார்த்தேன்; மயக்கம் மயக்கம் தான்.
இது நடந்தது 1975 செப்டம்பர் 28ஆம் தேதி.
மலேசியாவில் நான் போய்க் கோலாலம்பூரில் இறங்கி அங்கிருந்து 250 மைல் தூரத்திலுள்ள சித்தியவான் என்ற ஊருக்குப் போய்விட்டேன்.
அந்தச் சித்தியவான் நகரில் எனக்கு ஒரு அற்புதமான நண்பர் உண்டு. அவர் சிவகங்கைப் பகுதியைச் சேர்ந்தவர். கிருஷ்ணன் என்று பெயர்.
கோலாலம்பூர் கூட்டங்களுக்குத் தப்பி, ஓய்வுக்காக நான் அங்கே சென்றேன்.
அங்கிருந்து
மூன்றாவது மைலில் ஒரு கடற்கரை உண்டு. அதன் கரையில் ஒரு சிற்றூர் உண்டு.
அதன் பெயர் `லுமுட்’. அங்கே ஒரு தென்னந்தோப்பில் அழகான ஒரு காட்டேஜில் நான்
தங்கி இருந்தேன்.
சரியாக மூன்றாவது நாள் அங்கிருந்து நான்
சித்தியவான் நகருக்கு வந்தபோது, தமிழர்களெல்லாம் சென்னை வானொலியைச்
சிரமப்பட்டுத் திருப்பிக் கொண்டிருந்தார்கள்.
நான் கிருஷ்ணன் வீட்டுப் படியேறிப் போகும் சமயம், அங்கிருந்த கிருஷ்ணனின் குமாரர், `ஐயா, காமராஜ் இறந்து விட்டார்’ என்றார்.
மறுநாள்
மதியம், சென்னையில் இருந்து எனக்கு டிரங்க் கால் வந்தது, `அதே அக்டோபர்
இரண்டாம் தேதியில் என் உடன் பிறந்த சகோதரியும் இறந்து விட்டதாக!’
நான்
சென்னை வரமுடியவில்லை. மலேசியப் பயணத்தை ஒரு நாள்கூட ரசிக்க முடியவில்லை.
ஒரே ரத்தக் கொதிப்பு; சர்க்கரைக் குறைவு; மயக்கம்; மயக்கம்; மயக்கம்!
இந்த நிலையிலும், `நான் இந்தோனேஷியாவுக்கு வந்தேயாக வேண்டும்’ என்று வற்புறுத்தினார்கள்.
பினாங்கில் புறப்படும் விமானம் இருபது நிமிஷத்தில் சுமத்திரா தீவுக்குப் போய் விடுகிறது.
நான்
அங்கிருந்து கோலாலம்பூர் திரும்பியதும், சென்னையில் இருந்து டிரங்க்கால்
வந்தது. என் சகோதரரை ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பதாக.
உடனே நான்
தங்கியிருந்த பசிபிக் ஹோட்டல் டிராவல் ஏஜெண்டிடம் டிக்கெட்டைக் கொடுத்து
ஏர் இந்தியாவில் உறுதி செய்யச் சொன்னேன். அவர் உறுதி செய்து விட்டார்.
ஆனால், என்னிடம் டிக்கெட்டைக் கொடுக்கவில்லை.
மறுநாள் ஞாயிற்றுக் கிழமை. காலை எட்டரை மணிக்கு விமானம். டிராவல் ஏஜெண்ட் வரவில்லை.
என்னை
அழைத்துப் போயிருந்த துணை பப்ளிக் பிராஸிக்யூட்டர் நண்பர்
சம்பந்தமூர்த்தி, விமான நிலையத்திலேயே டாலர் கட்டி எனக்கு டிக்கெட்
வாங்கிக் கொடுத்தார்.
எத்தனை துயரங்கள்! எத்தனை சோதனைகள்!
`இவற்றுக்கெல்லாம் நாம் ஏன் காரணமாக இருக்க வேண்டும்?’ என்று தானே, குருவாயூரப்பன் காணாமல் போனான்!
விதி தவறாக இருக்குமானால், தெய்வம் கண்ணை மூடிக் கொள்ளும். அதற்காக அழுது பயனில்லை.
தெய்வத்தை அணுகும் முறையில் இருந்தே பல விஷயங்களை நாம் முன் கூட்டித் தெரிந்து கொள்ளலாம்.
தெய்வ நம்பிக்கை உள்ளவனுக்கு சகுனத் தடை ஏற்பட்டால், அதைத் தெய்வத்தின் கட்டளை என்றும், நமது கர்மா என்றும் கொள்ள
வேண்டும்.தடைதான் ஏற்படுமே தவிர, பெரும் கொடுமைகள் நிகழமாட்டா.
மலேஷியாவில் இருந்து திரும்பிய பிறகும் என் உடல்நிலை சரியாக இல்லை. உடம்பு இளைத்துக் கொண்டே வந்தது.
முப்பது பவுண்டு இளைத்து விட்டேன்.
இப்போது பார்க்கும் டாக்டர்கள் எல்லாம், இதுதான் சரியான எடை என்கிறார்கள்.
இதுவும் நான் விரும்பி நடந்ததல்ல.
பகவான் சில காலங்களில் சில காரியம் நடக்கும் என்று நிர்ணயிக்கிறான்; நம்முடைய பிரக்ஞை இல்லாமலே அவை நடந்து விடுகின்றன.
தெய்வத்தை அணுகினால் பலன்கிடைக்கும் என்பதற்காகக் கண்ட கோவிலுக்கெல்லாம் ஓடிக் கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை.
ஒரு தெய்வத்தை உளமாரப் பற்ற வேண்டும். பெரும்பாலும் சக்தி வணக்கம் உதவி செய்யக் கூடியது.
புவனேஸ்வரி,
ராஜ ராஜேஸ்வரி, அகிலாண்டேஸ்வரி, கற்பகாம்பாள், மீனாட்சி, காமாட்சி,
விசாலாட்சி எல்லாமே சக்தியின் பிம்பங்களாக இருப்பதால், சக்தி உபாசனை பலன்
தரும்.
ஆண் தெய்வங்களில் அவரவர் விருப்பப்படி சிவ தத்துவத்தையோ, விஷ்ணு தத்துவத்தையோ ஏற்றுக் கொள்ளலாம்.
இரவில் படுக்கப் போகும் போது தூங்குவதற்கு முன் கடைசியாகச் சொல்லும் வார்த்தை, தெய்வத்தின் பெயராக இருக்க வேண்டும்.
அதன் பிறகும் யாருடனாவது பேச வேண்டி வந்தால் மீண்டும் தெய்வத்தின் பெயரைச் சொல்லி விட்டுத் தூங்க வேண்டும்.
சின்னப்பாத் தேவர் யாரைக் கண்டாலும், `வணக்கம் முருகா’ என்பார்.
எம்.ஜி.ஆர். யாரைக் கண்டாலும், `வணக்கம் ஆண்டவனே’ என்பார்.
ஐயப்ப பக்தர்கள், `சாமி சரணம்’ என்பார்கள்.
தெய்வத்தை நாம் நடு வீட்டில் நிற்க வைத்தால், அது உள் வீட்டிலேயே வந்து உட்கார்ந்து கொள்ளும்.
நன்றி கெட்டவன் மனிதன்; நன்றியுள்ளது தெய்வம்.