Monday, July 16, 2012

சாதுக்களோடு பழகினால்…


நல்லவர்களின், மகான்களின் சகவாசம் வைத்திருந்தால், நமக்கும் நல்லவர்களின் புத்தி ஏற்படும். அதனால் தான், “மகான்களை அண்டி இரு…’ என்றனர். மகான்களை தரிசித்தாலும், அவர்கள் இருந்த இடத்தில் இருந்தாலும், அந்த மகான்களின் குணங்கள் நமக்கும் ஏற்படும். கெட்டவர்களோடு சேர்ந்திருந்தால் கெட்ட புத்தி தான் ஏற்படும்.
காட்டு வழியே போய் கொண்டிருந் தான் ஒருவன். அவனை துரத்தியது ஒரு புலி. பயந்து ஓடி ஒரு மேடையை அடைந்தான். புலியும் அவனை துரத்தியபடி அந்த மேடைக்கு வந்தது. ஆனால், ஒன்றும் செய்யாமல், சாதுவாக அங்கே படுத்துக் கொண்டது. இவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.
மேடையில் இருந்து கீழே இறங்கி வந்தான். புலியும் அவன் கூடவே இறங்கி, அவனைத் துரத்த ஆரம்பித்தது. மீண்டும் அந்த மேடையில் ஏறினான். புலி அவனைப் பின் தொடர்ந்து வந்து மேடையில் ஏறியது. ஆனால், அவனை ஒன்றும் செய்யாமல், சாதுவாக மேடையில் படுத்துக் கொண்டது.
இவனுக்கு ஆச்சரியமாக இருந்தது… “இந்த புலி கீழே இறங்கினால் நம்மைத் துரத்துகிறது; மேடைக்கு வந்ததும் சாதுவாக இருக்கிறதே… அப்படியானால், இந்த மேடையில் ஏதோ விசேஷம் இருக்க வேண்டும்…’ என்று எண்ணி, மேடை மீதிருந்த செடி, கொடிகளையும், கல், குப்பைகளையும் அகற்றிப் பார்த்தான். அந்தப் புதரை விலக்கி பார்த்தபோது, அங்கே ஒரு மகானின் சமாதி இருப்பதை கண்டான்…
“ஓஹோ… இந்த சாதுவின் சமாதிக்கு அருகில் வரும் போது, புலியும் சாதுவாகி விடுகிறது. சமாதியை விட்டு கீழே இறங்கினால், மீண்டும் துரத்துகிறது. சாதுக்களின் சமாதி அருகில் வரும்போதே, சாதுவான புத்தி வந்து விடுகிறது. அப்படியானால் சாதுக்களோடு சேர்ந்திருந்தால் எந்த ஆபத்தும் வராது…’ என்று எண்ணி, அந்த மேடையிலேயே உட்கார்ந்திருந்தான்.
புலி கொஞ்ச நேரம் சாதுவாக அங்கே உட்கார்ந்து விட்டு, கீழே இறங்கி இரை தேடப் போய் விட்டது.
“ஆஹா… இந்த சமாதிக்கு அருகில் நாம் இருந்ததால், புலியிடமிருந்து தப்பினோம். சாதுக்களின் சகவாசம் இருந்தால் எவ்வளவு நல்லது என்பது இப்போது புரிகிறது…’ என்று நினைத்தான். அன்று முதல் சாதுக்களை தேடிப் போய், அவர்களது பக்கத்தி லேயே இருக்கலானான்; சவுக்கியமாகவும் இருந்தான்.
அதனால், நாம் எப்போதும் சாதுக்களின் சங்கமத்தையே விரும்ப வேண்டும்; அவர்களுடனே பழக வேண்டும். கெட்ட சகவாசம் பிராண சங்கடம் என்பர். நல்ல சகவாசத்தை நாம் தேடிக் கொள்ள வேண்டும்.

ஞானத்தைத் தேடி… மவுனம்-கவியரசு கண்ணதாசன்


காற்றுக்கு இலைகள் அசைகின்றன; மலர்கள் அசைகின்றன; கொடிகள் அசைகின்றன; மரங்கள் கூட அசைகின்றன; ஆனால் மலைகள் அசைவதில்லை!
அசைவது பலவீனத்தைக் காட்டுகிறது; அசையாதது உறுதியைக் காட்டுகிறது.
சளசளவென்று பேசுகிறவன், எவ்வளவு பெரிய கெட்டிக்காரனாக இருந்தாலும், சொற்பொழிவாளனாக இருந்தாலும், தன் பலவீனத்தைக் காட்டிக் கொள்கிறான்.
மவுனி முட்டாளாக இருந்தாலும் பலசாலியாகக் காணப்படுகிறான்.
`சும்மா இருப்பதே சுகம்’ என்றார்கள்.
பேசாமல் இருப்பது பெரும் திறமை. பேசும் திறமையைவிட அது மிகப் பெரியது. அதனால் தான் ஞானிகளும் பெரிய மேதைகளும் குறிப்பிட்ட சில காலங்களில் மவுன விரதம் அனுஷ்டிக்கிறார்கள்.
ஒன்றைச் சொல்ல வேண்டும் என்று விரும்பி, அதைச் சுருக்கமாகத் தெளிவுபடுத்துகிறவன் பெரிய மரியாதையைப் பெற்று விடுகிறான்.
சிறிய விஷயத்தைக்கூட வளைத்து வளைத்துப் பேசுகிறவன், கேலிக்கு ஆளாகிறான்.
பயனில்லாத சொற்களைப் பாராட்டுகிறவனை, `மக்கட்பதடி’ என்றான் வள்ளுவன்.
`சுருங்கக் கூறி விளங்க வைத்தல்’ என்பார்கள்.
ஞானிகள் சில விஷயங்களைக் கூறுகிறார்கள். அவை பொன் மொழிகளாகி விடுகின்றன.
பைத்தியக்காரர்கள் பதினாயிரம் பேசுகிறார்கள். அவை சீந்துவாரில்லாமல் போகின்றன.
மவுனம் ஒரு மகத்தான ஞானம். அது தெய்விகக் கலை.
ஒரு குடும்பம். கணவன்-மனைவி இருவர். கணவனுக்கு மனைவியிடம் கோபம், ஆனால் அதை வெளியில் சொல்லவில்லை. மனைவியிடம் பேசாமலேயே இருக் கிறான். அவன் அவளைத் திட்டி இருந்தால், அது சாதாரணமாகவே போயிருக்கும். அவன் பேசாமல் இருப்பதே அவளைச் சித்திரவதை செய்கிறது.
`அவன் பேச மாட்டானா, பேச மாட்டானா?’ என்று எதிர்பார்க்கிறாள். `இரவில் நிச்சயமாகப் பேசுவான்’ என்று நம்புகிறாள்; தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுக்கிறாள்.
`நான் என்ன தப்புப் பண்ணினேன்?’ என்று மெதுவாகக் கேட்கிறாள்.
நள்ளிரவில் பக்கத்தில் வந்து உட்காருகிறாள். காலைப்பிடித்து விடுகிறாள். அவன் மவுனம் கலையவில்லை.
அவன் மவுனம் தொடரத் தொடர, அவள் தாகம் அதிகரிக்கிறது.
திடீரென்று ஒரு வார்த்தை அவன் பேசி விட்டான். அவளுக்குத் தெய்வமே கண் திறந்தது போன்று தோன்றுகிறது.
`இன்றைக்கு நானும் அவரும் பேசிக் கொண்டிருந்தோம்!’ என்று ஊர் முழுக்கச் சொல்லிக் கொண்டு வந்து விடுகிறாள்.
பத்து வார்த்தை திட்டி, நாலு உதை உதைப்பதைவிட, அந்த மவுனம் மகத்தான சக்தியைப் பெற்றுவிடுகிறது.
கோயிலில் இருக்கின்ற சிலை, வருகின்ற பக்தனிடமெல்லாம் பேசத் தொடங்குமானால், பக்தனுக்கே அலுப்புத் தட்டிவிடும்.
`கோயிலுக்குப் போனால் அந்தச் சாமி நம்மை விடாதய்யா! உயிரை வாங்கிவிடும்!’ என்று பேசத் தலைப்பட்டு விடுவான்.
அது மவுனமாக இருக்க இருக்க, பக்தன் தான் பேசுகிறான்; பாடுகிறான்; புலம்புகிறான்.
ஆரவாரங்கள் வெறும் மயக் கங்கள்.
அரசியல்வாதியின் கூச்சல், வேறு வேலை இல்லாதவனின் புலம்பல்.
தொண்டைத் தண்ணீரைக் காய வைப்பதில் என்ன லாபம்?
`இவர் கொஞ்சம் பேசமாட்டாரா?’ என்று உலகத்தை ஏங்க வைக்க வேண்டும்.
பேசத் தொடங்கினால் உலகம் கூர்ந்து கேட்க வேண்டும்.
கடலில் ஆழமான பகுதியில் அலை இருக்காது.
வெறும் பொட்டல் வெளியில் வீடு கட்டிப் பாருங்கள்; பயங்கரக் காற்றடிக்கும்.
வெண்மேகம் போகின்ற வேகத்தைவிட, கார்மேகத்தின் வேகம் குறைவு.
நாய் ஓடுவதைவிட, யானை நடப்பதில் வேகம் அதிகம்.
சலனமற்ற மவுனம், பல அர்த்தங்கள் கொண்டது.
பிரஞ்சு மொழியில் ஒரு வார்த்தைக்கு ஒரே அர்த்தம் உண்டு. ஆங்கில வார்த்தைக்கு இரண்டு அர்த்தங்கள் வரும். தமிழ் வார்த்தையில் நாலைந்து அர்த்தங்கள் வரும். ஆனால், மவுனத்தில் எல்லையற்ற அர்த்தங்கள் உண்டு.
பேசாமல் இருப்பவனே, பெரிய விஷயத்தைச் சொல்பவன்.
பேசிக்கொண்டிருப்பவன் ஞானக் கிறுக்கன்.
ஏராளமான வரிகளைக் கொண்ட இலக்கியங்களைவிட, ஏழு வார்த்தைகளில் அடங்கிவிட்ட திருக்குறள், உலகத்தைக் கவர்ந்து விட்டது. காலங்கள் தோறும் துணைக்கு வருகிறது. நிலையான தத்துவத்தைச் சொல்கிறது.
எனது நண்பர் ஒருவர் வாரத்தில் ஒரு நாள் மவுன விரதம்; ஒரு நாள் உண்ணாவிரதம். வயது அறுபதைத் தாண்டுகிறது; ஒரு மாத்திரை கூட அவர் போட்டுக் கொண்டதில்லை.
ஆரோக்கியத்திற்கும் மவுனம் மிக அவசியம்.
தவம் புரிகின்றவன் `ஓம் நமசிவாய’ என்ற வார்த்தையைக் கூடச் சொல்வதில்லை.
மவுனமாக இருப்பவனுக்கு ஆகாரம் குறைவாக இருந்தால் கூடப் போதும்.
அதிகம் பேசுவதால் அடி வயிறு சூடாகிறது. தீனி அதிகம் கேட்கிறது. அதன் மூலம் உடம்பு பெருத்து விடுகிறது.
வாரியார் சுவாமிகள் சாதாரணமான நேரங்களில் பேசுவது குறைவு. சொற்பொழிவுகளிலும் அலட்டிக் கொள்ளாமல் பேசுவார். அந்த இரண்டு மணி நேரத்தைத் தவிர, மற்ற நேரங்களில் இரண்டொரு வார்த்தைகள் தான் பேசுவார். அதனால், ஒருவேளைச் சாப்பாடே அவருக்குப் போதுமானதாக இருக்கிறது. குரல் கணீர் என்று கம்பீரமாக ஒலிக்கிறது. நோயற்ற வாழ்வுக்கு அவர் இலக்கணமாகிறார்.
காஞ்சிப் பெரியவர்கள் பேசுவது குறைவு; அதனால் உண்பதும் குறைவு. இந்த வயதிலும் எங்கேயும் நடந்து செல்ல அவரால் முடிகிறது.
சில மனிதர்கள் ஆளைப் பிடித்தால் விடமாட்டார்கள்; அறுத்து எடுத்து விடுவார்கள்.
சிலர் ஒலிபெருக்கியைப் பிடித்தால் விடமாட்டார்கள்.
குடிப்பவர்கள் ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லுவார்கள்.
மதுவையும், மங்கையையும் கூட மவுனமாக ரசிப்பதில் உள்ள சுகம், சளசளவென்று பேசுவதில் இல்லை.
நிறையப் பேசுகிறவன், தன் வார்த்தைகளாலேயே காட்டிக் கொடுக்கப்படுகிறான். அவனைக் கண்டாலே பலரும் ஓட ஆரம்பிக்கிறார்கள்.
இப்படிப்பட்ட அறுவைகளிடம் இருந்து தப்புவதற்காகவே சித்தர் களும், முக்தர்களும் மலையிலே தங்கிக் கொண்டார்கள்.
காதலில் கூட ஜாடையில் இருக்கின்ற சுகம், வாய் மொழியில் இல்லை.
மனிதர்களைவிட, பல மிருகங்களுக்கு அதிக வயது.
அவற்றை விட மரங்களுக்கு அதிக வயது.
அவற்றை விட மலைகளுக்கு அதிக வயது.
காரணம், அவை பேசாமலும், அதிர்ச்சி அடையாமலும் இருப்பதே.
மவுனத்தின் சக்தியை உணர்ந்துதான் இந்துக்கள் தவம் புரிந்தார்கள்; நிஷ்டையில் அமர்ந்தார்கள்; மவுன விரதம் மேற்கொண்டார்கள்.
நீண்ட நாள் பேசாமல் இருப்பது என்பது, ஒருவகை நிர்விகல்ப சமாதி; அதை மேற்கொண்டவன் ஞானத்தைத் தேடினால் அது கிடைக்கும்.

கேரள மாந்திரீக முறைகள்



           கேரள மாநிலம் ஆன்மீகத்திற்கு என்று பேர் போன்ற இடமாகும். அவர்கள் தங்கள் வாழ்க்கை நெறியை ஆன்மீகத்தோடு ஒன்றிணைத்து வாழ்பவர்கள். ஒரு காலத்தில் கேரள ஆன்மீகமும், மாந்திரீகமும் பின்னிக் கிடப்பதை நாம் காண முடியும், இந்தியாவிலேயே அதிக கல்வி கற்ற மாநிலம் என்றாலும் மாந்திரீகத்தில் நாட்டம் அதிகம் உள்ளனர். அவர்கள் ஆன்மீகத்தையும், மாந்திரீகத்தையும் மனித அறிவுக்கு அப்பாற்பட்டது என்று எண்ணி அமானுட வழக்கங்களையும்,  அமானுட நம்பிக்கைகளையும் மேற்கொள்கின்றனர். இந்த மாந்திரீக தாக்கம் அவர்களிடம் அதிகமாகவே உள்ளது. இந்த மாந்திரீகம் அன்றில் இருந்து இன்றுவரையில் அவர்கள் கலாச்சாரத்திலும், பாரம்பரியத்திலும் ஊறிகிடக்கிறது.
           அவர்கள் இந்த மாந்திரீக முறைகளை ஒரு தொழில் முறைக் கலையாகவே கருதுகின்றனர். கேரளாவில் 65 சதவிகித மக்கள் கடவுள் மற்றும் மாந்திரீகத்தில் நம்பிக்கை உள்ளவர்களாக இருக்கின்றனர். அவர்களிடம் கண்திர்ஷ்டி என்ற பார்வை மூலமாக பெறப்படும் தீய பலனை அவர்கள் நம்புகிறார்கள். அத்தகைய பார்வையினால் வரும் கண்திர்ஷ்டியை திசை திருப்ப பல இடங்களில் கொடும்பாவி பொம்மைகள் வைத்திருப்பதை கேரளாவில் பார்க்கமுடியும். மேலும் கேரள மக்களிடையே தீய மொழி கூறும் மக்களுக்கு மிகப் பயப்படுவார்கள். அதாவது சாபத்தையும், ஏக்கத்துடன் பேசும் பேச்சையும் அவர்கள் முழுவதும் நம்புகின்றனர். மாந்திரீக சடங்குகள் அங்கு உள்ள கோயில்களில் சர்வ சாதாரணமாக பார்க்கமுடியும். மேலும் அவர்கள் இத்தகைய எதிர்மறையான சக்திகளில் இருந்து விலகுவதற்கு தீ மிதித்தல், உடலில் ஊசியால் துளை இடுதல், தூக்கு மரத்தில் தொங்குதல் போன்ற காரியங்களில் ஈடுபடுவர்.

     குட்டிச் சாத்தான் என்ற தெய்வத்தை அவர்கள் மாந்திரீகத்திற்கு முழுவதும் நம்புகின்றனர். குட்டி என்றால் சிறிய, சாத்தான் என்றால் குழந்தை என்று அர்த்தம். குட்டிச் சாத்தான் சிவனின் மைந்தன் என்றும் அழைக்கின்றனர். குட்டிச் சாத்தான் தீய ஆவிகளை செயல்படாதபடி காக்கும் தன்மை வாய்ந்தது என்று கருதுகின்றனர். மாந்திரீகத்திற்கு கேரள மாநிலம் பேர் பெற்ற மாநிலம் என்று கருதுகின்றனர். இவர்களும் மஞ்சள்பாவை, மாப்பாவை, போன்றவைகள் செய்து அதன் மூலமாக பூஜைகள் நடத்தி தங்கள் அபிலாசைகளை நிறைவேற்ற முடியும் என்று எண்ணுகின்றனர். வேறு சிலர் குட்டிச்சாத்தான் உயர்ந்த ஜாதி என்று கூறப்படும் நம்பூதிரிக்கும் குறைந்த ஜாதி பெண்ணுக்கும் ஏற்பட்ட கள்ள உறவால் பிறந்த குழந்தையே  குட்டிச்சாத்தான் என்று கூறுகின்றனர். மேலும் சிலர் குட்டிச்சாத்தான் சிவனுக்கும் தாழ்வான குலம் சார்ந்த ஒரு பெண்ணுக்கும் பிறந்த குழந்தைதான் குட்டிச்சாத்தான் என்ற கதையும் உண்டு. குட்டிச்சாத்தானுக்கு எருமையே வாகனம். நான் ஒரு குட்டிச்சாத்தானின் சிலையை பார்க்க நேர்ந்தது. அந்த குட்டிச்சாத்தான் விகார உருவத்துடன் வவ்வாலில் பறந்து வருவதுபோல் உருவாக்கப்பட்டிருந்தது. கேரளாவில் இந்த குட்டிச்சாத்தான் பற்றி பல கதைகள் உருவாக்கப்பட்டுள்ளது.

     பொதுவாக கேரளாவிற்கு பலர் மாந்திரீகம் செய்பதற்காக செல்வதுண்டு. ஏன்? தமிழகத்தில் உள்ள அரசியல் வாதிகள் அங்கு சென்று ஏமாந்து வருவதும் உண்டு. அவர்கள் மாந்திரீகத்தை ஆரம்பிப்பதற்க்கு முன்னால் பூக்களாலோ, அல்லது பல வண்ணக் கோலப்பொடிகளாலோ, சக்கரங்கள் வரைவர். பின்னர் தன்னம்பிக்கையுடன் அழுத்தமாக மந்திரங்கள் சொல்வர். பின்பு மாந்திரீகத்திற்காக உபயோகப்படுத்தப்படும் பொருள்களை உபயோகிக்காது வெளியே வீசி விடுவர். கேரளா  மாந்திரீவாதிகளிடம் கூட நச்சுப் பொருள்களைக் கொடுத்து அவர்களை பல வழியில் செயல்படுத்தாமல் இருக்க வைப்பதே அதிகம் காண முடிகிறது. இத்தகைய வைப்பு முறைகள் மிகக் கொடுமையாகவும், ஈவு இரக்கமற்றதாக இருப்பதை காண முடிகிறது. அவர்களிடம் மந்திர தந்திர உபாசனையும் உண்டு.
           அவர்கள் மந்திரங்களை ஆறு விதமாக உபயோகிப்பதாக கூறுகிறார்கள். 
  1) சாந்தி:- ஒருவர் மாந்திரீகத்தின் மூலம் பாதிக்கப்பட்டவரை சரி செய்வதாகும். 
  2) தாக்குதல்:- ஒருவரை மந்திரக்கிரிகைகள் மூலம் செயல்படாமல் தாக்குவதாகும். 
  3) ஸ்தம்பிக்க வைத்தல்:- இவர்கள் மந்திரக்கிரிகைகள் மூலம் ஒருவரை செயல்படாமல் ஸ்தம்பிக்க வைப்பதாகும். 
   4) பிரித்தல்:- நேர்மையற்ற தொடர்புகளை பிரித்து கணவன் மனைவியை ஒன்று சேர்த்தல் ஆகும். 
  5) வெளியேற்றுதல்:-  ஒருவருக்கு மந்திரக்கிரிகைகள் மூலம் ஒரு வீட்டில் இருந்தோ ஊரில் இருந்தோ  வெளியேற்றுவதாகும்.  
  6) அழித்தல்:- ஒருவரை பொருளாதார உயர்வில் இருந்தோ, தார்மீக உயர்வில் இருந்தோ அளிப்பதாகும். 
  அவர்கள் மாந்திரீகத்தால் பாதிக்கப்பட்டவர்களை பலவாறு அறிந்து கொள்ள குறியீடுகள் வைத்துள்ளனர்.
   1) சோர்ந்த குழிவிழுந்த கண்கள், 
   2) உடலில் நல்லமணம் அல்லது நாற்றம் ஏற்படுதல், 
   3) பாதிகப்பட்டவரைக் கண்டு பசுமாடு மிரளுதல், 
   4) வாயில் இருந்தும், பிறப்பு உறுப்புகளிலும் அழுகிய  
      நாற்றம் ஏற்படுத்துதல் 
   5) மனரீதியில் பாதிப்பு அடைதல், 
  6) உடல் ரீதியில் மருத்துவதாலும் சரி செய்ய முடியாத துன்பங்கள் போன்ற பல அளவீடுகள் வைத்துள்ளனர். 
  இப்பொழுது கூட பல வெளி நாட்டினர் அங்கு சென்று மாந்திரீக காரியங்களுக்காக பணம் செலவு செய்து ஏமாறுபவர்களை  பார்த்துள்ளேன். ஆகவே இவ்வாறு ஏமாற வேண்டாம் என்று கூறுகின்றேன். 

#கர்மவினையைவெல்ல.....தொடர்சி..3

# கர்மவினையைவெல்ல .....தொடர்சி..3 # காலபுருஷதத்துவமும்  கர்மாவும் : கால புருஷ தத்துவப்படி 12 இராசிகளும் தர்ம, கர்ம, காம மற்றும் மோட்ச ...